ஆவடி பட்டாபிராம் அருகே சோராஞ்சேரியில் பாண்டியர்களால் கட்டப்பட்ட 500 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பல ஆண்டுகளுக்கு பின் நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆவடி பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் பாண்டியர்களால் கட்டப்பட்ட அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலானது மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள அதே சொருபத்துடன் காட்சியளிப்பதால் மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில் என்ற சிறப்பையும் பெற்றது.
இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேக விழா தடைப்பட்டு இருந்தது. இந்த வருடம் 20 ஆண்டுகளுக்கு பின்னர் சோரஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் தலைமையில் கும்பாபிஷேக விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன் கணபதி ஓமத்துட்ன் துவங்கி, இன்று ஆலயத்தின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் வேதாசாரிகள் மந்திரங்கள் முழங்க பூர்ணாதி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் மூலவர் மற்றும், ராஜ கோபுரத்தில் பக்தர்களின் நமசிவாயா எனும் மந்திரம் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு நன்னிராட்டு விழா இனிதே நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.