சேலம் பொன்னம்மாபேட்டையில் காதல் தகராரில் திருநங்கை கொலை. தலைமறைவான நவீனை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் மாநகர் பொன்னம்மாபேட்டை வடக்கு ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்கிற வனிதா(21) என்ற திருநங்கை. இவர் ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு பூக்கடை மற்றும் செல்போன் கடைகளில் வேலைக்கு சென்று வந்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சரவணன் திருநங்கையாக மாறி வந்துள்ளார். இதனையடுத்து ஆறு மாதங்களுக்கு முன்பு மும்பை சென்று திருநங்கைக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து சரவணன் தனது பெயரை வனிதா என மாற்றிக்கொண்டு, பெற்றோர் வீட்டுக்கு செல்லாமல் வடக்கு ரயில்வே காலனி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இரவு நேரங்களில் மட்டும் இந்த வீட்டிற்கு திருநங்கை வனிதா வந்து செல்வாராம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செங்கோட்டை சேர்ந்த நவீன் (25) என்பவருக்கும், திருநங்கை வனிதாவிற்கும் நட்பு ஏற்பட்டு , காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் , வடக்கு ரயில்வே காலனி , வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு திருநங்கை வனிதா மற்றும் நவின் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த நவீன் வீட்டு அருகில் கிடந்த இரும்பு ராடை எடுத்து திருநங்கை வனிதாவின் தலையில் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த திருநங்கை, அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் மரணம் அடைந்தார். இதனை அடுத்து நவீன் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை மகன் சரவணன் இறந்து கிடப்பதை அறிந்த அவரது தந்தை மனோகரன், இது குறித்து உடனடியாக அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே காவல் ஆய்வாளர் பால்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி , விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாநகர துணை ஆணையர் சிவராமன் நேரில் விசாரணை மேற்கொண்டார் பின்னர் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். திருநங்கை சரவணன் கொலை செய்யப்பட்டதை அறிந்த திரளான திருநங்கைகள் வீட்டு பகுதியில் திரண்டு கண்ணீரும் கவலையுமாக இருந்தனர். இந்த கொலை சம்பவம் பொன்னம்மாப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கான காரணம் என்ன என்பதை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் நவீன் செலவிற்கு , திருநங்கை வனிதாவிடம் அவ்வப்போது பணம் கேட்டதால் , வனிதா பலரிடம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இந்த பணத்தை திருப்பி கேட்டபோது நவீனுக்கும் , திருநங்கை வனிதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக நவீன் தான் திருநங்கையை அடித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. தலைமறைவான நவீனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆக்சன் அவதாரத்தில் ஹரிஷ் கல்யாண்…. ‘டீசல்’ பட டீசர் வெளியீடு!