திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓரமாக நிற்கச் சொன்னதால் ஆத்திரமடைந்து தன்னை தாக்கியதாக காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உள்ள இளைஞர் ஒருவா் குற்றச்சாட்டுயுள்ளாா்.சென்னை திருமுல்லைவாயல் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜார்ஜ் பொன்ராஜ் மில்லர். அமைந்தகரை ரசாக் கார்டன் காந்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலை தனது வீடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஸ்டேஷனரி கடை உரிமையாளர் ஆசாத் நகர் முகமது சபீர் (34) என்பவர், சாதாரண உடையில் இருந்த காவல் ஆய்வாளர் மில்லரை ஓரமாக நில்லுங்கள் எனக் கூறியுள்ளார்.
அதற்கு காவல் ஆய்வாளர் மில்லர் நீ பார்த்து போடா எனக் கூறியதாக தெரிய வருகிறது. பதிலுக்கு சபீரும் நீ ஓரமா போடா என ஆய்வாளர் மில்லரை ஒருமையில் பேசியுள்ளார். ஆத்திரமடைந்த மில்லர், முகமது சபீரை மடக்கி காவல் ஆய்வாளரான என்னிடமே திமிர்த்தனமாக பேசுகிறாயா? எனக் கூறி இரண்டு கைகளையும் பின்னால் கட்டி முகத்தில் குத்தி சட்டையை கிழித்து தான் பயன்படுத்தி வரும் அரசு வாகனத்தில் ஏறி அமரச் சொல்லியதாக கூறப்படுகிறது.
காவல் ஆய்வாளர் என தெரிந்ததும் மன்னிப்பு கேட்டு விட்டு மில்லரின் பிடியிலிருந்து நழுவிய முகமது சபீர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடா்ந்து காவல் துறை உயா் அதிகாாிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
