ஆவடி காடுவெட்டி பகுதி கூவம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் – தொற்று நோய் பரவும் அபாயம்
ஆவடி அருகே காடுவெட்டி பகுதியில் கூவம் ஆற்றில் கணக்கில்லா மீன்கள் குவியலாக செத்துமிதக்கின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பருத்திப்பட்டு பாலம் வழியாக செல்லும், காடுவெட்டி கூவம் ஆற்றில் திடிரென்று குவியலாக மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் செத்து கரை ஒதுங்கிய மீன்களை சிலர் எடுத்து விற்பனை செய்து வருவதாக கூறுகின்றனர்.
குறிப்பாக திருவள்ளூர் செவ்வாப்பேட்டை, பட்டாபிராம் தண்டரை வழியாக ஆவடி பருத்திப்பட்டு காடுவெட்டி வழியாக கூவம் ஆறு கடலுக்கு செல்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் காடுவெட்டி கூவம் ஆற்று நீரில் ஏதாவது தனியார் ரசாயன ஆலை கழிவுகள் ஆற்றில் கலந்துள்ளதா அல்லது சமூக விரோதிகள் ஆற்று நீரில் விஷத்தன்மை உள்ள மருந்துகள் ஏதாவது கலந்து உள்ளார்களா என ஆய்வு செய்ய வேண்டும்.
இதனைதொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று காலை கழிவு நீரில் மிதந்துகொண்டிருந்த சுமார் 4 டன் மீன்களை அப்புறப்படுத்தி, நச்சு கலந்த நீரால் மீன்கள் இறந்ததா? என்பதை அறிய மீன்களை ஆய்வுக்கு அனுப்பினர். மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து ரசாயனம் கலந்த கழிவுநீர் கூவத்தில் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.