கி.வீரமணி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர், தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து தொடங்குகிறது. ‘தாய்க்கழகம்’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து தி.மு.க.வைத் தொடங்கிய அண்ணா, 1967ல் ஆட்சி அமைத்தவுடன் ‘இந்த ஆட்சியே பெரியாருக்கு காணிக்கை’ என்றார். அதன்பிறகு அரசியல், சமுதாயத்துறையில் திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக இணைந்து பயணிக்கின்றன. இரண்டு அமைப்புகளுக்கும் இடையிலான உறவு குறித்து உரையாட திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ஆசிரியர் குழுவின் சார்பில் சந்தித்தோம்.

1967ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தந்தை பெரியாரை, அண்ணா சந்தித்தார். அப்போது என்ன நடந்தது?
“தேர்தல் முடிவு வந்தவுடன், பெரியார் அறிக்கை ஒன்றை எழுதினார். அப்போது, அமைச்சரவைகூட முடிவாகியிருக்கவில்லை. “எனக்கு இது முக்கியமான தோல்வி, நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் இது முதல் தடவை அல்ல. மூன்றாவது முறை நான் தோற்றிருக்கிறேன். இந்தத் தோல்வியை வெற்றியாக்கிக்கொள்வது எப்படி என்பதும் எனக்குத் தெரியும். இதையும் சில ஆண்டுகளில் வெற்றியாக மாற்றிக்கொள்ள முடியும். இப்போதைக்கு யாரும் அவசரப்பட வேண்டாம்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், திடீரென்று ஒருநாள் இரவு 10 மணிக்கு எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, நான் அடையாறு இல்லத்தில் இருந்தேன். அப்போதெல்லாம் அழைப்பு பதிவுசெய்துதான் பேச வேண்டும். அதனால், இந்த நேரத்தில் யார் அழைக்கிறார்கள் என குழப்பத்தோடு எடுத்தேன். எதிர்முனையில் இருந்து மணியம்மையார் பேசினார். ‘ம்ம்ம்.. ம்ம்ம்.. அவர்கிட்ட சொல்லு அம்மா’ என்று பெரியார் பின்னால் இருந்து பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. “அண்ணாதுரை, கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பில் எல்லோரும் வந்து அய்யாவ பார்த்து பேசிவிட்டுப் போறாங்க” என்றார் மணியம்மையார்.
எனக்கு ஏதோ வெடிகுண்டு விழுந்தது போல அதிர்ச்சி. அதுவும் இன்ப அதிர்ச்சி. நடக்காத ஒன்று நடந்துவிட்டதைப் போல இருந்தது. பேச்சே வரவில்லை. “என்ன காதில் விழுகிறதா?” என்று மணியம்மையார் கேட்டார். “கேட்கிறது அம்மா, மகிழ்ச்சி, எவ்வளவு நேரம் இருந்தார்கள்?” என நான் கேட்டேன். ‘பத்து நிமிடம் இருந்தார்கள்’ என்றார். அன்று இரவெல்லாம் எனக்குச் சரியாகத் தூக்கம்கூட வரவில்லை. அந்தச் சந்திப்பு குறித்துதான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஏனெனில், அந்தக் காலச்சூழலில் தி.மு.க.காரர்களும் தி.க.காரர்களும் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளக்கூட மாட்டார்கள்.
தேர்தல் களத்தில் தி.மு.க.வை நாங்கள் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தோம். பெரியார் பேசும் கூட்டங்களில் நான் முதலில் பேசுவேன். ‘ஆட்சிக்கு வந்தால் ஆச்சாரியார் சொல்படி நடப்போம்’ என்று அண்ணா பேசியதாகத் தினத்தந்தியில் செய்தி வந்தது. அதை, ‘கத்தரித்து எடுத்து வை’ என்று அப்போது பெரியார் கூறினார். கூட்டங்களிலும் கடுமையாக அண்ணாவையும், தி.மு.க.வையும் தாக்கிப் பேசுவோம். அப்படி இருக்கையில், ஆட்சி அமைந்தவுடன் பெரியாரை வந்து அண்ணா சந்தித்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
பெரியார், அப்போது அப்படியே அமைதியாகத்தான் இருந்தார். மறுநாள், மிக அற்புதமான அறிக்கை ஒன்றை எழுதினார். “திடீரென்று என்ன தோசையைத் திருப்பி போட்டுவிட்டார் என்று சொல்வார்கள். ஆனால், எனக்கு அவர்களைப் பார்த்தவுடனே ஒரு ஈர்ப்பு வந்தது. நிச்சயமாக இவர்கள் எவ்வளவு கீழிறக்கத்துக்குச் சென்றாலும், பக்தவத்சலத்தின் ஆட்சியைவிட இவர்கள் கீழே செல்ல மாட்டார்கள். ஆகவே, இவர்களைப் பார்த்தவுடன் ஆதரிக்க வேண்டுமென்று தோன்றுகிறது” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
அதுவரை விடுதலையில் தி.மு.க.வைக் குறிப்பிடும்போது, ‘கண்ணீர்த் துளிகள்’ அல்லது அதனைச் சுருக்கி ‘க.து.க்கள்’ என்றுதான் எழுதுவோம். அதனால் மணியம்மையாரிடம் தொலைபேசியில் பேசும்போதே, ‘ஒரேயொரு சந்தேகம்’ என்று கேட்டேன். “அய்யாவிடமே கேளுங்கள்” என்றார் மணியம்மையார். “என்ன சொல்றாரு.. என்ன” என்று கேட்டார் பெரியார். “நாளை விடுதலையில் செய்தி எவ்வாறு போடுவது” எனக் கேட்டேன். “எல்லோரும் வந்தார்கள், சந்தித்தார்கள் என போடுங்க? என்றார். “இல்லைங்க அய்யா, நாளையில் இருந்து கட்சியின் பெயரை க.து.க்கள் என்று போடுவதா அல்லது தி.மு.க. என்று போடுவதா?” என்று கேட்டேன். “தி.மு.க. என்றே போடுங்க” என்றார் பெரியார். ஒரே நாளில், ‘கண்ணீர்த் துளிகள்’ மறைந்து, விடுதலையில் ‘தி.மு.க.’ என மாறிவிட்டது.”
ராஜாஜியோடு கூட்டணி அமைத்து, தி.மு.க. வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தலுக்குப் பின் காட்சிகள் அப்படியே மாறிவிட்டன. அதில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் என்று ஏதாவது உள்ளதா?
“தி.மு.க. வெற்றிபெற்றவுடன், கடற்கரையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பெரிய அளவில் நடைபெற்ற அந்த வெற்றி விழா கூட்டத்தில் அண்ணாவும் ராஜாஜியும் பேசுவதாக இருந்தது. பார்ப்பன பத்திரிகையாளர்கள் பலரும் கூடியிருந்தனர்.
அந்தக் கடற்கரைக் கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் தோழர்கள் இருவரை அனுப்பிவைத்து, என்ன நடக்கிறது, என்ன பேசுகிறார்கள் என்ற முழு விவரத்தையும் சேகரித்து வர அனுப்பியிருந்தோம். அங்கு ஒரு வித்தியாசமான நிகழ்வு நடந்தது. அது என்ன என்றால், “முதலில் நீங்க பேசுங்க” என்று ராஜாஜி அண்ணாவிடம் கூறினார். ஆனால், அண்ணாவோ, “இல்லை… இல்லை. நீங்கள் பேசுங்கள், நான் கடைசியில் பேசுகிறேன்” என்று மறுத்துவிட்டார். இதை ராஜாஜி எதிர்பார்க்கவில்லை.
ராஜாஜி பேசும்போது, “நான் என்ன சொன்னாலும் தி.மு.க.வினர் கேட்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. சற்று நேரத்திற்கு முன்னால் நான் அவரை எனக்கு முன்பே பேசச் சொன்னேன். இல்லை, இல்லை நீங்கள் முதலில் பேசுங்கள், நான் பிறகு பேசுகிறேன்” என்று அண்ணாதுரை கூறிவிட்டார். இங்கேயே என் பேச்சைக் கேட்காதவர், இனிமேல் என் பேச்சைக் கேட்பார் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறினார். இதை ‘விடுதலை’யில் அப்படியே வெளியிட்டோம்.
அதன்பிறகு, நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் நான் பேசும்போதெல்லாம், “இதுவரை வரலாற்றில் ஆரியம்தான் நம்மை ஏமாற்றிவந்துள்ளது. ஆனால், ஆரியத்தையே ஏமாற்றிய பெருமை ஒரே ஒருவருக்குத்தான் உண்டு. அய்யாவிடம் பாடம் கற்ற அண்ணாவுக்குத்தான் அந்தப் பெருமை உண்டு” என்று குறிப்பிடுவேன்.
1967-க்குப் பிறகு பெரியாரும் அண்ணாவும் ஒன்றாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள்.
“திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை, 1967 பெரியார் பிறந்தநாளின்போது வைக்கப்பட்டதுதான். அந்த சிலையைத் திறந்துவைக்க அண்ணாவை நான் அழைத்தேன். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால், குழுவில் ஒரு சிக்கல் எழுந்தது. அந்தச் சிலை அமைப்பதற்காக நகர மக்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் எல்லா கட்சிக்காரர்களும் இருந்தார்கள். காமராசரை வைத்து சிலை திறப்பதுதான் அவர்களின் திட்டம். அதற்காக முன்பே காமராசரைச் சந்தித்து அனுமதியும் பெற்றிருந்தார்கள். இதற்கிடையில் அண்ணா ஆட்சிக்கு வந்துவிட்டார். அதனால் எழுந்த சிக்கல் இது.

எனவே, ‘ஏற்கெனவே சொன்னபடி காமராசரே சிலையைத் திறக்கட்டும், அண்ணாவை நிகழ்ச்சிக்கு அழைக்கலாம்’ என்று தோழர்கள் கூறினர். அதனால் என்ன செய்யலாம் என யோசித்து, காலையில் அண்ணாவை அழைத்து பிறந்தநாள் விழா, மாலையில் காமராசரை அழைத்து, சிலை திறப்புவிழா என நிகழ்ச்சியை இரண்டாகப் பிரித்தோம். சொன்னவுடனே அண்ணா ஏற்றுக்கொண்டு, வருவதாகக் கூறிவிட்டார்.
முதல் நாள் எங்களுக்கு மற்றொரு யோசனை வந்தது. அய்யாவையும் அண்ணாவையும் ஊர்வலமாக அழைத்துவந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதினோம். இருவரிடமும் கேட்டு சம்மதம் பெற்று, சிறப்பாக ஊர்வலத்தை நடத்தினோம்.
திருச்சி மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு அமைக்க வேண்டுமென்று காங்கிரஸ் ஆட்சியிலேயே கேட்டிருந்தார்கள். அதற்கு பெரியாரிடமும் நிதி உதவி கேட்டார்கள். பெரியாரும் ஒரு லட்சம் ரூபாய் வழங்க சம்மதித்து, காசோலை தயார் செய்தார். ஆனால், அந்த நேரத்தில்தான் தேர்தல் வந்தது, அண்ணா வெற்றிபெற்று ஆட்சியமைத்தார். சாதிக் பாட்சா சுகாதாரத் துறை அமைச்சராக அப்போது பொறுப்பேற்றிருந்தார். அண்ணாவிடம் அந்தக் காசோலையைத் தந்துவிடுமாறு என்னை அனுப்பிவைத்தார், பெரியார்.
நுங்கம்பாக்கத்தில் இருந்த அண்ணாவின் வீட்டிற்கு நேரடியாகச் சென்றேன். அதுவரை கடுமையாகப் பேசியிருந்ததால், அங்குச் செல்வதற்கே உள்ளுக்குள் ஏதோ மாதிரி இருந்தது. கே.ஆர். இராமசாமி,சி.வி.இராஜகோபால் போன்றோர் அண்ணாவுடன் எப்போதும் இருப்பார்கள். நான் அங்கு சென்றவுடன் அண்ணாவிடம் தகவல் தெரிவித்தனர். “என்னப்பா வா.. வா.. என்ன” என்று கேட்டார் அண்ணா. “அய்யா காசோலை கொடுத்திருக்கிறார், கொடுக்க வந்திருக்கிறேன்” என்றேன். உடனே சாதிக் பாட்சாவை அழைத்து, தகவலைச் சொல்லி, அந்தக் காசோலையை ஒப்படைத்தார். “அய்யாவிடம்தான் நிறைய பணம் இருப்பதாகச் சொல்கிறார்களே, ஏன் இன்னும் அதிகமாகத் தரலாமே! ஒரு லட்சம் ரூபாய்தான் தந்திருக்கிறார்?” என அவர் கேட்டார்.
உடனே அதற்கு பதிலளித்த அண்ணா, “உங்களுக்கு அய்யாவைப் பற்றி தெரியாது. அய்யா யாருக்காவது ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறாரா? அவர் கொடுக்கும் ஒரு லட்சம் ரூபாய் பல கோடி ரூபாய்க்குச் சமம். எங்களுக்குத்தான் அது தெரியும்” என்றார். அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை வைக்கக் கூடாது என்ற அரசாணை, ஸ்ரீ ஒழிந்தது, திரு மலர்ந்தது’ என ஆட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பாராட்டினார், பெரியார். அதன்பிறகு மனப்போக்குகள் மாறி, இரு பக்கமும் தொண்டர்கள் அனைவரும் இயல்பாகினர்.
கிருஷ்ணகிரியில் நாகரசம்பட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில், பெரியார் ராமசாமி கல்வி நிலையம் என்ற கட்டடம் கட்டித்தரப்பட்டது. இன்னொரு கட்டடத்தை ஊர் மக்கள் சேர்ந்து கட்டினார்கள். அந்தக் கட்டடத் திறப்பு விழாவுக்கு அண்ணாவை அழைத்தனர். அந்த நிகழ்ச்சியில் அண்ணா பேசியது மிக முக்கியமான உரை. விடுதலை ஆசிரியர் என்று அதற்கு முன்புவரை குருசாமி பெயர்தான் நிகழ்ச்சிகளில் குறிப்பிடப்படும். இந்த நிகழ்ச்சியில்தான் விடுதலை ஆசிரியர் என என்னை விளம்பரப்படுத்தி, என்னுடைய தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
க.இராசாராம் அப்போது, அந்தத் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். “அய்யாவும் அண்ணாவும் ஒன்றாக வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் இந்தக் காட்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது” என்று அவர் பேசினார். அடுத்து அண்ணா பேசும்போது, “அய்யாவும் நானும் என்றைக்குப் பிரிந்தோம்? நாங்கள் பிரிந்ததே இல்லை. நீங்கள்தான் அப்படிக் கருதிக் கொண்டிருக்கிறீர்கள். என் உள்ளத்தில் அவர் இருப்பார். அவர் உள்ளத்தில் என்றும் நான் இருப்பேன். அதனால் திரும்பத் திரும்ப இருவரும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டார்கள் என்று பேசிக்கொண்டிருக்காதீர்கள்” என்றார்.
அண்ணா தனது உரையை முடிக்கும்போது, “இந்த ஆட்சி நமக்கு இப்போது கிடைத்திருக்கிறது. ஆனால், இந்த ஆட்சி, அய்யா நினைக்கும் அளவுக்கு காரியங்கள் செய்யக்கூடிய அளவுக்கு விரிவான அதிகாரங்கள் உடையதா என்றால் இல்லை. அதிகாரங்கள் எல்லாம் வேறு இடத்தில் குவிந்துகிடக்கிறது. இங்கு வந்து பார்க்கிறபோதுதான் அவை புரிகிறது. எனவே, அய்யாவுக்கு ஒரு வேண்டுகோள். இவ்வளவு அதிகாரக் குறைவான இடத்தில் இருந்துகொண்டு நான் பணி செய்யவா, அல்லது பழைய மாதிரி உங்கள் பின்னால் வந்து பணி செய்யவா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். நீங்கள் சொல்வதை செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று பெரியாரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்குப் பதிலளித்த பெரியார், “இந்த ஆட்சிக்கு அதிகாரம் குறைவாக உள்ளது என்பது எனக்குத் தெரியும். ஆனால், இந்த இடத்திற்கு உங்களைத் தேர்ந்தெடுத்தது மக்கள். எது எப்படியிருந்தாலும் ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒரு நிமிடத்தைக்கூட நீங்கள் குறைக்கக் கூடாது. நீங்கள் அங்கே இருந்துகொண்டு உங்கள் வேலையைப் பாருங்கள். என்னுடைய வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார். அரசியலுக்கு தி.மு.க., சமூகப் பணிகளுக்கு தி.க. என இந்த இயக்கத்தின் பாதை தெளிவானது.
உங்களுக்கும் அண்ணாவுக்குமான உறவு பற்றிக் கூறுங்கள்…
“1942ல் அண்ணாவின் திராவிட நாடு வார இதழாக வரத் தொடங்கியது. திராவிட நாடு இதழுக்கு சந்தா செலுத்துங்கள், நிதி கொடுங்கள் என தொடர்ந்து பெரியார் கூறிக்கொண்டே இருந்தார். அப்படி 1943ல் கடலூரில் அண்ணாவின் திராவிட நாடு இதழுக்கு நிதி திரட்டித் தரும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக நான் மேடையேறிப் பேசினேன். 5 நிமிடங்கள் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது. அன்றைக்கு 112 ரூபாய் நிதி அண்ணாவிடம் கொடுக்கப்பட்டது.
1944ல் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டுக்கு முன்பாக, ஜூலை 29ஆம் தேதி, தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு, கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. பெரியார், அண்ணா எல்லோரும் கலந்துகொண்டார்கள். அந்த மாநாட்டில் என்னைப் பேசவைத்தார்கள். அப்போது நான் பேசியபோது, சிறுவன் இப்படிப் பேசுகிறானே என பலத்த கை தட்டல் கிடைத்தது.
அடுத்துப் பேசிய அண்ணா, “இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல பெரியாரின் பகுத்தறிவுப்பால்தான் என்று தெரிகிறது” என்று தனது உரையைத் தொடங்கினார்.
கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்ற உத்தரவுக்கு எதிராக 1950ல் திராவிட இயக்கம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது. அப்போது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தேன் நான். மாணவர்களாக இருந்த எங்களுக்கு தி.க., தி.மு.க. என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. ஒன்றாகத்தான் இருப்போம். போராட்டங்களை ஒருங்கிணைப்பது, எல்லாப் பகுதிகளுக்கும் கூட்டங்களில் பேசச்செல்வது என இருந்ததால், படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டேன்.
அப்போது, நான் கடலூரில் என் சகோதரர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது, எதேச்சையாக அண்ணாவைச் சந்தித்தேன். திருமண நிகழ்வு ஒன்றிற்காக அண்ணா அந்த வழியாக காரில் வந்தார். என்னைப் பார்த்தவர், காரில் ஏற்றிக்கொண்டார். “ஏன் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டாயாமே! காஞ்சிபுரத்திற்கு வந்துவிடப்பா, பச்சையப்பா கல்லூரியிலே சேர்த்துவிடுகிறேன்” என்றார். “ரொம்ப மகிழ்ச்சி அண்ணா, யோசிக்கிறேன்” என்று கூறினேன். ஆனால், நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்தான் ஏற்கெனவே படித்தேன் என்பதால், மீண்டும் அடுத்த ஆண்டு அங்கேயே சேர்ந்துவிட்டேன்.
அடுத்து, 1965ல் விடுதலை ஆசிரியர் குருசாமி அவர்களின் இறுதி ஊர்வலத்தில் அண்ணா, என்.வி.நடராசன் வந்துகொண்டிருந்தனர். அப்போது, “அண்ணா, ‘விடுதலை’ கலரில் வருகிறது பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அப்படியா, பார்த்தாயா என்.வி.என்., நமக்கெல்லாம் கொடுக்காத உரிமையை இவருக்கு அய்யா கொடுத்திருக்கிறார்… பரவாயில்லை மகிழ்ச்சி, மகிழ்ச்சி” என்றார்.
1967 தேர்தலில், பெரியார் காங்கிரஸை ஆதரித்திருந்தார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தி.மு.க.வை கடுமையாகத் தாக்கிப் பேசுவோம். அப்படி, கடலூர் மைதானத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், நான் தி.மு.க.வையும் அண்ணாவையும் கடுமையாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தேன். அந்த வழியாக அப்போது, அண்ணா சென்றிருக்கிறார். சத்தத்தைக் கேட்டவுடன், உடனடியாக ஓட்டுநரிடம் வண்டியை நிறுத்தச் சொல்லி, நான் பேசுவதைக் கேட்டுள்ளார். புள்ளிங்கோட்டை சண்முகம் என்பவர், அப்போது அண்ணாவின் ஓட்டுநர். என் பேச்சைக் கேட்டு, கடும் கோபத்தில் அண்ணா போகலாம் என்று சொல்லியுள்ளார். ஆனால் அண்ணாவோ, “இருப்பா… போகலாம்” என்று சில நிமிடங்கள் நின்று கேட்டுள்ளார்.
அதன்பிறகு, பெரியாரும் அண்ணாவும் இணைந்த பின்னர், பலமுறை சந்தித்திருக்கிறேன். எப்போதும் அளவில்லாத அன்பைப் பொழிந்திருக்கிறார். அண்ணா.
சுயமரியாதைத் திருமணச் சட்டம் எப்படி உருவானது? அதன் பின்னணி…
“தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களில், ஜீவானந்தம் மகள் திருமணம் திருச்சியில் நடைபெற்றது. எல்லாக் கட்சிக்காரர்களும் அந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டனர். அதில் உரையாற்றுகையில்தான் சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் தருவேன்’ என்று அண்ணா முதன்முதலில் கூறினார்.
அதன்பிறகு ஓரிரு மாதங்களில், உடல்நிலை சரி இல்லாமல் சென்னைப் பொது மருத்துவமனையில் பெரியார் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது பெரியாரைச் சந்திக்க வந்த அண்ணா, “சட்ட அமைச்சர் மாதவனை வந்து வீரமணியை சந்திக்கச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார். ஏன்,எதற்கு வரச்சொன்னார் என எனக்குத் தெரியாது. வழியனுப்பிவைக்கும்போது, “அய்யா இருக்கும்போதே சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேறிடனும்னு நினைக்குறேன்பா’ என்று கூறினார் அண்ணா. “அதெல்லாம் ஒன்றும் பயப்படாதீங்க அண்ணா. அய்யா திரும்ப வந்துவிடுவார்” என்று தைரியம் சொல்லி அனுப்பினேன்.
தலைமைச் செயலகத்தில் மாதவனைச் சந்தித்தவுடன், ஒரு பெரிய கவரை நீட்டினார். “இந்த ஆவணத்தை அய்யாவிடம் தந்து படிக்கச் சொல்லுங்கள். அய்யா என்ன சொல்கிறார் என அண்ணாவிடம் தகவல் சொல்லுங்கள்” என்று கூறி அனுப்பிவைத்தார்.
பெரியார் இதை, ஒரு வழக்கறிஞர், ஒரு நீதிபதி உட்பட மூன்று பேரிடம் கொடுத்து கருத்துக் கேட்டார். மூவருமே பெரியார் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். சட்டம் எந்தச் சிக்கலும் இல்லாமல், வழக்கு வந்தால்கூட செல்லுபடியாகும் வகையில், ஓட்டை இல்லாமல் உள்ளதா என்று பார்ப்பதற்காக மூவரிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். பின்னர், அண்ணாவிடம் கொடுக்கச்சொல்லி, என்னிடம் கொடுத்தனுப்பினார்.
நள்ளிரவில், நண்பரின் ஸ்கூட்டரில் அண்ணாவின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு, அந்தச் சட்ட மசோதா நகலை எடுத்துச்சென்றேன். ‘மணமக்கள் மாலை மற்றும் தாலி அணிய வேண்டும் என்று இதில் உள்ளது. மாலை அல்லது தாலி அணிந்து திருமணம் செய்துகொள்ளலாம் என்று மாற்ற வேண்டுமென பெரியார் கூறிய திருத்தத்தைக் கூறினேன். அதாவது, மசோதாவில் or என்பதற்கு பதிலாக and இருந்தது. “நான் எம்.ஏ, நீ எம்.ஏ, பிஎல், ஆனால், நம்மால் கண்டுபிடிக்க முடியாததைப் பெரியார் கண்டுபிடித்திருக்கிறார் பார்த்தாயா? அந்த இடத்தில் and போட்டிருந்தால் அடிப்படையே கோளாறாகி இருக்கும் என்று எண்ணி, அய்யா அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் பார்” என்று அண்ணா அப்போது கூறினார்.
அப்போது தலைமைச் செயலாளராக இருந்தவர், சொக்கலிங்கம் ஐ.ஏ.எஸ். மசோதா நிறைவேறும்போது, நான் விடுதலைக்குச் செய்தி சேகரிக்க சட்டமன்றத்திற்குச் சென்றேன். சட்டமன்ற நிகழ்வுகள் என் மூலமாகப் பெரியாருக்கு நேரடியாகச் செல்லும் என்று அண்ணாவுக்கு மகிழ்ச்சி. தீர்மானத்தை முன்மொழியும் முன்பாக, சொக்கலிங்கத்திடம் ஏதோ காதில் பேசினார் அண்ணா. பிறகு, சொக்கலிங்கத்திடம் அண்ணா என்ன பேசினார் என்று கேட்டேன்.”அய்யா சொன்ன திருத்தங்களை எல்லாம் சரிசெய்தாச்சா? நான் மசோதாவை முன்மொழியப் போகிறேன்” எனக் கேட்டார் என்றார். மசோதா நிறைவேறும் நொடியில்கூட பெரியார் சொன்னதையெல்லாம் சரிசெய்துவிட்டோமா என்று உறுதிப்படுத்திக்கொண்டு, அந்த சட்டத்தை நிறைவேற்றியவர் அண்ணா.
அண்ணாவின் இறுதி நாட்களில் பெரியாரின் மனநிலை எப்படி இருந்தது?
“அண்ணா சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு முன், சென்னைப் பொது மருத்துவமனையில் இருந்தபோது, நேரில் சென்ற பெரியார், சிகிச்சைக்குப் பணம் கொடுத்தார். குன்றக்குடி அடிகளார் உடன் இருந்தார். “கட்சி உள்ளது, அரசு உள்ளது பணம் வேண்டாம் அய்யா” எனக்கூறினார் அண்ணா. தேவைப்பட்டால் பெற்றுக்கொள்கிறோம் என்று கலைஞரும் கூறிவிட்டார். மருத்துவமனையில் இருந்து திரும்ப வந்த பின்பும் பெரியாருக்கு அண்ணாவின் நினைப்பாகவே இருந்தது.
“ஏன்ப்பா… முதல்வருக்கு எத்தனை மணிக்கு விமானம்?” எனக் கேட்டார். 2 மணிக்கு அய்யா என்றேன். அப்போது மணி 12.30 ஆகிவிட்டது. “ஓ, நேரம் ஆகிடிச்சு… பரவால, விமான நிலையத்துக்குப் போலாம்னு நினைக்கிறேன். வண்டிய ரெடி பண்ணச் சொல்லுங்க” என்றார் பெரியார். “வழிநெடுக டிராஃபிக் இருக்கும். இந்த டைம்க்கு போனாலும் பார்க்க முடியுமான்னு தெரியலங்க அய்யா” என்றேன். “பரவாலப்பா.. விமானத்தைப் பார்த்துட்டு வந்திடலாம்… கெளம்புங்க” என்று பிடிவாதமாக இருந்தார் பெரியார்.
உடனே வேகமாகச் சென்றுவிட்டோம். விமான நிலையத்தில் அமைச்சர்கள், ம.பொ.சி. எனப் பலரும் இருந்தனர். பெரியாரும் வாகனத்தில் இருந்து இறங்கி, வீல் சேரில் அமர்ந்துகொண்டார். அதன்பிறகுதான் அண்ணாவின் வாகனம் வந்தது. பெரியாரைப் பார்த்தவுடன் வண்டியை நிறுத்த அண்ணா முயல்கிறார். ஆனால், “வண்டியை நிறுத்த வேண்டாம்.. போங்க… போங்க” என கையசைத்தார் பெரியார்.
இப்போது நான் தங்கியிருக்கும் அடையாறு இல்லத்தில்தான் பெரியார் இருந்தார். அதற்கு எதிரில் இருந்த புற்றுநோய் மருத்துவமனையில்தான் அண்ணா கடைசி நாட்களில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது இருவருக்கு மட்டும்தான் உள்ளே அனுமதி. ஒருவர் ஆளுநர், இன்னொருவர் பெரியார். பிறகு, என்னைச் சென்று பார்த்து வரச் சொல்வார். நான் அவ்வப்போது செல்வேன். 1969 பிப்ரவரி 3 அன்று, நள்ளிரவில் அண்ணா இறக்கும்போது, நான் மருத்துவமனையில்தான் இருந்தேன். உடனே பெரியாருக்குத் தகவல் கொடுக்க வேண்டுமென்று வெளியே வர முயன்றேன். ஆனால், பாதுகாப்பு கருதி எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புச் சுவரை எட்டிக்குதித்து வந்து, பெரியாரை எழுப்பி தகவல் சொன்னேன். உடனே கிளம்பி நேரில் வந்து, கலைஞர் உள்ளிட்டோரை கட்டியணைத்து அழுதார் பெரியார். பிறகு வீட்டிற்கு வந்து, அவர் தூங்கவே இல்லை. அப்படியே அமைதியாக இருந்தார். ஒரு காகிதமும் பேனாவும் எடுத்துவரச் சொன்னார். ‘அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்கிறார்’ எனத் தலைப்பிட்டு உருக்கமான அறிக்கை ஒன்றை எழுதிக்கொடுத்தார். அண்ணாவின் மறைவு பெரியாரைப் பெரிதும் பாதித்தது.
அண்ணாவுக்குப் பிறகு, தி.மு.க.வின் தலைமை யார் என்ற குழப்பம் நிலவியபோது, பெரியாரின் நிலைப்பாடு என்ன?
“அண்ணா மறைவுக்குப் பின்னர், நாவலர் – கலைஞர் சிக்கல் எழுந்தபோது, இதை வைத்தே தி.மு.க. பலவீனமடைந்துவிடும் என்று டெல்லி கருதியது. ஆனால், திரியைக் கொளுத்த விடாமல் அணைத்துவிட்டார் பெரியார். ‘நாவலர் நல்ல பகுத்தறிவாளர், தீவிரமாக இயங்குகிறார். ஆனால், இன்றைக்கு இருக்கிற எதிர்ப்புகளுக்கு ஈடுகொடுக்க வேண்டுமென்றால், கலைஞர்தான் சரியாக இருப்பார்’ என்று கருதினார் பெரியார். எனவே, ஒருநாள் காலை 07.30 மணிக்கு என்னை வரச்சொன்னார். “கலைஞர்தான் அடுத்த தலைவராக வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவர் மறுக்கக் கூடாது. நான் சொன்னேன் என்று சொல்லுங்கள். ஏதாவது அவசரம் என்றால் எனக்குத் தொலைபேசியில் அழையுங்கள்” என்றுகூறி கலைஞரைச் சந்தித்து, தனது விருப்பத்தைச் சொல்லச் சொன்னார். அப்போது, வீட்டில் சவரம் செய்துகொண்டிருந்தார் கலைஞர். “நாவலர் இருக்கிறார். அவர் சீனியர். இதனால் கட்சி இரண்டாக கூடும்” என்று தயங்கினார் கலைஞர். ஆனால், பெரியார் இதைத் தனது உத்தரவு என்று சொல்லச்சொன்னார் என்றேன். அதன் பிறகே கலைஞர் சம்மதித்தார்.”
தி.மு.க. தலைமைக்கு கலைஞர்தான் சரியாக இருப்பார் என்ற முடிவுக்கு பெரியார் எப்படி வந்தார்?
“12.06.1967ல் திட்டக்குடி ஊராட்சியில் கலைஞரின் படத்தைத் திறந்துவைத்து பெரியார் உரையாற்றினார். ‘அண்ணா கெட்டிக்காரர். ஆனால் அதைவிட, முன் யோசனை நிறைந்த ஆளுமைக்காரர் கருணாநிதி’ என்றார் பெரியார். எனவே, கலைஞரைப் பற்றிய மதிப்பீடு பெரியாருக்கு ஏற்கெனவே இருந்தது.”
எம்.ஜி.ஆர். பிளவு வந்த காலகட்டத்திலும் பெரியாரின் நிலைப்பாடு கலைஞருக்கு ஆதரவாகவே இருந்தது. அப்போது என்ன நடந்தது?
அப்போது, மயிலாப்பூரில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு எம்.ஜி.ஆர். பேசியது குறித்து பெரியாரிடம் கேள்வி எழுப்பினார்கள். “அவர் ஏதோ வேறு இடத்தில் கால் ஊன்றிவிட்டாரா எனத் தெரியவில்லை” என்று பதிலளித்தார் பெரியார். பின்னர், எம்.ஜி.ஆரின் போக்குகள் குறித்து சில அமைச்சர்கள் பெரியாரிடம் பேசினர். கட்சி உடைந்துவிடும் போலிருக்கிறது, நீங்கள் சொன்னால்தான் எம்.ஜி.ஆர்., கலைஞர் இருவரும் கேட்பார்கள்’ என்றனர். அவர்கள் அனைவரிடமும் யோசிக்கிறேன் என்று மட்டும் கூறினார் பெரியார். பின்னர், எம்.ஜி.ஆர். வீடு எங்கு இருக்கிறது? போகலாம் என்று என்னிடம் கேட்டார். எனக்கும் தெரியாது. ஆர்.எம்.வீரப்பனிடம் கேட்டு, அவருடைய தொலைபேசி எண் வாங்கி அழைத்தேன். “அய்யா என்னை வந்து பார்ப்பதா? காலை 8 மணிக்கு நானே வருகிறேன் என்று சொல்லுங்கள்” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
இதற்கிடையே, பெரியாருக்கும் ராஜாஜிக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான பதக்கம் வழங்கியிருந்தது. ஒன்றிய அரசு, அந்தப் பதக்கத்தை அடுத்த நாள் காலை நேரில் தர வருவதாகத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார் கலைஞர். “எம்.ஜி.ஆரை பெரியார் வரச்சொல்லியிருக்கிறார், இருவரும் ஒரே நேரத்தில் வந்தால் சரியாக இருக்காது” என்றேன் “சரி, எம்.ஜி.ஆர். வந்து சென்றபிறகு சொல்லுங்கள் வருகிறேன்” என்றார் கலைஞர். எம்.ஜி.ஆரிடம் சுமார் 1 மணி நேரம் பேசினார் பெரியார். “பொதுக்கூட்டத்தில் போய் கணக்கு வழக்கு கேட்கலாமா?” என்று எம்.ஜி.ஆரிடம் பெரியார் கேள்வி எழுப்பினார். “ஒன்றாக இருந்தால்தான் உங்களுக்கும் மக்களுக்கும் நல்லது, தந்தை நிலையில் இருந்து இதைச் சொல்கிறேன்” என்று அறிவுரைகள் வழங்கினார் பெரியார். “அவசியம் நான் யோசிக்கிறேன் ஐயா” என்று எம்.ஜி.ஆர். கூறிவிட்டுச் சென்றார். அதன்பிறகு வந்த கலைஞரோ, எம்.ஜி.ஆர். வந்துசென்றது பற்றி ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. அப்படி கேட்பது நாகரிகமாக இருக்காது என்று கருதினார். ஆனால், திடீரென முடிவை மாற்றிக்கொண்ட எம்.ஜி.ஆர், தி.மு.க.வில் இருந்து விலகிவிட்டார்.”
பெரியாருக்குப் பிறகு, மணியம்மையார் தி.மு.க.வுடன் எத்தகைய நட்புறவைக் கொண்டிருந்தார்?
“பெரியாருக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் இந்த இயக்கத்திற்குத் தலைமைதாங்கினார். அப்போது, எம். ஜி.ஆரின் அ.தி.மு.க. வந்துவிட்டது. ஆனால், ‘பெரியார் தி.மு.க.வைதான் ஆதரித்தார். கலைஞரைத்தான் ஆதரித்தார்.எனவே, நானும் அவர் வழியைத்தான் தொடர்வேன்’ என்று உறுதியாக இருந்தார் மணியம்மையார்.
இன்றைக்கு, சென்னையின் துணை மேயராக இருக்கிற மகேஷ் குமாரின் தந்தை பவளவண்ணன், அண்ணா இருக்கும்போதே, 1968ஆம் ஆண்டில் கலைஞருக்குச் சிலை வைக்க முடிவுசெய்திருந்தார். ஆனால், அது கலைஞருக்குத் தெரியாது. எனினும், இந்து பத்திரிகை இதைவைத்து அண்ணாவுக்கும் கலைஞருக்கும் சிண்டு முடிய முனைந்தது. பகுத்தறிவு பேசும் அனைவருக்கும் சிலை வைக்க வேண்டுமென்று, ஏற்கெனவே கலைஞரை வைத்துக்கொண்டே பெரியார் பேசியிருக்கிறார்.
அதனால், இந்துவில் வெளியான இந்தச் செய்தியைக் கவனித்த பெரியார், சென்னையில் எங்கெல்லாம் பார்ப்பனர்களுக்குச் சிலை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பட்டியல் எடுத்துத் தரச்சொன்னார். அவரே சில சிலைகளைப் பற்றியும் தகவல் சொன்னார். பின்னர், அந்தப் பட்டியலை வைத்து, கண்டன அறிக்கை ஒன்று எழுதினார். கலைஞருக்குச் சிலை வைக்க வேண்டுமென்றார். ‘எனக்குத் தெரியாமல் சிலை வைக்கக் கூடாது’ என அப்போது கலைஞர் கேட்டுக்கொண்டார்.
மீண்டும் 1971ல் கலைஞர் வெற்றி பெற்றபோது, ஆகஸ்ட் 24ஆம் தேதி, பெரியார் திடலில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது, கலைஞரின் சாதனைகளைச் சொல்லி, அவருக்குச் சிலை வைக்க வேண்டுமென்று மீண்டும் கூறினார், பெரியார். அந்தச் சிலை அமைப்புக் குழுவுக்குத் தலைவராகக் குன்றக்குடி அடிகளார், துணைத் தலைவர்களாக நெ.து.சுந்தர வடிவேலு, சென்னை மேயர் சா.கணேசன், செயலாளராக என்னை நியமித்தார். சிலைக் குழுவுக்குப் புரவலர் பெரியார். ஐந்தாயிரம் ரூபாய் பணமும் தருவதாகச் சொன்னார். ஆனால், தி.மு.க. சார்பில் பெரியாருக்குச் சிலை வைக்கப்பட்ட பிறகு, இதுகுறித்து சிந்திக்கலாம் என மீண்டும் கூறிவிட்டார், கலைஞர்.
பெரியார் வாழ்ந்த காலத்தில், அதற்கான சூழல் அமையவில்லை. பெரியாரின் முதல் நினைவு நாளில், சென்னை சிம்சன் சந்திப்பில் சிலை அமைத்தார் கலைஞர். அதனால், ‘பெரியாருக்கு சிலை வைத்தாயிற்றே’ என, இனி பெரியார் விரும்பியவாறு, கலைஞருக்குச் சிலை வைப்போம்’ என அறிக்கை விடுத்தார் மணியம்மையார். பெரியார் விட்ட பணியை நாங்கள் தொடர்கிறோம் என்றார். அதன்படி, முறைப்படி அனுமதி பெற்று, அண்ணா சாலையில் கலைஞருக்குச் சிலை அமைக்க பீடம் வைக்கப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்தனர். இந்தத் தகவல் மணியம்மையாருக்குக் கிடைத்தது.
அப்போது, திருவண்ணாமலையில் பெரியார் சிலை திறப்பு விழாவில் நானும் மணியம்மையாரும் இருந்தோம். அன்று இரவே சென்னை திரும்பினோம். திடலில் இருந்த சிலையை எடுத்துச்சென்று, இரவோடு இரவாக வைக்கச் சொன்னோம். விடியற்காலை 5 மணிக்குள் சிலை நிறுவப்பட்டு, அதைப் புகைப்படம் எடுத்துவிட்டோம். காலையில் அ.தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று சிலை வைக்க தடையுத்தரவு கேட்டார்கள். பி.எச்.பாண்டியன், அவர்கள் தரப்பு சார்பில் ஆஜரானார். ஆனால், சிலை ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டது. என்பதற்கான ஆதாரத்தைக் காட்டினோம். அதனால், தடையுத்தரவு கொடுக்க முடியாது, வழக்காகத் தொடருங்கள் விசாரித்துக்கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்துவிட்டார். இப்படி, திராவிட இயக்கத்திற்கு ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு சரித்திரம் உள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞருடன் உங்களுக்கு இருந்த நட்புறவு பற்றிக் கூறுங்கள்…
“கலைஞரோடு எனக்கு இருந்த நட்பு, முழுக்க முழுக்க கொள்கைப் புரிதல் அடிப்படையிலானது. பெரியார் மரணமடைந்து, அவர் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தபோது, செய்தியாளர்கள் என்னிடம், “எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள், இனிமேல் திராவிடர் கழகம் இருக்காது, தி.மு.க.வுடன் இணைந்துவிடும் என்கிறார்கள்… இது உண்மையா?” என்று செய்தியாளர்கள் கேட்டனர். ஐயாவின் உடல் கூட இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை, மிகுந்த துயரத்தில் நாங்கள் இருந்தபோது, இந்தக் கேள்வி எழுந்தது. “திராவிடர் கழகம் ஒருபோதும் கலையாது, இணையாது, அதன் தனித்தன்மையோடு இயங்கும்” என்றேன். அப்போது, ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “திராவிடர் கழகம் என்பது தாய்க்கழகம். தாய்க்கழகம் இணையாமல், கலையாமல், தனித்தே இயங்கும் என்று என்னுடைய இளவல் வீரமணி கூறியிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார் கலைஞர்.
தி.மு.க. இளைஞர் அணியின் முதலாவது மாநில மாநாடு 2007ஆம் ஆண்டு, நெல்லையில் நடைபெற்றது. இடையில் நாங்கள் அ.தி.மு.க.வை ஆதரித்துக்கொண்டிருந்த காலகட்டத்திற்குப் பிறகு, தி.மு.க. மேடையில் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி அது. அன்று காலை நெய்வேலியில் எனக்கு வீடு திறப்புவிழா நிகழ்ச்சி இருந்தது. மாலையில் மாநாட்டிற்கு வந்துவிடுங்கள் என வலியுறுத்தியதோடு, என்னை அழைத்துவரும் பொறுப்பை, அப்போது ஒன்றிய அமைச்சராக இருந்த ஆ.ராசாவிடம் ஒப்படைத்திருந்தார், கலைஞர். “எங்களுடைய உறவில் உரசல் இருந்தது. ஆனால், எதிரிகளுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். மனைவியை விவாகரத்து செய்யலாம். ஆனால், தாய்க்கு பிள்ளை என்றும், சகோதரர்கள் தங்களை இன்னார்க்கு அண்ணன் இல்லை, தம்பி இல்லை என்றும் சட்டப்படி அறிவிக்க முடியாது. அதனால் நாங்கள் எங்கே இருந்தாலும் அண்ணன் அண்ணன்தான்; தம்பி தம்பிதான். அந்த உறவில் மாற்றம் இருக்காது” என்றேன். அது எல்லோருக்கும் மகிழ்ச்சி தந்தது. அந்த மாநாட்டையொட்டி, முரசொலியில் கடிதங்கள் எழுதினார் கலைஞர். தினமும் ஒவ்வொரு தலைவரைப் பற்றி எழுதினார். அதில் என்னைப் பற்றியும் எழுதினார்.
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த காலங்களில், திராவிடர் கழகத்திற்கும் கலைஞருக்கும் எத்தகைய நட்புறவு இருந்தது?
ஆட்சிக்கு வருவோரைத்தான் ஆதரிப்பார்கள் என்ற குற்றச்சாட்டு திராவிடர் கழகத்தின்மீது உண்டு. அப்படியானால், எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தவுடன், அவரை ஆதரித்திருக்க வேண்டுமே? மிசா காலத்தில் சென்னையில் மட்டும் திராவிடர் கழகத்தினர் 12 பேர் சிறையில் இருந்தோம். மற்ற மாவட்டங்களில் ஐம்பது பேருக்கு மேல் மிசாவில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்தோம். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகன்லால் சுகாடியா அப்போது ஆளுநராக இருந்தார். அவரைச் சந்திக்க அன்னை மணியம்மையார் நேரம் கேட்டிருந்தார். சந்திக்கச் சென்றபோது, உள்துறை அமைச்சர் பிரமானந்த ரெட்டியும் தமிழ்நாட்டிற்கு வந்து ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தார்.
“அரசியல் கட்சிக்காரர்களைக் கைதுசெய்துள்ளீர்கள், திராவிடர் கழகம் என்ன செய்தது? எங்கள் தோழர்களை ஏன் கைதுசெய்தீர்கள்? அவர்களை விடுதலைசெய்யுங்கள்” என பிரமானந்த ரெட்டியிடம் கேட்டார். மணியம்மையார். “தி.மு.க.வுடன் உறவு இல்லை என்று சொன்னால், உடனே விடுதலை செய்கிறோம்” என்று நிபந்தனை விதித்தனர். மணியம்மையார் உடனே எழுந்துவிட்டார். “இந்த உறவு நாங்கள் இப்போது உருவாக்கியது அல்ல, பெரியார் காலத்தில் உருவானது. கொள்கை அடிப்படையிலான உறவு. எனவே, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் சிறையிலேயே இருக்கட்டும், செத்தாலும் சாகட்டும். ஆனால், தி.மு.க.வுடன் உறவு இல்லை சொல்ல முடியாது’ எனக் கூறிவிட்டார்,மணியம்மையார்.
சிறையில் ஒவ்வொரு நாளும் வெள்ளைத்தாளை நீட்டுவார்கள். மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள். ஆனால், ஒரு நாள்கூட திராவிடர் கழகத்தினர் இருந்த அறைப் பக்கம் அந்த வெள்ளைத்தாள் வராது. தி.மு.க.விலும் முக்கிய நிர்வாகிகள் இருந்த அறைகளுக்கு வெள்ளைத்தாள் வராது.”
மிசா காலத்தில் நீங்களும் இன்றைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஒன்றாகச் சிறையில் இருந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்…
“மு.க.ஸ்டாலின் இளைஞர் அணியில் இருந்த காலத்தில் இருந்தே அவருடனான நட்புறவு தொடர்கிறது. குறிப்பாக, மிசா சிறைக்காலம் 1976ஆம் ஆண்டு, ஜனவரி 31ஆம் தேதி இரவு, நாங்கள் கைது செய்யப்பட்டோம். பிப்ரவரி 2ஆம் தேதி, எங்களை அடிக்க ஆரம்பித்தார்கள். எங்கள் அறையில் எட்டு பேர் இருந்தோம். இரண்டு பானைகள் வைத்திருந்தார்கள். ஒரு பானையில் தண்ணீர், இன்னொரு பானை சிறுநீர் கழிக்க வைத்திருந்தார்கள். ஒருவர் சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால், மற்ற எல்லோரும் திரும்பிக்கொள்வோம். அப்படியான நிலைமையில் இருந்த எங்கள் அறையின் கதவைத் திறந்து, யாரையோ உள்ளே தள்ளிவிட்டார்கள். யார் எது என்றேன்? ‘அண்ணே நான் ஸ்டாலின்’ என்றார். “வாங்க தம்பி, ரொம்ப விசித்திரமான சூழ்நிலை, சமாளிப்போம்” என்றேன். அன்றைக்குப் பிடித்த கரங்களை என்றைக்கும் விடமாட்டோம். முதல்வராக இருக்கும்போது மட்டுமல்ல இளைஞரான காலத்தில் இருந்தே அவ்வளவு நிதானமாக இருப்பார். இது வெறும் அரசியல் கொள்கை உறவு மட்டுமல்ல, பாச அடிப்படையிலான உறவு.”
தி.மு.க.வின் சமூக நீதி சாதனைகளாக எதையெல்லாம் பார்க்கிறீர்கள்?
“சமூக நீதிக் கொள்கை என்பதற்கு வகுப்புவாரி உரிமை அடிப்படையானது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எல்லா மேடைகளிலும் இந்த வகுப்புவாரி உரிமையை மக்களிடம் விளக்கிப் பேசியிருக்கிறது, திராவிட முன்னேற்றக் கழகம். இடஒதுக்கீட்டிற்குப் பொருளாதார அளவுகோலை ஒழித்ததே தி.க.வும் தி.மு.க.வும்தானே? சி.பி.ஐ. போன்ற கட்சிகள் ஆதரவாக உடன் நின்றன. அதற்கு முன்பாக, இடஒதுக்கீட்டை உயர்த்த தி.மு.க. எப்படி செயலாற்றியது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் 41% இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் இதை அதிகரிக்க வேண்டுமென்று பெரியார் எழுதினார். விகிதாச்சார பிரதிநிதித்துவம்தான் வேண்டும் என்றார். அண்ணா உயிரோடு இருக்கும்போதே இதுகுறித்து யோசித்தார். அடுத்து வந்த கலைஞர் ஆட்சியில், சட்டநாதன் ஆணையம் அமைக்கப்பட்டது.
ஆணையத்தைச் சேர்ந்த சட்டநாதன், மாவட்ட அமர்வு நீதிபதிகள் சின்னப்பன், ஜமால் உசேன் ஆகிய மூவரும் திருச்சியில் பெரியாரைச் சந்தித்தார்கள். அந்தக் குழுவிடம் இடஒதுக்கீட்டை 49 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்றார் பெரியார், அதற்கு ஒன்றிய அரசு அனுமதிக்காது ஐயா, 50 சதவிகிதத்திற்குள்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வார்கள் என்றனர். “ஏன் அப்படிச் சொல்வார்கள்? நான் சொல்வதைச் சொல்லுங்கள் தடை ஏற்படாது” என்றார் பெரியார். உடனே அவர்கள், பேனா எடுத்து குறித்துக்கொள்ளத் தயாரானார்கள். ’49 சதவிகிதம் என்பது 50-க்குக் கீழ்தான் என்று சொல்லுங்கள், தடை ஏற்படாது’ என்றார் நகைச்சுவையாக. எல்லோரும் சிரித்துவிட்டார்கள். அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில்தான் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 25 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக உயர்த்தினார் கலைஞர். தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகை பிரநிதித்துவத்திற்கு ஏற்ப 18 சதவிகிதமாக உயர்த்தினார். மொத்த இடஒதுக்கீடு அளவு 49 சதவிகிதமாக அதிகரித்தது.
இதில்தான் 9000 ரூபாய் பொருளாதார வரம்பைக் கொண்டுவந்து எம்.ஜி.ஆர். திணித்தார். அதை, தி.க.வும் தி.மு.க.வும் கடுமையாக எதிர்த்தன. ஒரு வருட காலம் கடும் பிரச்சாரம் செய்தோம், போராட்டங்கள் நடத்தினோம். வழக்கு, கைது, சிறைக்கொடுமைகளைத் தி.க., தி.மு.க. இரண்டு இயக்கங்களும் சந்தித்தன. அதன் விளைவாக, நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். படுதோல்வியைச் சந்தித்தார். தேர்தல் முடிவுக்குப் பிறகு, இடஒதுக்கீடு குறித்து ஆராய, உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தை எம்.ஜி.ஆர். கூட்டினார். அந்தக் கூட்டத்தில், தி.மு.க. கலந்துகொள்ளாது என அறிவித்துவிட்டார், கலைஞர். ஆனால், திராவிடர் கழகம் கலந்துகொண்டது. “எல்லோரும் ஒன்றாகத்தானே எதிர்த்தீர்கள், இப்போது நீங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்திற்குச் செல்லவில்லை. ஆனால், திராவிடர் கழகம் செல்கிறதே?”என பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் கேள்வி எழுப்பினர். ‘தி.க.வின் முடிவு சரியானது எங்களுக்கு சட்டசபையில் பங்கேற்றுப் பேசும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் சட்டசபைக்கு சபைக்கு வர மாட்டார்கள். அதனால் இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு, கருத்துகளைத் தெரிவிப்பது நல்லதுதான் என்று பதிலளித்தார், கலைஞர். எம்.ஜி.ஆர். இடஒதுக்கிட்டில் வருமான உச்சவரம்பைத் திரும்பப் பெற்றார்.
மண்டல் கமிசன் அமலாகத் துணை நின்றவர், கலைஞர், வி.பி.சிங்கின் சமூகநீதி ஆட்சிக்குத் துணையாக இருந்தார். இன்றைக்கு முதலமைச்சர் அவர்களும் அண்ணா, கலைஞர் வழியில் சமூக நீதியை நிலைநிறுத்த பல வழிகளில் பாடுபடுகிறார்.”
திராவிட இயக்கம் சமகாலத்தில் சந்திக்கிற சவால்கள் என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

“பெரியார் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, கடைசியாகத் தியாகராய நகரில் பேசினார். ‘இப்போது இருக்கிற தி.மு.க ஆட்சி மாறிவிட்டால், நம்முடைய மக்கள் கதி என்ன ஆவது? அப்படியே தலைகீழாக மாறிவிடாதா? தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்று எல்லா கட்சிக்காரர்களும் சொல்கிறார்கள்’ என்று தனது கடைசி உரையில்கூட பெரியார் கூறினார். இன்றைக்கும் தி.மு.க.வை ஒழிக்க வேண்டுமென்று சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வை ஒழிக்க வேண்டுமென்பதுதான் இன்றைக்கு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். கொள்கையாகவே இருக்கிறது.
ஆனால், திராவிட இயக்கத்திற்கு ஒரு சமமான போட்டி இன்று இல்லாமல், சூழ்ச்சிதான் நிறைந்திருக்கிறது. அண்ணா காலத்திலும் கலைஞர் காலத்திலும்கூட இப்படிப்பட்ட சிக்கல்கள் இல்லை. அன்றைக்கு ஆளுநர்கள் ஒத்துழைத்தார்கள். நிதி, ஓரளவுக்காவது கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு தி.மு.க. தலைவர் சந்திக்கிற தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தத் தொல்லைகளுக்கு மத்தியில், திராவிட மாடல் அரசு செய்கிற சாதனைகள் மகத்தானவை.
அண்ணா போய்விட்டார், இனி வெற்றிடம் என்றார்கள், அடுத்து கலைஞர் போய்விட்டார். வெற்றிடம் என்றார்கள். ஆனால் இப்போது, ‘கருணாநிதியே பரவாயில்லை, ஸ்டாலின் ரொம்ப மோசம்’ என்கிறார்கள். ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுகிறார் என்பதற்கு ஆரியம் தரும் சர்ட்டிபிகேட் இது.
ஆர்.எஸ்.எஸ்.தான் இன்று நமது முக்கியமான எதிரி. சர்க்கரைப் பூச்சு தடவிய விஷம், பண்பாட்டுப் படையெடுப்பு நம்மீது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பைக்கூட தீபாவளிப் பரிசு, நவராத்திரி பரிசு என்று திரிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதுதான் அவர்களின் நோக்கம், அதற்காக, அரசியல் கூலிப்படைகளை உருவாக்குகிறார்கள். எதிர்க்கட்சிகளை மிக எளிமையாகக் கபளீரகம் செய்கிறார்கள். இவையெல்லாம் வெறும் தேர்தல் பிரச்சினைகள் அல்ல. அடுத்த தலைமுறைப் பிரச்னை.
திராவிட இயக்கத்தின் நோக்கமே சாதியற்ற, பெண்ணடிமைத்தனமற்ற, பகுத்தறிவுச் சமூகம் அமைப்பதுதான். திராவிடர் கழகம் அதற்காகப் பிரச்சாரம் செய்யும். தேர்தல் அரசியலில் பங்கேற்றால், இவற்றைச் சட்டத்தின்வழி செய்யலாம் என்பதுதான் அண்ணாவின் கருத்து. அந்தக் கருத்தைத்தான் கலைஞர் பின்பற்றினார். இன்றைய முதல்வரும் பின்பற்றுகிறார்.”
தி.மு.க. இளைஞர் அணியைப் பற்றிய உங்கள் பார்வை, மதிப்பீடு என்ன?
“நமது வேர்கள் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். சித்தாந்தரீதியாக, கொள்கைரீதியாக இளைஞர்களைத் தயார்படுத்துவது அதில் மிக முக்கியமானது. அந்தப் பணியை சிறப்பாகச் செய்கிறார். இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.
தி.மு.க. இளைஞர் அணிக்கு தாய்க்கழகத்தின் அறிவுரையாக நீங்கள் கூற விரும்புவது..?
“இதுபோன்ற பலம்வாய்ந்த இளைஞர் அணி எந்தக் கட்சிக்கும் கிடையாது. ஆகவே, அண்ணாவின் வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற இலட்சியத்தோடு செயல்பட்டு, இந்த அணியை வளர்க்கப் பாடுபட வேண்டும். இளைஞரணியினர் மூடநம்பிக்கைகள் அற்ற சிறந்த பகுத்தறிவாளர்களாக இருக்க வேண்டும். பாலினபேதமற்றவர்களாகச் செயல்பட வேண்டும். இந்த அணியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும் என்று மட்டும் யாரும் கருதிவிடக் கூடாது. அதை விட, கொள்கை மிக முக்கியம். ‘பதவி என்பது மேல் துண்டு, கொள்கை என்பது வேட்டி’ என்று அண்ணா கூறினார். எனவே, இரண்டில் எது முக்கியம் என இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்தக் கொள்கையைப் புரிந்துகொள்ளத்தான் ‘பாசறைப் பக்கம்’ இளைஞர் அணியால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இளைஞர்கள் முழுக்கக் கொள்கைப் பாசறை ஆக வேண்டும். கொள்கைப் பலத்தால்தான் வெற்றியை உறுதியாக்க முடியும். திராவிட இயக்கத்தின் தொடர் ஓட்டத்தை இளைஞர்கள் தொடர வேண்டும்.
புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்பதைப் பெரியார் அடிக்கடிச் சொல்வார். அதற்கு என்ன அர்த்தம் என்றால், ‘தலைவரிடத்தில் என்னை சமர்ப்பிக்கிறேன். இந்தக் கொள்கைக்கு உண்மையாக இருப்பேன், இந்த இயக்கத்திற்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்’ என்பதுதான். இந்த உணர்வோடு கட்டுக்கோப்பான இளைஞர் அணியாக இருந்தால், நம்மை வெல்ல யாராலும் முடியாது; காலத்தை நாம் வெல்வோம், திராவிடம் வெல்லும்”.
SIR ஆபத்தில் சிக்கிய தமிழ்நாடு! உச்சநீதிமன்றத்தில் எதுவும் நடக்காது! தராசு ஷ்யாம் நேர்காணல்!


