Homeசெய்திகள்க்ரைம்லஞ்சம் ஒழிப்பு போலீசுக்கே லஞ்சம் வழங்கிய கில்லாடி; சேலம் மோட்டார் ஆய்வாளர் கைது

லஞ்சம் ஒழிப்பு போலீசுக்கே லஞ்சம் வழங்கிய கில்லாடி; சேலம் மோட்டார் ஆய்வாளர் கைது

-

லஞ்சம் ஒழிப்பு துறை காவல் ஆய்வாளருக்கு லஞ்சம் வழங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம் அதிரடியாக கைது செய்யப்பட்டார் ..

சேலம் கந்தம்பட்டியில் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக சதாசிவம் பணியாற்றி வருகிறார்.

இவர் சேலம் லஞ்ச ஒழிப்பு துறையில் இன்ஸ்பெக்டராக இருக்கும்
ரவிக்குமாரை தொடர்பு கொண்டு , தாங்கள் எங்களுடைய போக்குவரத்து அலுவலகத்திற்கு சோதனை செய்ய வருவதற்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் , சோதனை நடத்தாமல் இருப்பதற்காக மாதம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வீதம் தருவதாகவும் , முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜிலன்ஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் விஜிலன்ஸ் டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று இரவு 10 மணி அளவில் பணத்தை பெற்றுக் கொள்வதாக கூறி சேலம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடி அருகில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சதாசிவத்தை வரவழைத்தனர். அதன்படி மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம் ஹோட்டலுக்கு வந்து , லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரவிக்குமாரை சந்தித்து பணத்தை கொடுக்க முற்பட்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் நரேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் , மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் லஞ்சம் கொடுக்க கொண்டு வந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதன் பிறகு சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சதாசிவத்தை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சோதனை நடத்தாமல் இருக்க , லஞ்ச ஒழிப்பு துறைக்கு லஞ்சம் வழங்க வந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சப் புழக்கம் அதிகமாக இருப்பதால் அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் திடீரென சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இதனை தடுக்கும் நோக்கத்தில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ