கா.அமுதரசன்

தமிழ்நாட்டில் மாணவர்களைத் தேர்தல் அரசியல் சக்தியாக மாற்றிய முதல் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். 1964 – 65 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் கையில் அளித்ததும், மாணவர்களின் உயிர்த்தியாகமும், மாணவர்களில் இருந்து உருவான தலைவர்கள் என தி.மு.கழக வரலாற்றில் மாணவர்களின் பங்கு, மிகமிக அதிகம்.

75 ஆண்டுகளைக் கடந்தும், இப்போதும் மாணவர்களை வலிமையான அரசியல் சக்தியாக மாற்றுவதில் முன்னிலையில் இருக்கும் அமைப்பு தி.மு.கழக மாணவரணி மட்டும்தான். 50 லட்சம் மாணவர்கள் கொண்ட பேரமைப்பாகத் தி.மு.க. மாணவரணி உள்ளது. நீட் நுழைவுத் தேர்வு, ஆளுநரால் உருவாக்கப்படும் சிக்கல்கள் என அரசியல் விவகாரங்களிலும், பள்ளி, கல்லூரி விடுதிகளில் உணவு, தண்ணீர்ப் பிரச்சினை வரை தலையிட்டுத் தீர்வு காணும் அமைப்பாக, மாணவர்களிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை உருவாக்கும் அமைப்பாக, தி.மு.க. மாணவரணி உள்ளது.
மாணவர்களும் தி.மு.க.வும் என்கிற வரலாற்றை எழுத வேண்டுமெனில், 1967 ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னும், ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னரும் என இரண்டு காலகட்டங்களில் பிரித்துப்பார்க்க வேண்டும். அந்த வரலாற்றினை தி.மு.க. தொடங்குவதற்கு முன்பிருந்தே தொட்டுச்செல்வதுதான் சரியாக இருக்கும். ஏனென்றால், திராவிட இயக்கம் அல்லது திராவிட சிந்தனை என்பதே ‘அனைவருக்குமான கல்வி என்ற மையப் புள்ளியிலிருந்தே உருவாகியது. அதாவது, நீதிக்கட்சி என்கிற அமைப்பின் மையப்புள்ளியே ‘திராவிடர் மாணவர் இல்லம்’ தான்.
நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் நடேசனார், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை வந்து தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காகத் ‘திராவிடர் இல்லம்’ எனும் மாணவர் விடுதியைத் தொடங்கினார். தொடர்ந்து நீதிக்கட்சியின் தலைவர்கள் அனைவரும், கல்வி மட்டுமே இந்த சமுதாயத்தை மாற்றும் என்கிற இலக்கில், ‘மாணவர்களையே சமுதாயப் புரட்சிக்கு’ நம்பிக்கையுடன் தயார்படுத்தினர்.
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராக இருந்த திராவிட இயக்க முன்னோடி, சர்.பிட்டி.தியாகராயர் 1920 செப்டம்பர் 19ஆம் தேதி மாணவர்களுக்கான நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், பள்ளி மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றினார். நாட்டிலேயே முதல்முறையாக சென்னை மாநகராட்சியில்தான் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
திராவிட மாணவர் மன்றம்
பேரறிஞர் அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, 1943ஆம் ஆண்டு, திராவிட மாணவர் கழகம் தொடங்கப்பட்டது. தவமணி ராசன், கருணானந்தம் ஆகியோர் முதல் திராவிட மாணவர் மாநாட்டைக் கூட்டினர். விடுமுறைக் காலங்களை மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளில் செலவிடுவதைத் தவிர்த்து, பகுத்தறிவுப் பிரச்சாரங்களைக் கற்கவும், இன உணர்ச்சி, மொழிப்பற்று மற்றும் இலக்கியங்களைப் படிப்பதிலும் ஆர்வமாக ஈடுபட்டனர். பெரியார் மாணவர்களுக்காகப் பல இடங்களில் பயிற்சிப் பாசறை கூட்டங்களை நடத்தியிருக்கிறார்.
தி.மு.க. உருவானபோது, அது மாணவர்களின் பெருவாரியான பங்கேற்புடனே சாத்தியமானது. 1950ஆம் ஆண்டு, வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக்கு எதிராக, இரண்டு பார்ப்பன மாணவர்கள் வழக்கு தொடுத்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று, நீதிக்கட்சி கால அரசாணை செல்லாது என்ற தீர்ப்பைப் பெற்றனர். பல காலம் போராடிப் பெற்ற வகுப்பு வாரி உரிமையைக் காக்க, களத்தில் இறங்கியது மாணவர்கள்தான்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியும் போராட்ட மையக் களங்களாக இருந்தன. சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 144 தடை உத்தரவையும் மீறி எழுச்சிமிகு மையக் போராட்டங்களை நடத்தினர். அப்போது, இரண்டு துருவங்களாக இருந்த திராவிடர் கழகமும் தி.மு.க.வும், இரட்டைக் குழல் துப்பாக்கியாக இயங்கின.
‘சமநீதி உரிமையைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன் தி.மு.க. மாணவர் படை, வீதி வீதியாகக் கண்டனக் கூட்டங்களை முன்னெடுத்தது. சென்னை நகரில் மக்கள் தன்னெழுச்சியாகக் கண்டன ஊர்வலங்களில் பங்கேற்றனர். மதுரை, அறந்தாங்கி, திருவண்ணாமலை, சிவகங்கை, கோவை, வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, சமூக நீதிக்கான போராட்டங்களில் பங்கேற்றனர்.

தி.மு.க. மாணவர் மாநாடு
1950ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி, சென்னை செயின்ட் மேரி மண்டபத்தில் தி.மு.க. மாணவர் மாநாடு நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா தொடங்கிவைத்த இந்த மாநாட்டில் நாவலர், ஈ.வெ.கி. சம்பத், கலைஞர் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர். 1953ஆம் ஆண்டில் கழகம் முன்னெடுத்த மும்முனைப் போராட்ட வரலாறு அன்றைய தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த இளம் தலைமுறைக்குமானது.
அப்போது, சென்னை மாநில முதலமைச்சராக இருந்த ராஜாஜி அதாவது, 6 வயது முதல் 11 வயது வரை உள்ள சிறுவர்கள் பாதி நாள் அவர்கள், புதிய கல்விக்கொள்கைத் திட்டத்தைக் கொண்டுவந்தார். படிக்க வேண்டும், பாதி நாள் அவர்களுடைய குலத்தொழிலைக் கற்க வேண்டும் என்றார். அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த மாணவர் அணியினர். போராட்டத்தில் குதித்தனர். சேலத்தில் நாவலர் தலைமையிலும், திருச்சியில் கலைஞர் தலைமையிலும், திருவொற்றியூரில் என்.வி.நடராஜன் தலைமையிலும் என தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் திரண்டு, ஊர்வலங்களை நடத்தி, அந்தந்தத் மன்ற உறுப்பினர்களிடம் குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக தொகுதி சட்டமன்ற சட்டமன்றத்தில் பேசும்படி கோரிக்கை வைத்தனர்.
புதிய கல்வித்திட்டத்தை எதிர்த்து முதலமைச்சர் ராஜாஜி இல்லம் முன்பு ஈ.வெ.கி.சம்பத் மறியலில் ஈடுபடுவது என முடிவுசெய்தது கழகம். போராட்டத் திட்டம் பற்றி அறிந்த அரசு, பொதுச்செயலாளர் அண்ணா உள்ளிட்ட முக்கியமானவர்களைக் கைதுசெய்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது கடுமையான தாக்குதல்கள் நடந்தன. சாலை மறியல், ரயில் மறியல் என நடந்த போராட்டத்தில், தூத்துக்குடியில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்த தமிழ்நாடே கொந்தளித்தது. ராஜாஜி எங்கு சென்றாலும் தி.மு.க. மாணவரணியினர் கருப்புக்கொடி காட்டினர்.
அந்த குலதர்மக் கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தி, தடியடிபட்டு, கண்ணீர்ப் புகைகளுக்கு இரையாகி, சிறையில் வாடி தி.மு.க.வும், அதன் மாணவர் அணியினரும் அத்திட்டத்தைத் தடுத்தது மட்டுமின்றி, ராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் அளவிற்கு வெற்றிபெற்றனர். ஜூலை 1953ல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், 1954 மே மாதம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. அந்த வரலாறு அறியாதவர்கள்தான் இன்று மீண்டும் புதிய கல்விக்கொள்கை என்கிற பெயரிலும், விஸ்வர்கர்மா யோஜனா என்கிற பெயரிலும் புதிய புதிய பெயர்களில் குலக் கல்வியைத் திணிக்கப் பார்க்கின்றனர்.
கொல்லர், தச்சர், காலணி தைப்பவர், மண்பாண்டங்கள் செய்பவர், முடி திருத்துவோர் போன்ற பரம்பரைத் தொழில் செய்வோரின் அடுத்த தலைமுறைக்குப் பயிற்சியும் கருவிகளும் வழங்கி, சாதிய அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தத் திட்டமிடுகின்றனர். இந்தத் திட்டத்தை ஒருபோதும் தமிழ்நாட்டில் வேரூன்ற விடமாட்டோம் என திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றும் அதே குரலை முழங்குகிறார்.
மாணவர் முன்னேற்றக் கழகம்
1955ஆம் ஆண்டில், கழகத்தின் மாணவர் அமைப்பாகத் திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு, சென்னை கோகலே மண்டபத்தில் அதன் மாநாடு நடைபெற்றுள்ளது. அண்ணா, நாவலர், என்.வி.என். எனப் பலரும் சிறப்புரை ஆற்றியுள்ளனர். அப்போது, கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த நாவலர் பேசுகையில், ‘தி.மு.க. நேரடியாகவே அரசியலில் பங்குகொள்கிறது. ஆனால், மாணவர் கழகம் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் இறங்காது. மாணவர் கழகமும் அதன் உறுப்பினர்களும் தங்களது கல்வி கெடாத முறையில், படிப்பு பாழ்பட்டுப் போய்விடாத வகையில், நாட்டுக்குத் தேவையான நல்ல பணிகளில் ஈடுபடுவர்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
1965ஆம் ஆண்டில், இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தின் மையம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை பச்சையப்பன் கல்லூரி, மதுரை தியாகராயர் கல்லூரி என மாணவர்களை வீதிக்கு அழைத்துவந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர், சிவகங்கை ராஜேந்திரன் குண்டடிக்கு முதல் பலி. அந்தப் போராட்டமே, தி.மு.க.வின் போர்க்குணத்தை, தாய்மொழி உணர்வை, உலக்குக்குக் காட்டியது. மாணவர்கள் கையில்தான் போராட்டம் இருக்கிறது என்றார், அன்று அண்ணா. இப்படி மாணவர்களை அரசியல் மயப்படுத்திய இயக்கமாக தி.மு.க. இருந்தது.
1967-க்குப் பின்னர்
தமிழ்நாட்டின் பல இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள் வேண்டும் என்று கழகத்தின் பல மாவட்ட மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்த பின்னர், அந்தத் தீர்மானங்களை எல்லாம் செயல்படுத்தியது, தி.மு.கழகம். பள்ளிகள் கல்லூரிகள் புதிதாக திறந்தது மட்டுமல்ல; கல்லூரி அணுகலை எளிதாக்க, போக்குவரத்து சேவையை நாட்டுடமையாக்கினார் கலைஞர். தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, கல்லூரிக் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டன. விடுதிகள் அமைத்துத் தந்து, கல்வி வாசனையே அற்ற மக்களைக் கல்வி நிறுவனங்கள் பக்கம் திருப்பினார் கலைஞர்.
நாட்டிலேயே முதல்முறையாகத் தகவல் தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கி, உலக அளவில் வளர்ந்துவந்த தொழில்நுட்பக் கல்வியை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு முதலிலேயே கொண்டுவந்து சேர்த்தது, தி.மு.கழகம்தான். கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை நீக்க, சமச்சீர் கல்வி கொண்டுவந்தார். அதற்காகத் தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை சட்டம் 2010ல் இயற்றப்பட்டது. பள்ளி மாணவருக்குச் சீருடை, பாடநூல், நோட்டுகள், புத்தகப் பை, காலணி, வரைபடம், மிதிவண்டி, மடிக்கணினி, கட்டணமில்லா பேருந்துப் பயணம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் மாணவர்களுக்குப் பல சலுகைகளை அளித்து, அவர்களின் சுற்றல் திறனுக்குத் துணையாக இருந்துவருகிறது. தி.மு.கழகம்
சமூகத்தில் அதிக புறக்கணிப்புக்கு ஆளாகும் மகளிர் வாழ்வில் மாற்றத்தை நிகழ்த்திட உருவான திட்டம்தான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம். 8ஆம் வகுப்பு வரை படித்தால், திருமணத்துக்கு நிதி உதவி எனத் தொடங்கிய திட்டம், இன்று பெண்கள் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றியுள்ளது. அந்தக் கட்டமைப்பை விரிவாக்கவும், தக்கவைக்கவும் உருவான ‘புதுமைப்பெண் திட்டம்’ இளம் பெண்களின் கல்விக்கான பொருளாதாரத் தடைகளை உடைக்கிறது.
2021ல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தில், புதிய சிந்தனையாக ‘திராவிட மாடல்’ என ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது, தி.மு.க. வியக்கத்தக்க வகையில், பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தியது. இதன்மூலம், குழந்தைகள் காலை உணவைத் தவிர்ப்பது குறைந்து, கற்றல் மேம்பட்டுள்ளது. கூடவே, வேலைக்குச் செல்லும் பெண்களின் சுமையும் குறைந்துள்ளது.
மாணவச் செல்வங்களை உலகத் தரத்திற்கு உயர்த்திடும் நோக்கத்தில், திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்திய தி.மு.க. அரசு 2022ஆம் ஆண்டு தொடங்கிய, ‘நான் முதல்வன்’ திட்டம் ஒரு புத்தாக்க முயற்சி. அந்தத் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளுடன் வேலைவாய்ப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் என கற்பித்தலில் புதியவற்றைச் செயல்படுத்திப் பார்க்கிறது. ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின்மூலம் 3.28 லட்சம் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கிவருகிறது. ‘அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டம்’ என வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்விக் கனவை சாத்தியமாக்கி இருக்கிறது.

இளைஞர் நலனுக்கும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கும் என தனித் துறையை உருவாக்கியவர், கலைஞர். 2021ஆம் ஆண்டில் இருந்து அந்தத் துறையின்மூலம் நிகழ்த்தப்பட்டுவரும் சாதனைகள் விரிவாக பேசப்படவேண்டியவை. கிராமப்புற அளவில் விளையாட்டுத் துறை கட்டமைப்புகளை மேம்படுத்த 5000 கிரமப்புற பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி இருக்கிறது அரசு. தமிழ்நாட்டில் உள்ள 12,500-க்கும் அதிகமான கிராம ஊராட்சிகளுக்கு, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கியுள்ளது திராவிட மாடல் அரசு.
திறமையான விளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஏழ்மையின் காரணமாக முடங்கிவிடக் கூடாது என்னும் உயரிய நோக்கத்தோடு, 2023ல், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையைத் தொடங்கியது, திராவிட மாடல் அரசு. இந்த அறக்கட்டளைமூலம் 2025 மே மாதம் வரை, 680 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.17 கோடி அளவிற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்கள் மூலம் 174 பதக்கங்கள் தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளன என்பதும் பெருமைக்குரியது. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள், 4,617 விளையாட்டு வீரர்களுக்கு 152.52 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை என விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாட்டு மாணவர்களைப் புதிய உச்சம் தொடவைத்திருக்கிறது, திராவிட மாடல் அரசு.
ஆட்சிக்கு, அதிகாரத்துக்குப் பின்னர், கல்விக் கட்டமைப்புரீதியான மாற்றங்கள், உயர்கல்வி வாய்ப்புகள் என மாணவர் நலனில் அக்கறை கொண்டிருந்த தி.மு.க, அதே காலகட்டத்தில், ஒன்றிய அரசு மாணவர் நலன்களுக்கு எதிராக அமல்படுத்தத் துடிக்கும் அனைத்து திட்டங்களுக்கும் எதிராகக் களத்தில் நின்றுள்ளது. விஸ்வகர்மா யோஜனா என குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவத்துக்கு எதிராக ஆட்சியில் இருக்கும்போதும் எதிர்ப்பை மேற்கொள்கிறது.
மருத்துவக் கல்வியில் சமூக நீதி மறுக்கப்படும் வகையில் நீட் என்கிற நுழைவுத் தேர்வினைக் கொண்டுவந்தபோது, அதற்கு எதிராக ஆட்சியில் இல்லாத காலங்களில் மிகப் பெரிய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. நீதிமன்றங்களை அணுகி, சட்டப்போராட்டமும் நடத்தியிருக்கிறது.
நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தில் முதலமைச்சராகக் கையெழுத்திட்டவர், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். புதிய கல்விக்கொள்கை 2020 என்கிற வகையில், சமூக நீதி கட்டமைப்பைச் சிதைக்கும் கல்விக்கொள்கையை, இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தத் துடிக்கிறது, ஒன்றிய பா.ஜ.க அரசு. ஆனால், அதை ஏற்காமல் மறுப்பதுடன், கல்வியில் மாநில உரிமைக்கான இடத்தை விட்டுத்தரவும் தயாராக இல்லை, தமிழ்நாடு அரசு. அதனால், மாநிலத்துக்கு வரவேண்டிய பங்களிப்பு நிதி மறுக்கப்படும் சூழலிலும், தமிழ்நாட்டு மாணவர் நலனில் உறுதியாக நிற்கிறது தி.மு.கழக அரசு.

தி.மு.கழக மாணவர் அணி என்றால், மாணவர்களின் அரசியல் பயிற்சிக் களம் என்பதாக இன்று பெயர் பெற்றுள்ளது. தி.மு.க. ஓங்கி வளர்ந்த ஆலமரத்தைப் போன்றது. மாணவர் கழகம் அந்த ஆலமரத்தினின்று தொங்கிக்கொண்டிருக்கிற உறுதியான விழுதுகளுள் ஒன்று. கல்வி ஒன்றே அழியாச்செல்வம் என்ற மகத்தான உண்மையை உணர்ந்து, அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதற்கான புரட்சியை நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கியது திராவிட இயக்கம்.
அதன் தொடர்ச்சிக்கு நிறைய விலை கொடுத்துள்ளது, தி.மு.கழகம். இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில், 60 ஆண்டுகளுக்கு முன்பு நிர்க்கதியாய் இருந்த தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அரசியல் உணர்வை ஊட்டி, அந்த அரசியலை தமிழ்நாட்டின் திசைவழியாக்கி, அந்தத் திசைவழியில் பயணித்து ஆட்சியமைத்து, அதிகாரத்தைக் கைப்பற்றி, அனைத்து வாய்ப்புகளையும் வளங்களையும் மாணவர்களுக்கு உருவாக்கித் தந்த மாபெரும் இயக்கமாக, திராவிட முன்னேற்றக் கழகம் வரலாற்றில் மிளிர்கிறது.
தங்களை உயர்த்தி, தமிழ்நாட்டை உயர்த்திய திராவிட முன்னேற்றக் கழகத்தை அன்றுபோல இன்றும் தாங்கி நிற்கிறது, மாணவர் படை! கழகம் மாணவர் பக்கம், மாணவர்கள் கழகத்தின் பக்கம்!


