பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார், இது அம்மாநிலத்தில் முதன்முறையாக பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வழிவகுத்துள்ளது.
பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளத்தின் (JD-U) தலைவரான நிதீஷ் குமார், தனது நீண்ட கால முதலமைச்சர் பதவியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் உணர்ச்சிகரமானதாக இருந்ததாகவும், நிதீஷ் குமாரின் நீண்டகால அரசியல் மற்றும் நிர்வாகப் பயணம் குறித்து அமைச்சர்கள் நெகிழ்ச்சியுடன் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை சகாக்களுக்குத் தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை முடித்த பிறகு, நிதீஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் முறைப்படி வழங்கினார். இவரது ராஜினாமா தற்போதைய ஆட்சியின் முடிவையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தலைமையிலான புதிய ஆட்சி அமைப்பதற்கான தொடக்கத்தையும் குறிக்கிறது.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் 89 எம்.எல்.ஏ-க்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக, தனது தலைவரைத் தேர்ந்தெடுக்க சட்டமன்றக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் இந்த முடிவு மிக முக்கியமானது. கட்சியின் மேலிடம் யாரைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், துணை முதல்வர் சம்ராட் சவுத்ரி முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஐக்கிய ஜனதா தளம் (JD-U), எல்.ஜே.பி (ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 202 எம்.எல்.ஏ-க்களும் கூடித் தங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பார்கள். அதன் பிறகு ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள்.
நிதீஷ் குமார் பதவியில் இருந்து விலகினாலும், பீகார் அரசியலில் அவர் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுவார் என்றும், புதிய அரசியல் மாற்றங்களுக்கு வழிகாட்டும் பாத்திரத்தை வகிப்பார் என்றும் ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!
