தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், 14 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அரசு ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த 14 வயது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். பின்னர் அவர் பணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த வழக்கு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கருதிய நீதிபதி காஞ்சனா, ரமேஷுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீட்டு நிதியுதவி வழங்க பரிந்துரையும் நீதிமன்றம் செய்துள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு
