தேசிய விருது வென்ற ஜி.வி. பிரகாஷுக்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் பரிசளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், தற்போது ட்ரெண்டிங் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். அந்த வகையில் இவர், பல பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து பெயரையும், புகழையும் பெற்று வருகிறார். நேற்று (அக்டோபர் 1-ல்) வெளியான ‘இட்லி கடை’ படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைத்திருந்தார். இது தவிர சிவகார்த்திகேயனின் பராசக்தி, சூர்யா 46 போன்ற பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ், தனுஷின் ‘வாத்தி’ படத்தில் இசையமைத்ததற்காக தேசிய விருது வென்றார். இவர் ஏற்கனவே சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்காக தேசிய விருது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டாவது முறையாக தேசிய விருது வென்ற ஜி.வி. பிரகாஷுக்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் பரிசளித்துள்ளார். அதன்படி தான் பயன்படுத்திய பியானோவை பரிசளித்து ஜி.வி. பிரகாஷை வாழ்த்தி உள்ளார் ஏ.ஆர். ரகுமான்.
ஜி.வி. பிரகாஷ் இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, “எனக்கு கிடைத்த மிகச்சிறந்த பரிசு. ஏ.ஆர். ரகுமான் சார் இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றதற்காக இந்த அழகான வெள்ளை கிராண்ட் பியானோவை எனக்கு பரிசளித்துள்ளார். மிக்க நன்றி சார். இது நிறைய அர்த்தம் கொடுக்கிறது. இதைவிட சிறந்த பரிசு வேறு என்ன நான் கேட்க முடியும்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
- Advertisement -


