சென்னையில் பைக் ரேஸ் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில், சாலையில் சென்ற சக வாகன ஓட்டி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயப்பேட்டை பேகம் சாகிப் சாலைப் பகுதியை சேர்ந்த 19 வயது தனியார் கல்லூரி மாணவர் சுகைல் மற்றும் அதே பகுதியை சேர்ந்த செல்போன் கடை ஊழியர் சோயல் ஆகியோர் நேற்று இரவு ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ராயப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை நோக்கி பீட்டர்ஸ் மேம்பாலத்தில் இருவரும் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சீறி பாய்ந்து சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. அதனால் இரு வாகனங்களும் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் மேம்பாலத்தின் எதிர் திசையில் தலைகவசம் அணிந்து சென்ற சக வாகன ஓட்டி ஒருவர் மீது பைக் ரேஸில் ஈடுபட்ட வாகனங்களில் ஒன்று மோதி, அந்த நபர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த விபத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் சுகைல் மற்றும் எதிர்திசையில் வந்த ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 49 வயது குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பைக் ரேஸில் ஈடுபட்ட மற்றொரு இளைஞரான சோயல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து ஏற்பட்ட பீட்டர்ஸ் மேம்பாலம் முழுவதும் பரிதாபகரமான காட்சியாக மாறியிருந்தது. பைக் ரேஸில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மோதி சிதறிய நிலையில், அதன் பாகங்கள் பல மீட்டர் தூரம் வரை சாலையில் பரவியிருந்தன. அதேசமயம், மேம்பாலத்தின் சாலையில் இருபுறமும் ரத்தம் ஆறாக ஓடியது போன்ற காட்சி, அங்கு சென்றவர்களை உலுக்கி, பார்த்தவர்களின் மனதையும் பதறச்செய்தது. சில நிமிடங்களில் சம்பவ இடம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலையில் காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தையடுத்து, போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்து நடைபெற்ற பீட்டர்ஸ் மேம்பாலம் நேற்று இரவு போலீசாரால் பேரிகார்டுகள் போடப்பட்டு மூடப்பட்டிருந்த நிலையிலும், இளைஞர்கள் எவ்வாறு அங்கு பைக் ரேஸில் ஈடுபட்டனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த குமரன், டி.நகர் பகுதியில் ஃபேன்சி ஸ்டோர் கடை நடத்தி வந்தவர் எனவும், நேற்று இரவு கடை பணி முடித்து வீடு திரும்பும் வழியில் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தந்தையின் திடீர் மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குமரனின் உறவினர்கள் கூறுகையில், ராயப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் அடிக்கடி சட்டவிரோதமான பைக் ரேஸ்களில் ஈடுபடுவதாகவும், காவல்துறையினர் இதனை சரியாக கண்காணிக்காததால் தான் இப்படி உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், வார இறுதி நாட்களில் பீட்டர்ஸ் மேம்பாலத்தில் இளைஞர்கள் மது அருந்துதல், கஞ்சா புகைத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பல முறை ஆன்லைன் வழியாக புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர்கள், இனிமேனும் காவல்துறையினர் இதுபோன்ற பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், பைக் ரேஸில் ஈடுபட்டு உயிரிழந்த சுகைலின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்ததில், அவர் நீண்ட நாட்களாகவே பைக் ரேஸ் பந்தயங்களில் ஈடுபட்டதும், சென்னையின் பல முக்கிய சாலைகளில் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் நண்பர்களுடன் பைக் ரேஸ் செய்து ரீல்ஸ் வீடியோக்களாக பதிவிட்டு வெளியிட்டு வந்ததும் வெளிச்சம் பெற்றுள்ளது. சமீப நாட்களாக சென்னையில் பைக் ரேஸ்கள் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், பெருநகர காவல் துறை மற்றும் சைபர் கிரைம் பிரிவுகள் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றன என்று கூறப்படும் நிலையில், இளைஞர்கள் தொடர்ந்து சட்டவிரோத பைக் ரேஸ்களில் ஈடுபட்டு அதனை சமூக வலைதளங்களில் பெருமையாகப் பதிவிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மேம்பாலத்தின் மீது நடைபெற்ற இந்த பைக் ரேஸ் விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


