முதல் முறையாக வெளிநாட்டிற்கு ராணுவ உடை ஏற்றுமதி : ஆவடியில் தொடங்கி வைப்பு
ஆவடியில் மத்திய அரசின் படைதளம் தயாரித்த ராணுவ உடையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு தொடங்கியது.
சென்னையை அடுத்த ஆவடியில் செயல்படும் மத்திய அரசின் படைத்தள உடை உற்பத்தித் தொழிற்சாலையில் ராணுவ உடைகள், உயிர் காக்கும் கவசங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த உடைகளும் உபகரணங்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அணுப்பப்படுகின்றன.
இந்நிலையில் முதல்முறையாக வெளிநாட்டிற்கு ஆவடியில் உற்பத்தி செய்யப்படும் ராணுவ ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதிக்காக உடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனகத்தை ஆவடி படைத்தள பொது மேலாளர் பிஸ்.ரெட்டி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆடைகள் தென் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள சுரிநாம் என்ற நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவித்தார். முதல்கட்டமாக 4 ஆயிரத்து 500 ராணுவ உடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது எனக்கூறினார். அதன் மதிப்பு ரூபாய் 1 கோடியே 71 லட்சம் மதிப்பு எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் இருந்து முதல்முறையாக வெளிநாட்டிற்கு ராணுவ உடை ஏற்றுமதி செய்யப்படுவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.