வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையில் ஜனநாயக குறைபாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 2 -வது நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிராக, நாடாளுமன்ற வளாகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்ட ஏராளமான எம்.பிக்கள் பதாகைகள் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் ஈடுபட்டனர்.

SIR குறித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அவசரமாக விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் உறுதியாக நின்றதால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் இரண்டாவது நாளாகவும் முடங்கியன. அவை அலுவல்களை ஒத்திவைத்து, முதன்மையாக SIR விவகாரத்தைக் கொண்டு விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாததால், முழக்கங்கள் தொடர்ந்தன.
சோனியா காந்தியின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், “SIR-ஐ உடனடியாக நிறுத்த வேண்டும்”, “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்யுங்கள்” என முழக்கங்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் SIR நடைமுறைக்கு பல சட்ட, ஜனநாயக குறைபாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டி, அதைத் தொடர்வது மக்களின் வாக்குரிமையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினர். மேலும், SIR பணி குறித்து விவாதிக்க கோரி தமிழக எம்.பி.க்கள. திருச்சி சிவா, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் ஆதியோரும் ஒத்திவைப்ப தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர்.
இதன் மத்தியில், மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் எம்.பிக்களை பேச அழைத்தபோதும், எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி முழக்கங்களில் ஈடுபட்டனர். இதனால் அவை செயல்பாடுகள் பலமுறை தடைப்பட்டன.
SIR விவகாரத்தை விவாதத்திற்குக் கொண்டுவரும் வரை போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் முழக்கத்தை அடுத்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


