உத்தரபிரதேசத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி அளித்த காலணிகளை அணிந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அவருக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.
கடந்த ஜூலை 26ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் சுல்தானப்பூருக்கு சென்றிருந்த ராகுல் காந்தி அப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் ராம்சேட் என்பரை சந்தித்து பேசினார். அப்போது ராம்சேட் தனது வேலை குறித்தும், தான் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு, ராகுல் காந்தி புதிதாக தையல் இயந்திரம் ஒன்றை பரிசாக வழங்கினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ராம்சேட் இனி தான் கைகளில் செருப்புகளை தைக்கத் தேவையில்லை என கூறினார். மேலும், தனது கடையில் தைத்த, 2 ஜோடி காலணிகளை ராகுலுக்கு பரிசாக அனுப்பி வைத்தார்.
அந்த காலணிகளை பெற்றுகொண்ட ராகுல்காந்தி, தொழிலாளி ராம்சேட்டுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார். மேலும் புதிய காலணிகளை அணிந்து கொண்டு நடந்துசெல்லும் காட்சிகளை வெளியிட்டுள்ளார்.