திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 10 அரசு பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கட்டமடுவு ஊராட்சிக்குட்பட்ட அயோத்திப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த உணவை உட்கொண்ட 10 மாணவர்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிலம்பரசன் தலைமையிலான மருத்துவக் குழு மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ். வேலு, முதலில் மருத்துவ அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மாணவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், தற்போது அனைத்து மாணவர்களும் நலமுடன் இருப்பதாக வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், பள்ளி வருகையை அதிகரிக்கவும் அறிமுகப்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம் தமிழகத்தின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது. அரசியல் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டு இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து திட்டம் தடையின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவர்களின் உடல்நலனுடன் தொடர்புடைய திட்டம் என்பதால், உணவின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், உணவு தயாரிப்பு மற்றும் விநியோக முறைகளில் கூடுதல் கண்காணிப்பு தேவை என்றும் பெற்றோர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
கோவையில் பிரம்மாண்ட ‘இன்டெக் 2026’ – ஜூன் 4 முதல் தொழில்நுட்ப திருவிழா….
