2026 தேர்தலில் தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்களின் நோக்கம் என்பது எடப்பாடியை பலவீனப்படுத்துவதான். அதற்கு அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு விஜயுடன் கூட்டணி வைப்பது தான் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.


செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வந்தார் என்றும், பாஜக அதிமுக அணிகளை சேர்த்து வைக்க முயற்சித்தாகவும் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டில் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி முதல் குற்றவாளி என்பது மிகவும் முக்கியமானதாகும். தினகரனும், அது குறித்து பேசி வருகிறார். மற்றொரு விஷயம், எடப்பாடி பழனிசாமி குடும்ப அரசியல் செய்கிறார் என்பதாகும். எடப்பாடியின் மகனும், மாப்பிள்ளையும் தான் கட்சியை நடத்துகிறார்கள் என்றும் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். இவற்றை வெறும் குற்றச்சாட்டுகள் என்று புறம் தள்ளிவிட முடியாது.
ஜெயலலிதா இருந்தபோது, அதிமுகவில் சசிகலா குடும்பத்தினரின் செல்வாக்கு இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. இன்றைக்கு எடப்பாடியின் மகனும், மருமகனும் தான் கட்சியை நடத்துவதாக செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2022 ஜுலையில் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு, கட்சியில் அவருடைய குடும்பத்தினர் உள்ளே வந்தனர். எடப்பாடி மகன் தலைமையிலான டீம், கூட்டணி விவகாரங்களை பேசுவது, கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களை கண்காணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்றைக்கு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பாஜக சொல்லி தான் அதிமுக ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டதாக சொல்கிறார். அதிமுகவின் ஒவ்வொரு செயல்களிலும் அதிமுகவின் கரங்கள் இருக்கின்றன என்பதுதான் என்னுடைய கருத்தாகும். ஜெயலலிதா மருத்துவனையில் இருந்தபோதே இது தொடங்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் 4.5 வருட ஆட்சி முழுக்க முழுக்க பாஜக தயவில் தான் சென்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் தோற்ற பிறகுதான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை முழுமையாக கையில் எடுக்கிறார். அதற்கு பிறகுதான் எடப்பாடியின் குடும்பம் கட்சிக்குள் வந்தது.
இன்றைக்கு செங்கோட்டையன் பேட்டி என்பது அதிமுக விவகாரத்தில் பாஜக முழுக்க முழுக்க தலையிட்டது என்பதை உறுதிபடுத்துகிறது. செங்கோட்டையன் தற்போது வெளியிட்டிருப்பது முற்றிலும் உண்மையாகும். இதை ஏன் செங்கோட்டையன் அப்போதே சொல்லவில்லை என்றால், அப்போதே சொல்லியிருந்தால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம். செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரன் போன்றவர்கள், தங்களுடைய தரப்புக்கு பாஜக ஆதரவு அளிக்கலாம் என்று நினைக்கக்கூடும். சீட்டு வழங்கும் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சினை செய்தால், பாஜக இவர்களை வைத்து எடப்பாடியை மிரட்ட வாய்ப்பு உள்ளது.

பாஜக அதிமுகவை சேர்த்து வைக்க தான் முயற்சித்ததாக செங்கோட்டையன் சொல்கிறார். மற்றவர்களை சேர்த்து வைக்கவும், பிரிக்கவும் பாஜக யார்? மீண்டும் எடப்பாடியுடன் கூட்டணி வைத்த பிறகுதான், என்டிஏவில் இருந்த ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களை ஒதுக்க தொடங்கினார்கள். அவர்களை கூட்டணியில் சேர்க்க கூடாது என்கிற எடப்பாடியின் முடிவை, பாஜக ஏற்றுக்கொண்டது. அதிமுக என்கிற அமைப்பு எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளதால், பாஜக அவர் பக்கம்தான் இருக்கிறது. அதிமுகவை பொருத்தவரை யார் பலமாக இல்லையோ அவர்களை தூக்கி விடுவார்கள். எடப்பாடியுடன் கூட்டணி வைத்து அதிகாரத்தை கைப்பற்ற முடியுமா? என்று பார்க்கிறார்கள்.
டிடிவி தினகரன் திமுக- தவெக இடையே தான் போட்டி. அதிமுக 3வது இடத்திற்கு போய்விடும் என்று சொல்கிறார். அவர் எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவது இல்லை. பாஜக உடன் எடப்பாடி இருந்தாலும் அந்த அணியில் தினகரன் சேரப்போவது கிடையாது. எடப்பாடி எந்த வகையிலும் அரசியல் ஏற்றம் பெறக்கூடாது என்பதில் தினகரன் தெளிவாக இருக்கிறார்.

2026 தேர்தலில் எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே நோக்கமாகும். அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு விஜயுடன் கூட்டணி அமைப்பதாகும். விஜய், தானே முதலமைச்சர் வேட்பாளர், அதிமுக உடன் கூட்டணி இல்லை என்கிற நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் அதிமுக, திமுக என்கிற இருதுருவ அரசியலில் இருந்து அதிமுகவை அகற்றும் வேலைக்கான காய்களை நகர்த்துகிறார். விஜயுடன், தினகரன் செல்கிறபோது திமுக எதிர்ப்பு வாக்குகள், பாதியளவிற்கு விஜய்க்கு செல்ல வாய்ப்புள்ளது. அதேபோல், அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக ஆதரவு வாக்குகளும் விஜய்க்கு செல்கிற வாய்ப்பு உள்ளது.
தினகரன், செங்கோட்டையன், ஓபிஎஸ் போன்றவர்களின் அரசியல் இருப்பு என்பது, எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்துவது தான். எடப்பாடியை பலவீனப்படுத்தி கட்சியை கைப்பற்றுவது தான் அவர்களுடைய நோக்கமே தவிர, திமுகவை வீழ்த்துவது அல்ல. எனவே விஜயுடன் கூட்டணி சேர்வதன் மூலம் எடப்பாடியை ஓரளவுக்கு பலவீனப்படுத்த முடியும் என்று ஓபிஎஸ், தினகரன் போன்றவர்கள் கருதுகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அதுதான். எடப்பாடி அரசியல் ரீதியாக வளர்ந்தால், இவர்கள் மூன்று பேரின் அரசியலுக்கு நல்லது அல்ல, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


