9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 9 மணி நிலவரப்படி 10.35% வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடாளுமன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. 2-ம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி 88 தொகுதிகளுக்கும், 93 தொகுதிகளுக்கு 3-ம் கட்டமாக மே 7ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடித்துள்ளது.
இதனை அடுத்து 4-ம் கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம், பிகார், ஒடிசா, மேற்குவங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசைகள் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்கு சாவடிகள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். சாவடிகள் அனைத்தும் சிசிடிவி மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
பீகார் மாநிலம் லக்கி சாராய் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் தனது வாக்கினை பதிவு செய்தார். மக்கள் அனைவரும் அதிக அளவில் ஒன்று திரண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 4-ம் கட்ட மக்களவை தேர்தலில் 96 தொகுதிகளுக்கு மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக சார்பில் சுப்ரதா பதக், மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் ஆளும் திரிணமூல் சார்பில் மஹுவா மொய்த்ராவும், பாஜக சர்பில் அம்ரிதா ராயும் போட்டியிடுகின்றனர்.
மேற்கு வங்கத்தின் பகரம்பூரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரர் யூசூப் பதான், காங்கிரஸ் சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பாஜக சார்பில் நிர்மல் சந்திர சகா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
பீகாரின் பெகுசராய் தொகுதியில் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங் போட்டியிடுகிறார். தெலங்கானாவில் ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி களம் காண்கிறார். நடிகை மாதவி லதா பாஜக சார்பில் களமிறங்கி உள்ளார்.