தமிழக முதல்வர் தலைமையில் தொகுதி மறுவரை விவகாரத்தில் மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்த இக்கூட்டத்தை திறம்பட நடத்தி முடித்ததன் வழியே மாநிலம் தாண்டி தேசிய அளவில் ஆளும் அரசுக்கு எதிரான தன் அறப்போரை தொடங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.நாடாளுமன்ற தொகுதி மறுவரை விவகாரத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக மாநில முதல்வர்களை ஒன்றினைக்கும் இணைப்பு பாலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவெடுத்திருந்தார். அதில் அவர் வெற்றியும் கண்டிருக்கிறார் என்பதற்கு மார்ச் 22 அன்று சென்னையில் நடந்து முடிந்த மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டமே சான்று.
தமிழக முதல்வர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கேரள முதல்வர் பிணராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவத் மான், கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஒடிசா மாநில முன்னாள் முதல்வரான நவீன் பட்நாயக் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். இக்கூட்டத்தை திறம்பட நடத்தி முடித்ததன் வழியே மாநிலம் தாண்டி தேசிய அளவில் ஆளும் அரசுக்கு எதிரான தன் அறப்போரை தொடங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தொகுதி மறுவரை என்பது மாநிலத்தின் மக்கள் தொகைக்கேற்ப நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளை கூட்டி குறைத்து சீரமைப்பது ஆகும். இதனால் தமிழ்நாடு போன்ற சமூக நலத்திட்டங்களால் மக்கள்தொகையை கட்டுக்குள் கொண்டு வந்த மாநிலங்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.ஆளும் பாஜக அரசு வலியுறுத்தும் தொகுதி மறுசீரமைப்பு செயலுக்கு வரும் பட்சத்தில் தென் இந்திய மாநிலங்களில் கணிசமான அளவில் நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்படும், இதனால் மத்தியில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரம் குறையவும் வாய்ப்பிருக்கிறது.
இந்த அபாயத்தை உணர்ந்தே நாட்டிலேயே முதலாவதாக இந்த விவகாரத்தை கையிலெடுத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இதற்காக தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியவர் இப்போது பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்களையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி முடித்திருக்கிறார்.
இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் தொகுதி மறுவரைக்கு எதிராக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அதன் பின்னர் சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மக்கள் தொகையை குறைத்த மாநிலங்கள் தண்டிக்கப்படாத வகையில் அரசியல் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதோடு சேர்த்து அடுத்த 25 வருடங்களுக்கு நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றப்படக்கூடாது என்ற தீர்மானமும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இ.பி.எஸ் விவசாயி என்றால்… நாங்கள் யார்? கடுப்பான துரைமுருகன்: குலுங்கி குலுக்கி சிரித்த முதல்வர்