கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மேரி ஸ்டெல்லாவின் மகள் யான்சி (18), பன்னிரண்டாம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு கல்லூரி சேர்வதற்காக காத்திருந்தார். இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பௌசி தீபிகா (17) என்ற சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 19ஆம் தேதி யான்சி சென்னை வந்து அவரது வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 28ஆம் தேதி இரவு, யான்சி மற்றும் பௌசி தீபிகா நண்பர்களுடன் சேர்ந்து கோயம்பேட்டில் உள்ள “சென்னை கேட்வே” ஹோட்டலில் செயல்பட்டு வந்த தனியார் பாருக்கு சென்றுள்ளனர். அங்கு மது அருந்தியதாகக் கூறப்படும் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பவுன்சர்கள் இரு தரப்பினரையும் வெளியேற்றியுள்ளனர். ஆனால் பார் வளாகத்திற்கு வெளியிலும் மோதல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் யான்சி மற்றும் பௌசி தீபிகா இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்தரப்பினர் காரில் பின்தொடர்ந்து வந்து கோயம்பேடு விஜயகாந்த் மேம்பாலம் அருகே அவர்களது வாகனத்தில் மோதியுள்ளனர்.
இந்த தாக்குதலில் யான்சியின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பௌசி தீபிகா பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சிஎம்பிடி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பாலகுரு (21) கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமன் சக்திவேல் என்பவரே காரை ஓட்டி தாக்குதல் நடத்தியதாகவும், காரில் மொத்தம் ஏழு பேர் இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதுவரை பாலகுரு, ஜோஸ்வா (19), கிஷோர் குமார் (19) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மற்ற நபர்கள் இன்னும் கைது செய்யப்படாதது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, “சென்னை கேட்வே” ஹோட்டல் பாரின் எஃப்எல்-3 (FL-3) மதுபான உரிமத்தை தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. பார் வளாகத்தில் மது பரிமாறப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட வன்முறையே இந்த கொடூர சம்பவத்திற்கும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கும் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹோட்டலின் மதுபான அறை மற்றும் இருப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டதுடன், மது விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடவடிக்கை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 17 வயது மற்றும் 18 வயது நிரம்பாத இளம்பெண்கள் எவ்வாறு பாருக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறித்து இதுவரை தெளிவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வயது சரிபார்ப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? சிறார்களுக்கு மது வழங்கப்பட்டதா? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், உயிரிழந்த யான்சி மற்றும் சிகிச்சை பெற்று வரும் பௌசி தீபிகா ஆகியோர் மது அருந்தியிருந்தார்களா என்பதை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பாரின் உரிமை மற்றும் நிர்வாகத்தில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு பின்னணி தொடர்பு இருப்பதாக கூறப்படும் தகவல்கள் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளன. இதன் காரணமாகவே காவல்துறை மற்றும் மதுவிலக்கு துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
உயிரிழந்த யான்சியின் தாய் மேரி ஸ்டெல்லா, காவல் நிலையத்தில் கதறி அழுதபடி, “என் மகளைக் கொன்றவர்களை என் கையில் ஒப்படையுங்கள்; நான் சுட்டுக் கொன்றுவிடுகிறேன்” என வேதனையுடன் தெரிவித்தார். முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளாா். அதேபோல், உயிருக்கு போராடி வரும் பௌசி தீபிகாவின் தாயும், “என் மகளுக்கு நடந்தது நாளை வேறு ஒரு குழந்தைக்கு நடக்கக் கூடாது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளாா்.
பாதிக்கப்பட்ட தரப்பின் வழக்கறிஞரும், சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குப் பின்னரும் காவல்துறை முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். விதிமீறி சிறுமிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதா, சட்டவிரோதமாக பார் செயல்பட்டதா, சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரில் மூவர் மட்டுமே ஏன் கைது செய்யப்பட்டனர், அரசியல் செல்வாக்கு விசாரணையை பாதித்துள்ளதா போன்ற பல்வேறு கேள்விகள் தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன. இந்த வழக்கின் முழு உண்மையும் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
பள்ளி மாணவியிடம் அத்துமீறிய அரசு ஊழியர்…20 ஆண்டுகள் சிறை விதித்த போக்சோ நீதிமன்றம்…
