உதகையில் பெண் காவல் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் அனுப்பிய காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் பணி புரியும் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளாா்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் முருகன் (45). இவர் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அலுவலகத்தில் காவலர்களுக்கு பயணப்படிக்கான ரசீது ஒதுக்கி பணம் கொடுத்தல் உள்பட பல்வேறு வகையான எழுத்து பணிகளை இவர் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் வெளி மாவட்டத்திற்கு சென்று வந்த செலவு விவரங்களுக்கான தொகையை தர வலியுறுத்தி, நீலகிரியில் பணிபுரியும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் முருகனிடம் விண்ணப்பத்துடன் ரசீதுகளை கொடுத்துள்ளார். பெண் ஆய்வாளர் கொடுத்த விண்ணப்பத்தில் ஆய்வாளர் தொடர்பு எண்ணையும் பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிது.
இந்நிலையில், காவல் ஆய்வாளரின் தொடர்பு எண்ணை குறித்துக் கொண்ட முருகன், பகல் மற்றும் இரவு நேரங்களில் பெண் ஆய்வாளருக்கு வாட்சப்பில் குட் மார்னிங், குட் நைட் என தொடர்ச்சியாக குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். புதிய எண்ணாக இருந்ததால் ஆய்வாளரும் எந்த பதிலும் கொடுக்காமல் இருந்துள்ளார். அடுத்த ஒரு சில வாரங்களில் பெண் ஆய்வாளரின் whatsapp எண்ணிற்கு முருகன் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஆய்வாளர் இது குறித்து உதகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து உதகை ஊரக காவல் ஆய்வாளர் கமலேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


