spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இளைஞர்களை ஈர்த்த இயக்கம்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இளைஞர்களை ஈர்த்த இயக்கம்!

-

- Advertisement -

எஸ்.ஏ.எஸ்.ஹபிசுல்லா

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இளைஞர்களை ஈர்த்த இயக்கம்!1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், திராவிடர் கழகத்தின் நிர்வாகக் கமிட்டியில் நீடித்த பரபரப்பு… செப்டம்பர் 17ஆம் தேதி இறுதியாக வெடித்து வெளிக்கிளம்பியது. அந்த வெடிப்புக்குத் தலைமை ஏற்றவர், பேரறிஞர் அண்ணா. அப்போது, அவருக்கு வயது சற்றேறக்குறைய 40. பெரியாரிடமிருந்து விலகி அண்ணாவுடன் வந்தவர்களில் கே.கே. நீலமேகம், பெத்தாம்பாளையம் பழனிசாமி என ஒரு சிலர்தான். அன்றைக்கு அண்ணாவின் வயதைவிட சற்று மூத்தவர்கள்.

அந்த நாளிள், எண் 07, பவழக்காரத் தெரு வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டவர்களாகட்டும், தி.மு.க. வரலாற்றின் தொடக்கமான ராபின்சன் பூங்கா முதல் பொதுக்கூட்டமாகட்டும் எங்கும் சூழ்ந்திருந்தவர்கள் இளைஞர்கள்தான். அந்த வயதில் அண்ணாகூட இளையவர்தான். அவருக்கும் இளையவராக அரசியலில் ஆர்வமுடன் ஈடுபட்ட அனைவருமே அவருக்குத் தம்பிகளாக இருந்தவர்கள்தான். அந்தப் பெரும் இளைஞர் பட்டாளத்துக்கு அன்றைக்கெல்லாம் வயது சற்றேறக்குறைய 25 முதல் 30 க்குள் இருக்கலாம்.

we-r-hiring

தி.மு.கழகத்தை 50 ஆண்டுக்காலம் தனது ஆளுமையால் சுட்டி வைத்திருந்த மகத்தான ஆளுமை, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அன்றைக்கு அந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவருக்கு வயது 25. அவரையொத்த வயதுதான் பேராசிரியர் க.அன்பழகன், நாவலராகப் பெயர் எடுத்த நெடுஞ்செழியன் எனப் பலருக்கும். இப்படி, கழகத்தின் தொடக்க கால வரலாறு இளைஞர்களிடமிருந்து எழுதப்பட்டது. பொதுக்குழு, செயற்குழு, பிரச்சாரக் குழு, என எங்கும் இளைஞர்கள்.

அரசியல் அதிகாரம் அற்ற மக்களின் குரலாக, அன்றைக்கு பெரியார் எழுந்தபோது, சமூகத்தின் பெருவாரியான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக ஒரு தலைமுறை எழுந்துவந்தது. அது. இளைய தலைமுறையாக இருந்தது.

தம்பி வா.. தலைமை ஏற்க வா!

1949 தொடக்கவிழா கூட்டம் கோலாகலமாக சென்னையில் நடைபெற்ற அந்த நாட்களுக்குப் பின்னர், அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிளைக் கழகம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்றன. அந்த கிளைக் கழகங்களில் எல்லாம் தி.மு.க. என்கிற பேரியக்கத்தின் கொடிகளை ஏற்றியது ஏறக்குறைய அனைவரும் இளைஞர்களே!

அன்பில் தர்மலிங்கம், கே.ஏ.மதியழகன், மா.பா.சாரதி, எஸ்.எம். அண்ணாமலை, தில்லை வில்லாளன், மதுரை முத்து, வி.எம். ஜான், நாகூர் ஹனிபா, மாயவரம் கிட்டப்பா என அன்றைக்கு தமிழ்நாட்டின் பல திசைகளிலும் பெருவாரியான இளைஞர்களை ஈர்த்த இயக்கமாகத் தி.மு.க. இருந்தது. அவர்கள் செயல்படுவதற்குக் களம் அமைத்துக்கொடுக்கும் இயக்கமாகவும் இருந்தது.

அதற்கேற்ப, “தம்பி வா… தலைமை ஏற்க வா!” என பேரறிஞர் அண்ணா, தி.மு.கழகத்தை வழிநடத்தவேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு இருக்கிறது என பொதுச்செயலாளர் பொறுப்பை நாவலர் கையில் ஒப்படைத்தபோது, நாவலருக்கு வயது 36.

போராட்டக் களங்களில் தலைமை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்ககாலத்தில் இருந்து தற்பொழுது வரை போராட்டக் களங்களில் மிக முக்கிய பொறுப்புகளை இளைஞர்கள் கையில் துணிச்சலாக அளித்திருப்பதை அறியலாம். 1953 ஆம் ஆண்டு, மும்முனைப் போராட்டத்தின்போது கல்லக்குடி போராட்டத்துக்கு தலைமை ஏற்றவர், அன்றைக்கு 30 வயதில் இருந்த கலைஞர். அணி அணியாகக் கைதான பலரும் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், ராஜாஜி வீடு முற்றுகை இங்கெல்லாம். இளையோர் திரளே இருந்தது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இளைஞர்களை ஈர்த்த இயக்கம்!

இளைஞர்களை உயர்த்திப்பிடித்த இயக்கம் என்பதற்கு 1957 ஆம் ஆண்டு, பிரதமர் நேருவுக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தின் நாட்களைக் குறிப்பிடலாம். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள மிக முக்கியமான நிகழ்வான, அன்றைய பிரதமர் நேருவுக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்திற்குத் தலைமை ஏற்று வழிநடத்தினார், அன்றைக்கு பொதுச்செயலாளராக இருந்த நாவலர். அந்தப் போராட்டத்தின்போது, கழக முன்னோடிகள் பலரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கிட்டத்தட்ட 25 முதல் 40 வயதுக்காரர்களால் தொடங்கப்பட்ட கழகம், அடுத்த 10 ஆண்டுகளில் புதிய இளைஞர் படையை உள் இழுத்துக்கொண்டதை அந்தப் போராட்டத்தின்போது காணமுடிகிறது. அந்த நாட்களில், தி.மு.க.வின் துணை மன்றமாக இளைஞர் முன்னேற்ற மன்றம் என்கிற அமைப்பு செயல்பட்டுள்ளது.

அந்த அமைப்பில் செயல்பட்டுவந்த சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மொய்தீன் பிச்சை என்கிற இளைஞர், கருப்புக்கொடி போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அதாவது, 1949ல் கழகத்தில் இளைஞர்களாக இருந்தவர்கள் தீவிர களப்பணியாளர்களாக இயங்கிக்கொண்டிருந்தபோதே, 1960-களில் அடுத்த தலைமுறை இளைஞர்களும் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டதை அந்த வரலாற்றில் இருந்து புரிந்துகொள்ள முடியும்.

இந்தி எதிர்ப்புக் களம்

இந்தி எதிர்ப்பு நீறுபூத்த நெருப்பாகவே இருந்து கொண்டிருந்த தமிழ்நாட்டில், இந்தி திணிப்பு 1963ஆம் ஆண்டில் மீண்டும் தலையெடுத்தபோது, அதை எதிர்க்க புதிய படையணியாகத் திரண்ட இளைஞர்கள் தி.மு.க. தலைமையை ஏற்றனர். அந்த காலகட்டத்தில் தி.மு.கழகம்தான் இளைஞர்களை ஈர்த்த மிகப் பெரிய காந்த சக்தி. பள்ளி, கல்லூரிகளில் அலை அலையாக மாணவர்கள் ஈர்க்கப்பட்டனர்.

இந்தி எதிர்ப்பு இயக்கங்களின் மையமாகப் பள்ளி, கல்லூரிகள் இருந்தன. அப்போது உருவாகிவந்த இளைஞர்கள், இன்றைய கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன். வைகோ, ரகுமான்கான், எல்.கணேசன் ஆகிய தலைவர்கள் அங்கிருந்து உருவானவர்கள். இந்தி எதிர்ப்பு உச்சம் பெற்றபொழுது, அதை நிறுத்துவதற்கு அன்றைய ஒன்றிய அரசு, பேரறிஞர் அண்ணாவிடம் வேண்டுகோள் வைக்கிறது.’எப்படியாவது போராட்டத்தை நிறுத்துங்கள் என்கிறது! ‘என் கையில் போராட்டம் இல்லை. அது இளைஞர்கள் கைகளில் இருக்கிறது’ என அண்ணா பதிலளிக்கிறார். பின்னர், அண்ணாவின் குரலுக்கு அந்த இளையோர் படை கட்டுப்பட்டு நின்றதை வரலாறு சொல்கிறது.

அன்று, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கான சராசரி வயது 18-25-க்குள் என்பது கவனிக்கத்தக்கது. கழகத்தின் தொடக்கம் இளைஞர்களால் ஈர்க்கப்பட்டதைப் போல அடுத்த 10 ஆண்டுகளிலேயே அடுத்தடுத்த தலைமுறை இளைஞர்களையும் ஈர்க்கும் சக்தியாக இருந்ததை 1965 நடவடிக்கைகளில் இருந்து நாம் புரிந்துகொள்ள முடியும்.

1965 காலகட்ட மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகள் அனைவரும் இளைஞர்கள்தான். கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், மயிலாடுதுறை சாரங்கபாணி, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், கோவை தண்டபாணி என மொழிப்போரில் உயிரிழந்த அனைவரும் தி.மு.கழக அரசியல் உணர்வுபெற்றவர்கள்.

இன, மொழி உணர்வில் தி.மு.க. எந்த அளவுக்கு ஊன்றி நின்ற இயக்கம் என்பதை உணர வேண்டுமெனில், இன்றைக்கும் மொழிப்போர்தான் நம் அடையாளம். மொழியைக் காக்க இளைஞர்கள் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த, அரசியல் ரசியல் எழுச்சியை வேறு எந்த வரலாற்றிலும் காணமுடிவதில்லை.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இளைஞர்களை ஈர்த்த இயக்கம்!

கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.

அதற்கு அடுத்த 10 ஆண்டுகளில், 1975ஆம் ஆண்டு எனக் கணக்கிட்டால், அடுத்த தலைமுறையின் எழுச்சியாக இன்றைய கழகத் தலைவர், கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என இயங்கியதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

1968ல் அவர் தொடங்கிய கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. தான் பின்னாட்களில், இளைஞர்களை வழிநடத்திக்கொண்டு செல்வதற்குப் புதிய துணை அணியாக உருவானது.

1980ஆம் ஆண்டு, மதுரை ஜான்சிராணி பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்டபோது, அங்கு இலட்சம் இளைஞர்கள் குழுமியிருந்தனர். 1982ஆம் ஆண்டில், மாநில அளவில் இளைஞர் அணியை ஒருங்கிணைக்க அதன் செயலாளராக நியமிக்கப்பட்ட இன்றைய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தன் இடைவிடா உழைப்பின்மூலம் கழக இளைஞர் அணியை வலிமை வாய்ந்த, ஆற்றல்மிக்க அணியாக உருவாக்கினார்.

தி.மு.க. தாய்க்கழகம் என்றால், அதற்கு அரசியல் ஆற்றல் வாய்ந்த இளைஞர்களை உருவாக்கித் தரும் அமைப்பாக இளைஞர் அணி பெயர் பெற்றது. கழகக் கட்டமைப்பில் புதிய தலைமுறை இளைஞர்களுக்கான இடம் என்ன என்கிற கேள்விக்கு இடமளிக்காத வகையில், இளைஞர் அணி என்கிற புதிய அணி இளைஞர்களை ஈர்த்தது.

1980 -90 காலகட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் மிக உற்சாகமாக இளைஞர் அணியின் சேர்க்கை இருந்ததைப் பார்க்கலாம். இன்றைக்கு மாவட்டச் செயலாளர்களாக, அமைச்சர்களாக இருக்கும் பலரும் அன்று இளைஞர் அணியில் கட்டமைப்பில் இணைந்து பயணித்தவர்கள்.

இளைஞர் அணிச் செயலாளராக ஆனபோது, கழகத் தலைவருக்கு வயது 30, கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா 30, இன்றைய அமைச்சர் ஆவடி நாசர் 25, தி.மு.க கழகத்தின் இந்நாளைய மாவட்டச் செயலாளர்கள் பலரும் அன்று இளைஞர் அணியில் 20-25 வயதில் செயல்பட்டவர்களாகவே இருந்தனர்.

1990-2000 காலகட்டங்களில் இளைஞர் அணியில் இணைந்த இளைஞர்களாக இன்றைக்கு அமைச்சராக இருக்கும் மு.பெ. சாமிநாதன், மக்களவை உறுப்பினர் கே.இ.பிரகாஷ் போன்றோரைக் குறிப்பிடலாம். இன்றைக்கு மாவட்டச் செயலாளர்களாக, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் பலரும் வளர்ந்துவந்த காலகட்டமாக அந்த 10 ஆண்டுகளைப் பார்க்கலாம்.

ஆட்சி நிர்வாகப் பொறுப்புகளில் கழகத்துக்கு ஈர்ப்பது மட்டுமல்ல; ஈர்க்கப்பட்ட இளைஞர்களை வழிநடத்துவதும் அவர்களுக்கு தலைமைத்துவ பொறுப்பு அளித்துப் பயிற்றுவிக்கவும் செய்கிறது திமு. கழகம் 75 ஆண்டுகளைக் கடந்தும் கொள்கை மாறாமல் பயணிப்பதற்கான அடித்தளமாக அதுதான் உள்ளது.

கட்சியின் பொறுப்புகளில் தலைமைக் கழகம் தொடங்கி, கிளைக் கழகம் வரை இளைஞர்கள் நியமிக்கப்படுவதை நடைமுறையாகக் கொண்டுள்ள கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம். அதுபோல ஆட்சி நிர்வாகத்திலும் செயல்படுத்தி இருக்கிறது.

1989ஆம் ஆண்டு, மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர். அப்போது, தி.மு.க. சார்பில் முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தவர்களில் 30 சதவிகிதத்துக்கும் குறையாமல் இளைஞர்கள் இருந்தனர். அமைச்சரவை பொறுப்புகளிலும் நியமிக்கிறார் கலைஞர். அப்போது அமைச்சராகப் பொறுப்பேற்ற க.பொன்முடிக்கு 39 வயது, கே.என்.நேருவுக்கு வயது 37, 2006 அமைச்சரவையில் தங்கம் தென்னரசுவுக்கு வயது 40, 2021 அமைச்சரவையில் மா.மதிவேந்தன், வயது 37. இப்படி ஆட்சி நிர்வாகத்தில் பயிற்சி அளிக்கவும் தயங்கியதில்லை.

முதன்முதலில் நாடாளுமன்றத்துக்கு தி.மு.கழகத்தில் சார்பில் சென்ற ஈ.வெ.கி.சம்பத், தர்மலிங்கம் ஆகியோருக்கு வயது 30-35-க்குள்தான். கழகத்தின் சார்பில் வைகோ முதன்முதலில் நாடாளுமன்றத்துக்கு சென்றபோது, அவருக்கு வயது 34. கழக துணைப் பொதுச்செயலாளர் ஆராசா அவர்கள், மத்திய அமைச்சராக முதன்முதலில் பொறுப்பேற்றபோது 36 வயது. கழக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினரானபோது அவருக்கு வயது 42.

இப்படி ஆட்சி நிர்வாகத்தில் பயிற்சி அளிப்பதிலும் இளைஞர்களை இணைத்து வளர்ந்த கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம்.

2000 -த்துக்குப் பின்னர்…

2000-த்துக்குப் பிறகான காலகட்டத்தை எடுத்துக்கொண்டால், இளையோரை ஈர்க்கும் வகையில் பல பொறுப்புகள் அவர்களின் கைகளுக்குச் செல்கிறது. இளைஞர் அணியில் தொடக்க கால நிர்வாகிகள் பலரும் தலைமைக்கழகப் பொறுப்புகளுக்குச் செல்கையில், இளைஞர் அணிக்குப் புதிய எழுச்சியாக 2007 ஆம் ஆண்டில் நெல்லையில் நடைபெற்ற இளைஞரணி மாநில மாநாட்டினைக் குறிப்பிடலாம். அந்த மாநாடு, இளையோர் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியது. அந்த மாநாட்டுக்கு முன்னர், புதிய தலைமுறை இளைஞர்களுக்கு அரசியல் உணர்வூட்டும் வகையில் கலைஞர் எழுதிய கடிதங்கள், எந்த அரசியல் தலைவர்களிடமும் காண முடியாத கொள்கை உணர்வு, ‘இளையோருக்கு வழி விடுவோம்’ என்றுதான் கலைஞர் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இளைஞர்களை ஈர்த்த இயக்கம்!

அடுத்த 10 ஆண்டுகளில், இளைஞர் அணியின் புதிய ரத்தமாக இளையோரை ஈர்க்கும் வகையில் பொறுப்புக்கு வந்தவர், உதயநிதி ஸ்டாலின் அவர்கள். 2019ஆம் ஆண்டு, அவரது பொறுப்புக்குப் பிறகு இளையோரை ஈர்ப்பதில் கட்டமைப்புரீதியாகவும் கருத்தியல்ரீதியாகவும் பல வேலைகளை ஒருங்கிணைத்துச் செய்துவருகிறது தி.மு.கழகம்.

குறிப்பாக, பேசியும் எழுதியும் வளர்ந்த இயக்கம். அதில்தான் இயக்கத்தின் அச்சாணி உள்ளது என்பதை அறிந்து, தமிழ்நாடு முழுவதில் இருந்தும் தி.மு.க.வுக்கு புதிய ரத்தம் என 200-க்கும் மேற்பட்ட இளம் பேச்சாளர்களை உருவாக்கி, அவர்களுக்குத் தொடர் பயிற்சி அளித்து வருகிறது. கழகத்தின் பத்திரிகையான முரசொலியில், இளைஞர் அணிக்கு என ஒரு பக்கத்தை தேர்ந்த திட்டமிடலுடன் நடத்திவருவது முற்றிலும் புதிய முயற்சியாக உள்ளது. அந்த சிறப்புப் பக்கத்தில் இளைஞர்கள் பலருக்கும் எழுத வாய்ப்பளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ‘மாணவர் பத்திரிகையாளர்’ உருவாக்குவது, திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களை ஊக்குவிப்பது என காலத்தின் தேவைக்கேற்ப மேற்கொள்கின்ற புதிய முயற்சிகள், இளைஞர்களை அரசியல் பயிற்சி பெற்றவர்களாக மாற்றுவதற்கு ஆயத்தப்படுத்துகிறது.

1949 முதல் 2025 வரை 75 ஆண்டுகளைக் கடந்து ஓர் இயக்கம் அதே உயிர்ப்புடன், அதே வீச்சுடன், அதே இலக்குடன் திசை மாறாமல் பயணிக்கிறது என்றால், அந்த இயக்கத்துக்கு காலந்தோறும் கிடைத்த புது சக்திகள்தான் அடிப்படை காரணமாக இருக்க முடியும். அந்த வகையில் அதை முழுமையாகக் கொண்ட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். இந்திய அளவில் வேறு எந்த அரசியல் கட்சியிலும் இப்படியான நீண்ட இளையோர் தொடர்ச்சியைப் பார்க்க முடியவில்லை.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - இளைஞர்களை ஈர்த்த இயக்கம்!

அந்தவகையில் திராவிட முன்னேற்றக் கழகம் இளைஞர்களின் இயக்கமாக, இளைஞர்களுக்கான இயக்கமாக இருந்துவருகிறது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாணவர்கள் கழகத்தின் பக்கம்! கழகம் மாணவரக்ள் பக்கம்!

MUST READ