சட்டமன்றத் தேர்தலில் விஜயை தனித்து நிற்க வைத்து, திமுகவுக்கு செல்கிற வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் திட்டம் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.


அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் குறிப்பிட்டதற்கு எதிராக அதிமுக தரப்பில் கடும் விமர்சனம் தரப்பட்டு வருகிறது. இது குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- த.வெ.க தலைவர் விஜய், தனது கட்சிக்கூட்டங்கள் நடத்தியதற்கான செலவு கணக்குகளையோ, கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு வழங்கிய பணத்திற்கான கணக்குகளையோ இதுவரை தெரிவிக்க வில்லை. ஆனால் ஊழலை ஒழிக்கப் போவதாக சொல்கிறார். கப் முக்கியம் பிகில் என்று சினிமா வசனத்தை விஜய் பேசுகிறார். ஆனால் மக்களுக்கு வாழ்க்கை முக்கியமாகும். ஆட்சியில் பங்கு தருகிறோம் என்று கூவிகூவி கூப்பிட்டார்கள். யாராவது வந்தார்களா? தாங்கள் யாரிடமாவது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றால், உடனே டெல்லியில் இருந்து வந்து விடுகிறார்கள் என்று செங்கோட்டையன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன், எம்ஜிஆர் – ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் பணியாற்றியவர். அதிமுகவின் மூத்த தலைவர், கோபி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெறக்கூடியவர். இப்படியான பாரம்பரியம் மிக்க தலைவரை, ஆதவ் அர்ஜுனாவுக்கு கீழ் பொறுப்பில் அமர்த்தினால், யார் கூட்டணிக்கு வருவார்கள்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் பெரிய அரசியல் ஞானிகளா? அவர்களுக்கு அரசியல் தெரியுமா? எதாவது பேச தெரியுமா? இவர்களுக்கு கீழ் நிலையில் செங்கோட்டையன் இருந்தால், உங்கள் கட்சிக்கு யார் கூட்டணிக்கு வருவார்கள்? மற்றவர்களை நீங்கள் நடத்தும் முறையை வைத்தே உங்களின் தரம் தெரிகிறதே? உங்களுடைய ஜனநாயகன் படம் வெளியாகாது. இம்முறை உங்களை காலி செய்ய வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டனர். தனியாக நின்று முடிந்த வரை திமுகவின் வாக்குகளை பிரிக்க வேண்டும். நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்கிறார்கள். தனக்கு அழுத்தமில்லை, மக்களுக்கு தான் அழுத்தம் உள்ளதாக விஜய் சொல்கிறார். மக்களா ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்தார்கள். மக்களா சிபிஐயிடம் போய் சாட்சி சொல்லிவிட்டு வந்தனர்? நீங்கள் தான் போனீர்கள். உங்கள் படத்தை தான் நிறுத்திவைத்துள்ளனர். உங்களுக்கு நடந்த அழுத்தத்தை பேசவே உங்களுக்கு வக்கில்லையே. நீங்கள் எப்படி மக்களுக்காக பேசுவீர்கள்?

விஜயையும், அவரது கட்சியையும் சிபிஐ வசம் மாட்டிவிட்டவர் ஆதவ் அர்ஜுனா. திருமாவளவனை துணை முதலமைச்சர் ஆக்கப் போகிறேன் என்று சொல்லியவர், தற்போது திருமாவளவனிடம் 20 பேர் தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் இங்கே வந்துவிட்டனர் என்று சொல்கிறார். முன்னர் இவர் தான் அதிமுகவில் உள்ள தொண்டர்கள் எல்லாம் தவெகவுக்கு வந்துவிட்டனர். தலைவர்கள் மட்டும்தான் அங்கு உள்ளனர் என்று சொன்னார். விஜயை நடுத்தெருவுக்கு கொண்டுவராமல் ஆதவ் அர்ஜுனா விட மாட்டார். எடப்பாடி பழனிசாமி, பாஜகவை கழட்டிவிட்டு விஜயுடன் கூட்டணி சேர்ந்திடலாம் என்று பிளான் போட்டால் அதை பார்த்துக் கொண்டிருக்க பாஜக என்ன முட்டாளா? அவர்கள் கிடுக்குப்பிடி போட்டு, பியூஸ் கோயலை அனுப்பி எல்லோரிடம் பேசி கூட்டணியை முடித்துவிட்டார்கள். டிடிவி தினகரன், அன்புமணி, எடப்பாடி மற்றும் அதிமுக அமைச்சர்கள் எல்லோரும் வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில், அவர்கள் குடுமி பாஜகவிடம் உள்ளது. விஜயின், குடுமியும் ஏற்கனவே பாஜகவிடம் சிக்கியுள்ளது. அப்போது உங்களுக்குள் என்ன மோதல் இருக்கிறது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தவெகவின் நிலை என்ன ஆகும் என்று யோசித்துக்கொள்ளுங்கள் என தமிழிசை சொல்கிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது தான் முதலமைச்சர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காப்பாற்றிவிட்டார். உங்களுக்கு பயந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆகியோர் ஓடி ஒளிந்துகொண்டு, குருமூர்த்தியின் கால்களில் விழுந்து, டெல்லியில் பாஜக வக்கீலை பார்த்து அமித்ஷாவிடம் போய் விஜயை மாட்டிவிட்டார்கள். அவர்களின் குடுமி தற்போது பாஜகவிடம் சிக்கிவிட்டது. ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். அட்டானி ஜெனரலே வந்து வாதாடுகிறார் என்றால்? எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். அதற்கு காரணம் காங்கிரஸ், அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகும். ஆதவ் அர்ஜுனா எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால் யாராவது வருவார்களா? அன்புமணி, டிடிவி, ஓபிஎஸ், காங்கிரஸ் என்று யாரும் கூட்டணி வரவில்லை.

நட்பு சக்தி வராவிட்டாலும் மக்களை நம்பி போகலாம் என்று விஜய் சொல்கிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக என்றைக்காவது பேசியுள்ளாரா? அவருடைய படத்தை நிறுத்தி வைத்துள்ளனர். அது குறித்து பேசவே விஜய்க்கு வக்கில்லை. ஜனநாயகன் படத்திற்கு தயாரிப்பாளரிடம் பணம் வாங்கினாரா? அல்லது அந்த தயாரிப்பாளரே விஜயின் பினாமியா? விஜய் மௌனமாக இருக்கிறபோதே அது விஜயின் பணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது. அப்படி தயாரிப்பாளரிடம் பணம் வாங்கியிருந்தால், பாஜகவை எதிர்த்து பேசி இருக்க வேண்டுமல்லவா? விஜய் யார் என்பதும், அவருடைய குட்டுக்களும் வெளிவந்துவிட்டன. பிரதமர் மோடியால் தமிழர்களின் மனங்களை ஒருபோதும் வெல்ல முடியாது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 400 பேர் உயிர்களை பலி கொடுத்த தியாக பூமி தமிழ்நாடு. அந்த பூமியில் வந்து இந்தியில் பேசுவது தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். அன்புமணி, டிடிவி, ஜி.கே. வாசன் வேண்டுமென்றால் உங்களுக்கு காவடி தூக்கலாம். ஆனால் நீங்கள் வாக்கு கேட்டு வருகிறபோது, தமிழக மக்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இங்கு வந்து கதை விடுகிற வேலை, உருட்டுகிற வேலை எல்லாம் எடுபடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


