spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய், அமித் ஷாவை விமர்சிக்க மாட்டாரா? 24 பேருக்கும் Sorry  சொல்லனுமா? வெளிப்படையாக பேசும் எஸ்.பி.லெட்சுமணன்!

விஜய், அமித் ஷாவை விமர்சிக்க மாட்டாரா? 24 பேருக்கும் Sorry  சொல்லனுமா? வெளிப்படையாக பேசும் எஸ்.பி.லெட்சுமணன்!

-

- Advertisement -

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் வழக்கில் நீதி கிடைப்பதற்கு ஒரே வழி சிபிஐ விசாரணை தான். இதனை விஜய் விமர்சிப்பது, அவருக்கு போதிய புரிதல் இல்லை என்பதை தான் காட்டுகிறது என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

லாக்அப் மரணங்கள் தொடர்பாக விஜய் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்தும், அதில் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய் பொதுவெளிக்கு வர மறுக்கிறார். முக்கிய பிரச்சினைகள் குறித்து கருத்து சொல்ல மாட்டார் என்ற அவர் மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அப்படிபட்ட விஜய், இதுபோன்ற தமிழ்நாடே கவனித்த ஒரு விஷயத்தில், அரசு நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஒரு சிலர் செய்த தவறால், ஒரு உயிரே போன விஷயத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கவும், அரசு தவறு செய்துவிட்டது என்பதை மக்களிடம் எடுத்துச்செல்வதற்கும் இதுபோன்ற போராட்ட வடிவங்கள் அனைத்து அரசியல் கட்சிகளும் செய்யும் ஒன்றுதான். ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று.

அடுத்தபடியாக தன்னுடைய கூச்சம், தயக்கம் எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு தானே முன்னின்று அத்தகைய வெயிலில் வந்து நின்றது வளர்கிற ஒரு கட்சியின் தலைவராக செய்ய வேண்டிய வேலையாக நாம் பாராட்டலாம். ஆனால் இது என்ன பிரச்சினை? அரசின் சிஸ்டம் எப்படி உள்ளது? நீதித்துறை எப்படி இருக்கும்? இதுபோன்ற பிரச்சினைகளில் கடந்த காலங்களில் என்ன நடந்தது? தற்போது என்ன நடந்தால் அது முழுமையான நீதியாக இருக்கும்? என்று கொஞ்சம் ஹோம்வொர்க் செய்துவிட்டு விஜய் போயிருக்கலாம். சாரி வேண்டாம் நீதி வேண்டும் என்று சொல்லிவிட்டு, 24 பேரிடமும் போய் சாரி கேட்க சொல்கிறார். ஒரு தலைவரின் உடல்மொழி, வார்த்தைகள் இரண்டையுமே மக்கள் கவனிப்பார்கள்.

அரசியலுக்கு வந்த பிறகு விஜய் கலந்துகொள்ளும் முதல் போராட்டம் இதுதான். அவர் பேசியதே 2 அல்லது 3 நிமிடங்கள்தான். சொல்லவந்ததை இன்னும் கூர்மையாக சொல்லி இருக்கலாம். அவர் கன்டென்ட்டுக்குள் நாம் ரொம்ப போக வேண்டாம். அங்கு கூடியிருந்த 20 ஆயிரம் பேருக்கு ஏதாவது ஆலோசனைகளை சொல்லி இருக்கலாம். அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? என்று விஜய் கேட்கிறார். காவலர்கள் சிலரால் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டது தான் அடிப்படை வழக்கு. தமிழ்நாடு அரசின் காவல்துறையை சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களை ஒரு சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்கலாம் என்று விஜய் கேட்கிறார். அந்த சிறப்பு விசாரணைக்குழுவும் மாநில அரசுடையதுதான். அஜித்குமார் விவகாரத்தில் விமர்சனங்கள் வரும் என்று எல்லோரும் எதிர் பார்த்தார்கள். ஆனால் விமர்சனங்களை அனுமதிக்கக் கூடாது என்றுதான் சிபிஐ-க்கு அவராக மாற்றினார்.

தமிழ்நாடு காவல் துறையில் என்ன சிறப்பு விசாரணைக் குழு அமைத்தாலும், மீண்டும் அவர்கள்தான் விசாரிப்பார்கள் என்றால் முழுமையான நீதி கிடைக்காது என்று அதே விஜய் சொல்வார். இந்த விமர்சனங்கள் வரக்கூடாது என்றுதான் முதலமைச்சர் சிபிஐக்கு மாற்றினார். அதனால் விஜய் போராட்டக் களத்தை கையில் வைத்துக்கொண்டு சிபிஐக்கு விசாரணைக்கு போய் விட்டது. விசாரணை நேர்மையாக நடக்கும் என்று நம்புகிறேன். விசாரணையை விரைந்து முடித்து மிக விரைவாக நீதி பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதை முடித்திருக்க வேண்டும். இதுபோன்ற சென்சிட்டிவான விஷயங்களில் இன்னும் சற்று தெளிவாக விஜய் போராட்டக்களத்திற்கு வர வேண்டும் என நினைக்கிறேன்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐக்கு வழக்கை அனுப்பியதால், திமுகதான் பாஜகவின் ஆள் என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். விஜய் ஏதோ ஒரு ஆவேசத்தில் சரியான புரிதல் இல்லாமல் பேசிவிட்டார். சிபிஐ கூண்டுக்கிளியாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் விஜய் பாஜகவை திட்டிவிட்டார் பார்த்தீங்களா என்று சொல்வதற்காக தான் இந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்று நினைக்கிறேன். அஜித்குமார் வழக்கில் நீதி கிடைப்பதற்கு ஒரே வழி இங்கே இருப்பவர்கள் வேண்டாம். அடுத்தது சிபிஐதான் இருக்கின்ற ஒரே வழியாகும். வேண்டுமானால் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கலாம். பிரச்சினைக்கு தீர்வுகளோடு சொல்கிறபோது தான் வளர்கிற தலைவரை மக்கள் ரசிப்பார்கள். அஜித்குமார் மரணத்தில் காவலர்களை மட்டும்தான் கைது செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். சிபிஐ நியாயமாக விசாரித்தால் அவர்களுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் யார் என்று தெரிந்துவிட போகிறது. தன் மடியில் கணம் இல்லாததால் தான் முதலமைச்சர் சிபிஐக்கு மாற்றியுள்ளார்.

காவல் மரணங்களை தடுக்க ஒரு தார்மிக அச்சத்தை முதலில் காவல் துறையினருக்கு, ஏற்படுத்த வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை, உள்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரின் கடமையாகும். இதைதான் அரசு செய்திருக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறையினருக்கு அந்த தார்மிக பயத்தை ஏற்படுத்த முதலமைச்சர் தவறிவிட்டார். கோட்டூர்புரம் விஷயத்தில் அரசிடம் தடுமாற்றம் இருந்தது. ஆனால் மடப்புரம் அஜித்குமார் மரணத்தில் அந்த தடுமாற்றம் கூட ஏற்படவில்லை. இந்த விஷயத்தில் என்ன நடந்தாலும் தீர்வு வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று இது தேர்தல் ஆண்டு. மற்றொன்று இதில் திமுகவுக்கு எந்த தொடர்பும் கிடையாது என்பதுதான். அதனால் வழக்கை முதலமைச்சர் சிபிஐக்கு மாற்றினார். இதை தாண்டி தமிழக அரசிடம் நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. இழப்பை சந்தித்த குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதியுதவி, வீட்டுமனைகள் போன்றவை வழங்கப்பட்டன.

சாத்தான்குளம்

திமுக ஆட்சியில் நிகழ்ந்த 24 மரணங்களுக்கும் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஜய் சொல்கிறார். பறிபோன 24 உயிர்களும் ஒன்றுதான் என்பதை மறுக்கவில்லை. ஆனால் யாருடைய கட்டுப்பாட்டில், எந்த சூழலில் அந்த உயிர் போனது என்று பார்க்க வேண்டும். அஜித்குமார் மரணம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. காவல்நிலையத்தில் வைத்துக்கூட அடிக்கவில்லை. கோயில் வளாகத்தில் நடக்கிறபோதுதான் இது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியது. அதனால்தான் முதலமைச்சரே வருத்தம் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் விவகாரத்தில் எடப்பாடி காவல்துறையினரை நியாயப்படுத்தினார். ஆனால் அந்த வழக்கினுடைய தீர்ப்பை விரைந்து வர வைத்திருக்க வேண்டும். 5 ஆண்டுகளாகியும் இன்னும் தீர்ப்பு வரவில்லை. நியாயமான தீர்ப்பு விரைந்து வந்தால்தான் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் தார்மிக பயம் வரும். எனவே அரசியலை எல்லாம் தள்ளிவைத்து விட்டு இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்றால்? அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்து சிபிஐ விசாரணையை விரைந்து முடிக்க வைக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ