அரசியல் வரலாற்றில் தனக்கென நீங்கா இடம் பிடித்தவர் கர்மவீரர் காமராஜர். தமிழகத்தில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும், ‘காமராஜர் ஆட்சி’யை அடிகோடிட்டுக் காட்டாமல் அரசியல் செய்ய முடியாது. அந்த அளவிற்கு மக்கள் நலத் திட்டங்களால் தமிழகத்தை செப்பனிட்ட காமராஜரின் பிறந்தநாள் இன்று (ஜூலை 15) ‘கல்வி வளர்ச்சி நாளாக’ மாநிலம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை
பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்த நாளையொட்டி, இன்று சென்னையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் விஜய் மலர் தூவி நெகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன், ராஜ்மோகன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். காமராஜர் பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளையும் புகழஞ்சலியையும் பதிவிட்டு வருகின்றனர்.
அண்ணாமலை புகழஞ்சலி
அந்த வகையில், ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் காமராஜரின் புகழைப் போற்றிப் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “எளிமையே அடையாளமாகவும், மக்கள் சேவையே அரசியலாகவும் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினம் இன்று. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன், ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்கி, மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது தொலைநோக்கு பார்வை, பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பதவியை விட மக்கள் நலனையே பெரிதாகக் கருதிச் செயலாற்றி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும் வலுவான அடித்தளத்தை அமைத்த கர்மவீரர் காமராஜரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” என அண்ணாமலை தனது பதிவில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கல்விக்கண்ணைத் திறந்த பெருந்தலைவரின் பிறந்தநாளில், அவரது எளிமையையும் தொலைநோக்குச் சிந்தனையையும் போற்றுவதில் ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்திருக்கிறது.
