கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வரும் 17ஆம் தேதி விஜய் செல்ல உள்ளார். அவரது பயணத்திற்கு அனுமதி வழங்கிட அரசும் தயாராக உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கரூர் விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய் கரூர் செல்வதற்காக பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் மனு கொடுத்துள்ளார். அவர் மனுவில் அளித்துள்ள நிபந்தனைகளை யாராலும் நிறைவேற்றவே முடியாது. கிரீன் காரிடார், வேகத்தடைகளை அகற்றுவது, பாதையின் குறுக்கே யாரும் வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார். ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிரீன் காரிடார் என்று அறிவிக்க கோருகிறார். நிறைவேற்றுவதற்கு வாய்ப்புகளே இல்லாத ஒரு கோரிக்கை மனுவை அளித்திருக்கிறார் விஜய். தற்போது அந்த மனுவை தவெக தரப்பில் திரும்பப் பெற்றுவிட்டனர். புதிய பெட்டிஷனை விஜய் கொடுப்பார் என்று காவல்துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தமிழக அரசு வரும் 17ஆம் தேதி விஜய் கரூருக்கு செல்வதற்கு அனுமதி வழங்க தயாராக உள்ளது. அவருக்கு வழக்கமான பாதுகாப்பை வழங்கிட காவல்துறை தயாராக உள்ளது. விஜய், கருரில் தன்னுடைய பயணத் திட்டத்தை குறைத்துவிட்டார். அங்கு உள் அரங்கத்தில் 41 டேபிள்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை அமர வைத்து, அவர்களிடம் விஜய் அனுதாபங்களை தெரிவிக்கிறார். மேலும் காயமடைந்த 80 பேரையும் சந்திக்கிறார். ஒட்டுமொத்தமாக 500 பேரை சந்திக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு கல்லூரியின் கலையரங்கத்தை தேர்வு செய்துள்ளனர். மேடையில் உயிரிழந்த 41 பேரின் படங்களும் இடம்பெறும்.
கரூர் துயர சம்பவத்தின் 16வது நாள் முடிந்து பேசுவதாக ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். பிறகு எதற்காக விஜய் 5வது நாளில் பேசினார். ஏன் இறந்தவர்களில் மாற்று மதத்தினர் இருக்க மாட்டார்களா? ஆதவ், 16வது நாள் காரியம் முடிவதற்கு முன்பாக டெல்லிக்கு போனது ஏன்? விஜய் வீடியோ காலில் பேசியது ஏன்? விஜய் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசி, அதை எல்லாம் வீடியோவில் ரெக்கார்டு செய்து எபிசோடு போல கொண்டு வந்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம் 16ஆம் நாளுக்கு முன்னதாக செய்திருக்கிறார்கள்.
விஜய் இனி ரோடு நடத்த முடியாது. இனி அவர் பிரச்சாரம் செய்வார். இனி கூட்டங்களுக்கு தாமதமாக வர மாட்டார் என்று நினைக்கிறோம். விஜய், இனி அரசியல் வியூகம் வகுப்பதில் தான் கவனம் செலுத்துவார். அதிமுக – பாஜக உடன் கூட்டணி வைப்பதா? அல்லது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதா? அல்லது அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைப்பதா? என்பதில் தான் விஜயின் சிந்தனைகள் இருக்கும்.
எடப்பாடி பழனிசாமி, விஜய் கூட்டணி ஆந்திரா பாணியில் அமைகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், பாஜக கூட்டணி வெற்றி. அதேபோல் தமிழ்நாட்டில் எடப்பாடி, விஜய், பாஜக கூட்டணி வெற்றி. அந்த பார்முலாவை தமிழகத்தில் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இது தொடர்பாக இரு தரப்பிலும் நிறைய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதை அய்யநாதன் வெளிக்கொண்டு வந்தார். அதற்கு பிறகு அவரை வெளியேற்றிவிட்டார்கள். எடப்பாடி முதலமைச்சர், விஜய் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் துணை முதலமைச்சர். இதுதான் அந்த காம்பினேஷன். நயினார் துணை முதலமைச்சர் ஆகிறபோது, அண்ணாமலை மீண்டும் தமிழக பாஜக தலைவராகி விடுவார். இது தான் பாஜக வட்டாரத்தில் பேச்சாக உள்ளது. ஆனால் டிடிவி தினகரன், எடப்பாடியை ஒருநாளும் முதலமைச்சராக விட மாட்டேன் என்று சொல்கிறார்.
கூட்டணியின் கட்சி தலைவர் பொறுப்பை விட்டுக்கொடுக்காமல் விஜய்க்கு வேறு வழியில்லை. அவர் தனியாக நின்றால் அது திமுகவுக்கு தான் சாதகமாகும். விஜய் எதிர்பார்ப்பது காங்கிரஸ் தங்களுடன் வரும் என்பதுதான். விஜய் வந்தால், அவர்களுக்கு கேரளாவில் வெற்றி பெற உதவுவார்கள் என்று நினைக்கிறார்கள். இதேபோல், கர்நாடகா, ஆந்திராவிலும் அவர்களுக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

விஜய், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட்கள், விசிக, காங்கிரஸ், மதிமுக ஆகியோருடன் கூட்டணி அமைப்பது தான் முதன்மையான விருப்பமாக உள்ளது. மற்றொன்று பாஜக – அதிமுக கூட்டணிக்குள் விஜய் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் டிடிவி, ஓபிஎஸ், அண்ணாமலை ஆகியோர் அடங்கிய கூட்டணிக்குள் தான் விஜய் செல்ல வேண்டும்.
இதற்கு நடுவில் உச்சநீதிமன்ற தீர்ப்பு விஜய்க்கு எதிராக வந்தால், விஜய்க்கு இன்னும் அடிவிழும். உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தை வைத்து தவெகவினர் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் அது போலியான செய்தியாகும். மதுரை உயர்நீதிமன்ற அதிகார வரம்புக்குள் வருகிற ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் எப்படி விசாரிக்கலாம்? விஜய் குறித்து எப்படி கருத்து தெரிவிக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் மதுரை உயர்நீதிமன்றம் விசாரித்தது சிபிஐ விசாரணை தொடர்பான வழக்கு மற்றும் முன்ஜாமின் மனுக்கள் ஆகும்.
ஆனால் சென்னையில் நடைபெற்ற வழக்குகள் வேறு. கருத்துக்கள் வேறு. எனவே எஸ்.ஐ.டி அமைத்ததை தவறு என்று உச்சநீதிமன்றம் சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே இவர்கள் சிபிஐ விசாரணை கோருவதற்கு முகாந்திரம் இல்லை. உச்ச நீதிமன்றம் இரு தரப்பிலும் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படும். தவெக தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிற்கவே இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.