அண்ணாமலை மாநில பொறுப்புக்கு தகுதியானவரா?- டிடிவி தினகரன்
அரசியல் வரலாற்று அறிவு ஏதுமின்றி அண்ணாமலை கூறி இருக்கும் கருத்து அவரது அறியாமையையும் அனுபவமற்ற தன்மையும் காட்டுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை வெளிப்படுத்திய கருத்து அவரது அறியாமை, அனுபவமற்ற தனத்தை வெளிக்காட்டுகிறது. அரசியல் பக்குவமின்றி அண்ணாமலை பேசிவருவது கண்டனத்திற்குரியது. தேசிய கட்சியின் மாநில பொறுப்புக்கு தகுதியானவரா? என்பதை அண்ணாமலை சுய பரிசோதனை செய்ய வேண்டும். 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதா ஏராளமான சாதனைகள் செய்துள்ளார். ஜெயலலிதாவின் சாதனைகளை பொறுக்க முடியாமல் சிலர் காழ்ப்புணர்ச்சியில் பேசுகின்றனர். 1996 ஆம் ஆண்டு மட்டும் ஜெயலலிதா மீது 49 வழக்குகள் போட்டனர்.


எத்தனையோ குற்றச்சாட்டுகளையும், பொய் வழக்குகளையும் அவர் மீது எதிர்க்கட்சிகள் வாரி இரைத்த போது, தமிழகத்தை ஆளுகிற பொறுப்பு தமிழக மக்களால் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது. உலக அரசியலை திரும்பி பார்க்க வைத்தவர் ஜெயலலிதா. அரசியலுக்கு புதியவர் என்று அண்ணாமலை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். ஜெயலலிதா பற்றி அறியாமல் அண்ணாமலை பேசுகிறார். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார் அண்ணாமலை. பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு முதலில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் ஜெயலலிதா தான்” என்றார்.


