நடிகர் கமல்ஹாசன், ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் சமீபத்தில் சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இழப்பு திரைப்பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் ரோபோ சங்கரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள், சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, எம்.எஸ. பாஸ்கர், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், வெற்றிமாறன் என பலரும் ரோபோ சங்கரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். தற்போது கமல்ஹாசனும் ரோபோ சங்கரின் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அப்போது கமலை பார்த்ததும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, தனது அப்பாவின் உடலை வைத்திருக்கும் கண்ணாடி பெட்டியை தட்டி தட்டி அப்பா உலகநாயகன் நம்ம வீட்டுக்கு வந்து இருக்காருப்பா. உன் பேரன தூக்கிட்டாருப்பா என்று கதறி அழுதுள்ளார். அதுமட்டுமில்லாமல் கமலிடம், சார் எங்க அப்பாகிட்ட பேசுங்க சார் என்று தேம்பித் தேம்பி அழுதுள்ளார். இதைக் கண்ட கமல் கண்கலங்கியபடி இந்திரஜாவை தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்.

நடிகர் ரோபோ சங்கர், கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்பதும் அவருடைய பேரனுக்கு கமல்ஹாசன் தான் நட்சத்திரன் என்று பெயர் வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.