ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் அண்ணாமலை – ஆர்.எஸ்.பாரதி
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்து வருகிறார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “எம்ஜிஆர், ஜெயலலிதா எவ்வளவு முயற்சி செய்தும் வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை. முதல்வரை களங்கப்படுத்தும் அண்ணாமலையின் எண்ணம் ஈடேறாது.சிபிஐ அமைப்பை கண்டு திமுக பயப்படாது. திமுக சொத்து பட்டியலுக்கான ஆதாரங்களை 15 நாட்களில் அண்ணாமலை வெளியிட வேண்டும். யார் யார் பெயரில் அவதூறு பரப்பினாரோ அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.
திமுகவிற்கு 1,408 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளது எனக் கூறி உள்ளீர்கள் என கூறுகிறார், அதற்கான ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும். அண்ணாமலைக்கு எப்போதும் உண்மை சொல்லி பழக்கமில்லை. அண்ணாமலை தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களுக்கு சுற்றுப் பயணம் செய்வார். அண்ணாமலையின் அறியாமையை பார்த்தால் ஐபிஎஸ் எப்படி ஆனார் என சந்தேகம் வருகிறது. அண்ணாமலை போன்ற ஒருவர் தலைவராக இருந்தால்தான் திமுகவுக்கு நல்லது எனவே அவரை மாற்றக்கூடாது” எனக் கூறினார்.