பி.எம் ஸ்ரீ திட்டத்தில், தமிழ்நாடு கட்டாயமாக இணைய வேண்டும் என இன்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் அறிவுறுத்தியிருப்பது, தமிழகத்தை வஞ்சிப்பதையே காட்டுகிறது.
கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது பாஜகவுக்கு பிடிக்கவில்லை-மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி.

சென்னை அம்பத்தூர் அடுத்த பாடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், அம்பத்தூர் பகுதி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா, அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல்,மாநில அமைப்பு செயலாளர் ஷேக் முகமது அலி உட்பட பலர் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில்,
இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வியில் முதலிடம் பிடித்துள்ளது. உயர்கல்வி பயிலும் மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது, உயர்ந்த நிலையில் இருக்ககூடிய தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யக்கூடிய, கொடூர என்னத்துடன், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட வேண்டிய 2000 கோடியை மத்திய அரசு நிறுத்தியிருக்கிறது. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவது பாஜகவுக்கு பிடிக்கவில்லை பி.எம்.ஸ்ரீ திட்டத்தில், தமிழ்நாடு கட்டாயமாக இணைய வேண்டும் என இன்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் அறிவுறுத்தியிருப்பது, ஒன்றிய அரசு பாஜக தமிழகத்தை வஞ்சிப்பதையே காட்டுகிறது. இதனை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.