நடிகை மஞ்சு வாரியர் ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கி தற்போது பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் மலையாள மொழியில் மட்டுமல்லாமல் தமிழிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அந்த வகையில் இவர் தமிழில் தனுஷுடன் இணைந்து அசுரன் திரைப்படத்திலும் அஜித் உடன் இணைந்து துணிவு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விடுதலை 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். அதுமட்டுமில்லாமல் லூசிபர் 2 எம்புரான் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி இருக்கிறார். அதாவது மஞ்சு வாரியரை அவரது ரசிகர்கள் பலர் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த பட்டம் தனக்கு வேண்டாம் என்றும் அப்படி சொல்லும் போது தனக்கு அவமானமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தனக்கு எந்த பட்டமும் வேண்டாம் எனவும் ரசிகர்களின் அன்பு மட்டும் போதும் எனவும் தெரிவித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இன்றைய சினிமாவில் கௌரவமாகவும் கொண்டாடப்படும் விஷயமாகவும் பார்க்கப்படும் நிலையில் மஞ்சு வாரியர் தனக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று கூறியிருப்பது ரசிகர்கள் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.