பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் படி, அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் நிராகரிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான விண்ணப்பம் நிகராகரிக்கப்பட்டது குறித்து தி வயர் ஆங்கில இணையத்தில் விரிவான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு நீதி இழப்பீடாக அயோத்தியில் ஒரு முக்கிய இடத்தில் மசூதி கட்ட சன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கு நிலம் ஒதுக்க உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த இடத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மசூதி கட்டுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தை, அயோத்தி மேம்பாட்டு ஆணையம் நிராகரித்துள்ளது.
அயோத்தி நகரத்திலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோஹாவால் தாலுகாவுக்கு உட்பட்ட தானிப்பூர் கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக சமர்ப்பிக்கப் பட்ட திட்டத்தை நிராகரிக்கப்பட்டு இருப்பதற்கு காரணமாக, பல்வேறு அரசுத் துறைகளிடம் இருந்து மசூதி அறக்கட்டளை தடையில்லாச் சான்றிதழ்கள் (NoCs) பெறப்படாததை அயோத்தி மேம்பாட்டு ஆணையம் மேற்கோள் காட்டியுள்ளதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, உத்தரபிரதேச மாநில சன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து மசூதி அறக்கட்டளை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அன்று தானிப்பூரில் மசூதி கட்டுவதற்கான விண்ணப்பத்தை அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, பொதுப்பணி துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சிவில் விமானப் போக்குவரத்து துறை, நீர்ப்பாசனத் துறை , வருவாய் துறை, நகராட்சி மற்றும் தீயணைப்பு சேவைகள் உள்ளிட்ட அரசு துறைகளிடமிருந்து அனுமதி இல்லாததால், மசூதி அறக்கட்டளையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக செப்டம்பர் 16ஆம் தேதியிட்ட கடிதம் மூலம் அயோத்தி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டில், அயோத்தி தீர்ப்பின் ஒரு பகுதியாக, அயோத்தியில் ஒரு முக்கிய இடத்தில் மசூதி மற்றும் தொடர்புடைய வசதிகளைக் கட்டுவதற்காக சன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அப்போதைய அயோத்தி மாவட்ட நீதிபதி அனுஜ்குமார் ஜா, தானிப்பூரில் அமைந்துள்ள நிலத்தை 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று சன்னி மத்திய வக்ஃப் வாரியம் வசம் ஒப்படைத்தார்.
அயோத்தி மேம்பாட்டு ஆணையம், பத்திரிகையாளர் ஓம் பிரகாஷ் சிங் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அளித்திருக்கும் பதில் கடிதத்தில், மசூதி அறக்கட்டளை தானிப்பூரில் மசூதி கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் ஆய்வுக்கட்டணமாக ரூ.4,02,628 டெபாசிட் செய்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளதாக, பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா ஊடகத்தின் செய்தி தெரிவித்துள்ளது.
மசூதி கட்டுவதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அயோத்தி மசூதி அறக்கட்டளையின் செயலாளர் அதர் ஹுசைன், மசூதிக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, அதன்படி உத்தரபிரதேச மாநில அரசு நிலத்தை ஒதுக்கியது. ஆனால் மசூதி கட்டுவதற்கு அரசுத் துறைகள் ஏன் தடை இல்லா சான்று வழங்கவில்லை?. மசூதி கட்டும் திட்டத்தை அயோத்தி மேம்பாட்டு ஆணையம் ஏன் நிராகரித்தது என்பது தன்னை பேச வார்த்தைகள் அற்றவனாக ஆக்கி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் ஒரு களஆய்வின்போது, தீயணைப்புத் துறை மசூதிக்கான அணுகு சாலை குறித்து கவலைகளை எழுப்பியதாகவும், முன்மொழியப்பட்ட மசூதி மற்றும் மருத்துவமனை கட்டிடத்திற்கான விதிமுறைகளின் படி அது குறைந்தது 12 மீட்டர் அகலமாக இருக்க வேண்டும் என்று கூறியதாகவும், அதே நேரத்தில் அந்த இடத்தில் உள்ள சாலை 6 மீட்டர் அகலமும், மசூதியின் பிரதான அணுகுமிடத்தின் அகலம் 4 மீட்டர் மட்டுமே இருப்பதாகவும் ஹுசைன் கூறினார். தீயணைப்புத் துறையின் ஆட்சேபனையைத் தவிர்த்து, மற்ற அரசு துறைகளின் ஆட்சேபனைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது, என்றும் அவர் கூறினார்.