குடியரசுத் தலைவர் 14 வினாக்களை எழுப்புமாறு குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய ஒன்றிய அரசின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும், அரசியலமைப்பு சட்டத்தை சாரமிழக்கச் செய்யும் செயலாகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயளாலர் இ.ரா.முத்தரசன் கண்டனத்ததை தெரிவித்துள்ளாா்.மேலும் தனது அறிக்கையில் பின்வருமாறு, ”தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்ட திரு ஆர்.என்.ரவி, அவர் பொறுப்பேற்றுக் கொண்ட ஆரம்ப நாளில் (2021 செப்டம்பர் 18) மாநில அரசுக்கும், தமிழ்நாட்டு மக்கள் உணர்வுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு, மாநில உரிமையை மறுப்பதுடன், மக்கள் நலனுக்கு ஆதரவாக செயல்படுவதை முடக்கி வைக்கிறார்.
அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றாமல், அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆளுநரின் சட்ட அத்துமீறலுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், கறுப்புக் கொடி காட்டுதல், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுதல் என பல வடிவங்களில், ஜனநாயக சக்திகளின் தலைமையில் ஒட்டு மொத்த மக்களும் போராடி வருகின்றனர்.
கடந்த 2019 ஆண்டு பொதுத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட, 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து ஆளுநர் பொறுப்புக்கு திரு ஆர்.என்.ரவி பொருத்தமற்றவர் (uஸீயீவீt) என்பதற்கான ஆதாரங்களுடன் குடியரசுத் தலைவரிடம் 2022 நவம்பர் 9 ஆம் தேதி புகார் அளித்து, குடியரசுத் தலைவரின் தலையீட்டை கோரியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநரின் அடாவடி செயல்பாடுகள் குறித்த விரிவான தரவுகளுடன் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் கவனத்துக்கு 2023 ஜூலை மாதம் கடிதம் எழுதி, ஆளுநர், பொறுப்பில் இருந்து திரு ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த தொடர் முயற்சிகளுக்கு பயனில்லாத நிலையில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. தமிழ்நாடு அரசின் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் “முதல் முறை மசோதா அனுப்பப்பட்ட போதே குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கலாமே? மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்துவிட்டு மறு நிறைவேற்றம் செய்த பின், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்? என வினா எழுப்பியதுடன், அரசியலமைப்பு சட்டத்தின்படி நியமனம் பெற்ற ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க செய்யும் அதிகாரம் இல்லை” என்பதை தெளிவுபடுத்தி, ஆளுநர் முதலமைச்சரை அழைத்து, அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என 2023 டிசம்பர் முதல் தேதியில் அறிவுறுத்தியது.இவை அனைத்தும் “விழலுக்கு இறைத்த நீர் போல”வீணான நிலையில், தமிழ்நாடு அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது. இதில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கி, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளில் கூட்டாட்சி கோட்பாடு பின்பற்றப்பட வேண்டிய அவசியத்தை நாடு முழுமைக்கும் தெளிவு படுத்தியது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், சட்டமன்றங்கள் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களை கால வரம்பற்ற முறையில் முடக்கி போட்டு, அவைகளை சாரமிழந்து சாகவிடும் ஜனநாயக விரோத செயல்களை தடுக்கும் வகையில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோர் முடிவெடுக்க கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரவேற்ற தீர்ப்பின் மீது குடியரசுத் தலைவருக்கு வினாக்கள் எழுந்திருப்பது எந்த அடிப்படையில் என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை.
“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்”என்கிறது உலகப் பொதுமறையாம் திருக்குறள்.குடியரசுத் தலைவர் 14 வினாக்களுக்கு விளக்கம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பது, அரசியலமைப்பு சட்டத்தின் சாரத்துக்கு எதிரானது, குடியரசுத் தலைவருக்கு இதுபோன்ற வினாக்களை எழுப்புமாறு குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய ஒன்றிய அரசின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இதனால் ஏற்படும் பேரழிவைத் தடுக்க ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு, மக்கள் பேரெழுச்சி இயக்கங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளாா்.
இனி காவல்துறையின் விசாரணை கண்காணிக்கப்படும்…உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!