திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம்(44). இவர், ஆவடிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் சாலை போடும் பணியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருமுல்லைவாயில், சரஸ்வதி நகர் பிரதான சாலை சுடுகாடு வாசலில் உள்ள சாலையில் தடுப்புகள் அமைத்து, 10 ஊழியர்களுடன் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவ்வழியாக செல்ல வேண்டும் என கூறி, சையது இப்ராஹிமிடம் கூறியுள்ளனர். அதற்குப் பணி நடக்கிறது இந்த வழியாக செல்ல முடியாது என இப்ராஹிம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த மர்ம நபர்கள் தங்களது கூட்டாளிகளை செல்போனில் அழைத்து வந்து தகராறில் ஈடுபட்டதோடு, இப்ராஹிமை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் கை மற்றும் காதில் வெட்டுப்பட்டு பலத்த காயமடைந்த இப்ராஹிம் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நிலையில், அந்த காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருமுல்லைவாயில் போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.