Homeசெய்திகள்சென்னைதேர்தல் காலத்தில் "யார் ஜெயிப்பார்கள்?" என்று கணிப்பது மட்டுமே ஊடகத்தின் வேலை கிடையாது - ஏ.எஸ்.பன்னீர்செல்வம்...

தேர்தல் காலத்தில் “யார் ஜெயிப்பார்கள்?” என்று கணிப்பது மட்டுமே ஊடகத்தின் வேலை கிடையாது – ஏ.எஸ்.பன்னீர்செல்வம் கருத்து

-

- Advertisement -

எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஆய்ச்சியர் குறவைக்கூத்து நாடக அரங்கேற்றமும் கருத்தரங்கமும் நிகழ்ச்சி நடைபெற்றது.தேர்தல் காலத்தில் "யார் ஜெயிப்பார்கள்?" என்று கணிப்பது மட்டுமே ஊடகத்தின் வேலை கிடையாது - ஏ.எஸ்.பன்னீர்செல்வம் கருத்துசென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஆபிரகாம் பண்டிதர் அறக்கட்டளை மற்றும் அரசு கலை பண்பாட்டுத்துறை நிதி உதவியுடன் ஆய்ச்சியர் குறவைக்கூத்து நாடக அரங்கேற்றமும் கருத்தரங்கமும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், சென்னை இதழியல் கல்லூரி தலைமை இயக்குனர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், “உலக இலக்கியங்களில் காவியங்கள் பெரும்பாலும் ஆண்களை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளன. ஹோமர் எழுதிய ‘ஒடிசி’ போன்ற கிரேக்க காவியங்கள் ஒரு வீரன் போருக்குச் சென்று திரும்புவதைப் பற்றியே பேசுகின்றன. ஆனால், ஒரு பெண்ணின் துயரம் காவியமாக மாறுவது சிலப்பதிகாரத்தில்தான் நிகழ்ந்தது. சிலப்பதிகாரம் ஒரு நாடக வழக்கை மட்டும் பேசாமல், உலகியல் வழக்கையும் இணைத்துப் பேசும் ஒரு செவ்வியல் இலக்கியமாகும்.

we-r-hiring

மதுரையை எரித்த பின், தீராத துயரத்துடன் சேர நாடு செல்லும் கண்ணகியை, அங்குள்ள வேடுவ குலப் பெண்கள் ஆற்றுப்படுத்துவதற்காக ஆடிய நடனமே ‘ஆய்ச்சியர் குரவை’ ஆகும். ஒரு துயருற்ற மனதைக் கலை எவ்வாறு தேற்றுகிறது என்பதற்கு இதுவே சிறந்த சான்று. இந்த நிகழ்வை மேடையில் கவிதா ராமு குழுவினர் கண்முன் நிறுத்திய விதம் பாராட்டுக்குரியது. நம்முடைய வழிபாட்டு முறைகள் சிந்துவெளி நாகரிகத்துடன் தொடர்புடையவை. சிந்துவெளியில் திமில் உள்ள காளைகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஆனால், அங்கு காளையை அடக்குவது போன்ற முத்திரைகள் இல்லை. அதேசரம், அங்கு பசுக்கள் புனிதமாகப் போற்றப்பட்டன. அந்த மரபின் நீட்சியாகவே முல்லை நிலத்தில் மாயோன் வழிபாடும், ஆய்ச்சியர் குரவையும் அமைந்தன.

சிலப்பதிகாரத்தில் வரும் ‘நப்பின்னே’ எனும் பாத்திரப் படைப்புதான் பிற்கால பக்தி இலக்கியத்தில் ஆண்டாளாக உருவெடுத்தது. தமிழின் தொல் மரபான இந்த மாயோன் வழிபாட்டைத்தான் இன்றும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்று சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ பார்ப்பது எளிதாகிவிட்டது. ஆனால், முறையான பயிற்சியுடன், மரபு மாறாமல் செவ்வியல் கலையை மேடை ஏற்றுபவர்களுக்குப் பொருளாதார ரீதியான ஆதரவும், சமூக அங்கீகாரமும் கிடைப்பது அவசியம். கலையை வாழ்வாதாரமாகக் கொண்ட கலைஞர்களை நாம் கொண்டாட வேண்டும் என பேசினாா்.

நிகழ்ச்சியில் சென்னை இதழியல் கல்லூரி தலைமை இயக்குனர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், “சமூக முதலீடு குறித்து நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால், நாகரிகம் மற்றும் பண்பாட்டு சார்ந்த முதலீடு  குறித்தும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஒரு புத்தகம் எழுதுவதோ அல்லது ஒரு கலை நிகழ்வோ தனிப்பட்ட நபரின் வேலையாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது. அது ஒட்டுமொத்த சமூகத்தின் நாகரிக வளர்ச்சிக்கான முதலீடாக மாற வேண்டும்.

தமிழர் வரலாற்றில் இசைக்குத் தனக்கான ஒரு கட்டமைப்பை வகுத்ததில் சிலப்பதிகாரத்திற்கு முக்கிய பங்குண்டு. நீதியரசர் மகாராஜன் போன்றோர் சிலப்பதிகாரத்தில் உள்ள ஆழமான கருத்துக்களை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றினர். கலைகளை வளர்ப்பதும், அதனைப் பாதுகாப்பதும் ஒரு இனத்தின் அடையாளத்தைப் பேணிக்காக்கும் செயலாகும்.

பத்திரிகைகளின் பணி என்பது வெறும் அரசியல் நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்வதல்ல. தேர்தல் காலத்தில் “யார் ஜெயிப்பார்கள்?” என்று கணிப்பது மட்டுமே ஊடகத்தின் வேலை கிடையாது. கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளைப் பதிவு செய்வது வரலாற்றைப் பாதுகாக்கும் மிகச்சிறந்த பணியாகும். இன்று நடைபெறும் ஒரு கலை நிகழ்ச்சி நாளை வரலாற்றின் ஆவணமாக மாறுகிறது. அதனைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டியது ஊடகங்களின் தார்மீகக் கடமை.

இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளும் இரண்டு முக்கிய நீரோட்டங்கள் போன்றவை. இவை சில நேரங்களில் ஒன்றிணைகின்றன; பல நேரங்களில் தனித்துவமாக இயங்குகின்றன. இந்த இரண்டு மரபுகளையும் நாம் புரிந்துகொள்வதும் அங்கீகரிப்பதும் அவசியம்.

ஒரு நாடு என்பது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்குவது. இதில் அரசு என்பது அதிகாரம் சார்ந்தது என்றால், குடிமக்கள் என்பவர்கள் உரிமைகள் சார்ந்தவர்கள். எனவே, அரசியல் இரைச்சல்களுக்கு நடுவே, பண்பாடு, கலை மற்றும் வரலாற்றைத் தேடிப் பதிவு செய்வதில் பத்திரிகையாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பேசினார்.

முன்னதாக ஆய்ச்சியர் குறவைக்கூத்து நாடக அரங்கேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஒரு மணி நேரமாக நீடித்த சந்திப்பு! என்ன நடந்தது ஸ்டாலின் வீட்டில்? நுழைந்ததும் ப.சி. சொன்ன வார்த்தை! ப்ரியன் நேர்காணல்!

MUST READ