மனோஜ் பாரதிராஜாவின் மறைவிற்கு வைரமுத்து வெளியிட்ட இரங்கல் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் இமயம் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பாரதிராஜாவின் மகன்தான் மனோஜ் பாரதிராஜா என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1999 இல் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், ஈரநிலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ஈஸ்வரன், மாநாடு, விருமன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் மனோஜ். இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தைத் தவிர மற்ற படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே தன்னுடைய தந்தையைப் போல் இயக்குனராக மாறிவிடலாம் என்ற முயற்சியில் சிகப்பு ரோஜாக்கள் 2 திரைப்படத்தை இயக்கத்திட்டமிட்டார். ஆனால் அந்த படம் நடக்கவில்லை. பின்னர் மார்கழி திங்கள் எனும் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக மாறினார் மனோஜ். மண்மனம் மாறாத கிராமத்து கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இதன்பிறகு தொடர்ந்து பல படங்களை மனோஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அண்மையில் இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு இதை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய மனோஜ் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றுள்ளார். இந்த சிகிச்சை பலனளிக்காமல் போக திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (மார்ச் 25) மாலை உயிரிழந்தார். 48 வயதில் மனோஜ் உயிரிழந்த தகவல் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே மனோஜின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்துடன் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் பதிவினையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மகனே மனோஜ்!
மறைந்து விட்டாயா?பாரதிராஜாவின்
பாதி உயிரே!
பாதிப் பருவத்தில்
பறந்து விட்டாயா?‘சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா’
என்று உனக்கு
அறிமுகப் பாடல் எழுதினேனேசிங்கம் இருக்கப்
பிள்ளைநீ போய்விட்டாயா?உன் தந்தையை
எப்படித் தேற்றுவேன்?“எனக்குக் கடன்… pic.twitter.com/ngB7b1Crel
— வைரமுத்து (@Vairamuthu) March 26, 2025
அந்தப் பதிவில்,”மகனே மனோஜ்! மறைந்து விட்டாயா? பாரதிராஜாவின் பாதி உயிரே! பாதி பருவத்தில் பறந்து விட்டாயா? ‘சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா’ என்று உனக்கு அறிமுகப் பாடல் எழுதினேனே சிங்கம் இருக்கப் பிள்ளைநீ போய்விட்டாயா? உன் தந்தையை எப்படித் தேற்றுவேன்? “எனக்குக் கடன் செய்யக் கடமைப்பட்டவனே! உனக்கு நான் கடன்செய்வது காலத்தின் கொடுமைடா” என்று தகப்பனைத் தவிக்கவிட்டுத் தங்கமே இறந்துவிட்டாயா? உன் கலைக் கனவுகள் கலைந்து விட்டனவா? முதுமை – மரணம் இரண்டும் காலத்தின் கட்டாயம்தான். ஆனால், முதுமை வயதுபார்த்து வருகிறது; மரணம் வயதுபார்த்து வருவதில்லை சாவுக்குக் கண்ணில்லை எங்கள் உறக்கத்தைக் கெடுத்துவிட்டவனே! உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வாசிக்கும்போதே அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.