ஆதாரம் : சொன்னா நம்ப மாட்டீங்க என்ற நூலிலிருந்து.

தந்தை பெரியார் மறைந்து 52 ஆண்டுகள் கழிந்த பின்னும் அவரை மிகக் கடுமையாக இன்றைக்கும் பலர் தாக்கிப் பேசிவருகிறார்கள். இன்னும் சிலரோ பெரியார் பேசாததைக் கூட பெரியார் பேசியதாகச் சொல்லி தங்கள் உள் மன அரிப்பைத் தீர்த்துக்கொள்கிறார்கள். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் சீமான் பெரியாரைக் கடுமையாக எதிர்த்துப் பேசுவதை சிலர் வீரம் என்று சமூக வலைத்தளங்களில் பேசுவதைக் கேட்கும்போது நமக்கு சிரிப்புதான் வருகிறது. ஏனென்றால் தந்தை பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே இது போன்ற கடும் விமர்சனங்களை எதிர்கொண்டவர்தான்.
குறிப்பாகப் பெரியார் வாழ்ந்த காலத்திலேயே அவரைச் சீமானை விடக் கூடுதலாக விமர்சனம் செய்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சின்ன அண்ணாமலை ஆவார். பெரியாரைக் கடுமையாக விமர்சித்தாலும் பெரியாரின் தைரியத்தைக் கண்டு வியந்தவராகவே இருந்தார். பெரியாரை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என விரும்பி திருச்சி பெரியார் மாளிகைக்கு வந்தார். அவரை அய்யா அவர்கள் தள்ளாத வயதிலும் எழுந்து நின்று வரவேற்றார் பெரியாருடனான முதல் சந்திப்பே அதுதான் பின் அவரே பெரியாரிடம் “நான் உங்களைக் கூட்டங்களில் கடுமையாகத் தாக்கிப் பேசிவருகிறேன் மன்னிக்கவேண்டும்” என்றார்.
அதைக்கேட்ட அய்யா பெரியார் ‘இதுக்கு எதுக்கு மன்னிப்பு? உங்க எண்ணத்தை நீங்க சொல்றீங்க எதாயிருந்தாலும் பயப்படாம சொல்லுங்கள்” என்றார். ஆமா கதையெல்லாம் சொல்லிப் பேசுவீங்களாமே! என்று பெரியார் கேட்க அதற்கு சின்ன அண்ணாமலை பேசும் போது நினைவுக்கு சில கதைகள் வரும் அதிகம் படித்தவனல்ல நான் என்றார். அய்யா அவர்கள் எனக்குக் கூட அந்தப் பாணி பிடிக்கும் ரொம்பப் படிச்சவன் மனசு திறந்து பேசமாட்டான் உங்க பேச்சை ஒருநாள் நான் நேரில் கேட்கனுமே என்றார் அய்யா பெரியார்.
அய்யாவுக்கு முன் நான் என்ன பேசமுடியும் என்றார் சின்ன அண்ணாமலை. பெரியாரோ ஏன் என்னைத் தாக்கிப் பேசுங்களேன் கோபப்படமாட்டேன் ரசிப்பேன் என்றார். பின் அய்யாவிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார் சின்ன அண்ணாமலை. அடுத்த ஒரு மாதத்தில் பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் பேச சின்ன அண்ணாமலையை அழைத்தனர். திரா விடர் கழகத் தொண்டர்கள் நிரம்பி வழிந்த கூட்டத்தில் பேச மேடை ஏறினார் சின்ன அண்ணாமலை. மேடைக்கு முன்புறம் பெரியார் அமர்ந்திருந்தார்.
பெரியார் கடவுள் இல்லை என்பவர் நான் கடவுள் உண்டு என்று நினைப்பவன் எனத் தொடங்கி கடுமையாக பெரியாரைத் தாக்கிப் பேசினார். பெரியார் பொறுமையாக அனைத்தையும் கேட்டார் பின் பேச்சை முடித்துவிட்டு அய்யாவிடம் விடைபெற்றுச் செல்ல வந்தபோது அய்யா அவர்கள் ரூபாய் 10 அய் பெட்ரோலுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று அவரிடம் கொடுத்தார்.அவரோ மறுக்க அய்யா அவர்களோ அவர் பையிலே பணத்தை திணித்து வைத்து விடைகொடுத்தார். தன்னை விமர்சிப்பவர்களைக் கூட நேருக்கு நேர் சந்திக்கிற நெஞ்சுரம் கொண்டவர் மட்டுமல்ல அவர்களின் வழிச் செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்புகிற பண்பாளர் அய்யா தந்தை பெரியார்.
இன்றைக்கு அவரை விமரிசிப்பதை வீரமாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார் சீமான். பெரியார் மட்டும் இன்று வாழ்ந்திருந்தால் சீமானை அழைத்துப் பேசச் சொல்லி வழிச் செலவுக்கு 1000 ரூபாய் பணமும் கொடுத்திருப்பார். விமர்சனங்களால் வீழ்த்த முடியாத வீரர் தந்தை பெரியார் என்பதை அரைவேக்காடுகள் உணர்வார்களா?