நீச்சல் பயிற்சிக்கு சென்ற 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி
சென்னை அடுத்த பெரிய மேடு மை லேடி பூங்காவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி- படாளத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் குப்தா. இவரது மகன் தேஜா குப்தா (வயது 7). வேப்பேரி தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். சென்னை பெரியமேடு மை லேடி பூங்கா வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறும் கோடைகால நீச்சல் பயிற்சியில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சேர்ந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் தாத்தா சசிகுமாருடன், மை லேடி பூங்காவுக்கு தேஜாகுப்தா வந்தார். பயிற்சியாளர்கள் செந்தில், சுமன் ஆகியோரிடம் தேஜாகுப்தாவை ஒப்படைத்துவிட்டு நீச்சல்குளம் அருகே சசிக்குமார் அமர்ந்திருந்தார். பயிற்சியாளர்கள் 4 -அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் சுமார் 15 சிறுவர்களுக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது பிளாஸ்டிக் ஏணியை பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் தேஜா குப்தா நீரில் மூழ்கியுள்ளார். இதைபார்த்த பயிற்சியாளர் செந்தில் என்பவர் உடனே சிறுவனை மீட்டு
இருசக்கர வாகனத்தில் ராஜீவ் காந்தி அரசுபொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரிய மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பயிற்சியாளர்கள் செந்தில், சுமன் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மை லேடி பூங்காவில் அமைந்துள்ள நீச்சல்குளம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது. நீச்சல் குளத்தை தற்போது தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, முனியாண்டி என்பவர் பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.