100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு! ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரை நீக்குவதற்கு, ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்புணர்வே காரணம்! மாநில அரசுகளின் வரி வருவாயைக் குறைத்துவிட்டு, நிதிச் சுமையை ஏற்றுவதா? ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளாா்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நம் நாட்டில் விவசாயம் என்பது ஆண்டு முழுவதும், 365 நாளும் உழைத்துப் பலன் பெற, கிராமப்புற ஏழை, எளிய விவசாயிகள், ஆண்கள், பெண்கள் உள்பட ஈடுபடும் ஒரு முழு நேரத் தொழில் அல்ல; பருவ மழையைப் பெரிதும் நம்பியிருப்பது. தவிர, மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றம் காரணமாக மிகவும் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகுந்தது. காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ.வின் திட்டம்! அத்தகைய காலங்களில் விவசாயப் பணிகளைச் செய்ய முடியாமல், வறுமையோடு வாழும் நிலையில், விவசாயக் கூலிகளுக்கு ஒரு வகை உதவியாகவும், வருவாய் வழங்கும் திட்டமாகவும், கிராமப்புற மக்களுக்குப் பயன் தரவே, பெரிதும் காங்கிரஸ் பங்குகொண்ட முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியில், பிரதமர் மன்மோகன் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட கிராமப்புற மக்களுக்கான உதவித் திட்டமே ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்”என்ற, கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டமாகும்!
கடந்த சில ஆண்டுகளாக, அத்திட்டத்திற்காக ஒதுக்கும் நிதியைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்தது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி. காந்தியார் பெயரை நீக்கும் ஆர்.எஸ்.எஸ். நிதியைக் குறைத்தும், அத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநில அரசுகளின் பங்கை அதிகப்படுத்தியும், அத்திட்டத்தின் பெயரான ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்” என்பதில் உள்ள ‘‘காந்தி”பெயரை எந்தவித விவாதமும் இன்றி நீக்கிவிட்டு, அத்திட்டத்திற்குப் புதுப்பெயரிட்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்ற நாதுராம் கோட்சே என்ற மராத்தி சித்பவன் பார்ப்பனர் காந்தியாரை, 1948-ல் சுட்டுக் கொன்றான். இப்போது அதைப் போல அண்ணல் காந்தியாரின் பெயரை நீக்கியதன்மூலம், தங்களது வன்மத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது மக்களுக்கு வேதனை தரக்கூடியது மட்டுமல்ல; வெட்கப்படவேண்டிய செய்தியும் ஆகும்!

‘மகாத்மா காந்தி’ பெயர் நீக்கப்பட்டு, அது இனிமேல் ‘‘விக்ஷித் பாரத் கேரண்டி ஃபார் ரோஜ்கார் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்)’’ என்று ஆக்கப்பட்டு ‘VB G RAM G’ என்று மசோதா நிறைவேற்றப்படவுள்ளதாம்! வழக்கமாக எல்லா திட்டங்களுக்கும் சாட்சாத் சமஸ்கிருதப் பெயர்களை வைக்கும் ஒன்றிய அரசு, இதில் ஏன் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கலந்து பெயர் வைத்திருக்கிறது, தெரிகிறதா? திட்டத்தின் பெயர் Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) – “விபி ஜி ராம் ஜி”. அதாவது விக்ஷித் பாரத் என்பது சமஸ்கிருதம்; Guarantee for – ஆங்கிலம்; ரோஜ்கார் – சமஸ்கிருதம்; And – ஆங்கிலம்; அஜீவிகா – சமஸ்கிருதம்; Mission – ஆங்கிலம்; கிராமின் – சமஸ்கிருதம்.‘ராம்’ என்னும் பெயரை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும் சூழ்ச்சி!
எல்லோரையும் ‘ஜி ராம் ஜி’என்று சொல்ல வைக்கவும், அதன் மூலம் இது ராமன் திட்டம் என்பது போல், மக்களிடம் மீண்டும் மீண்டும் “ராமரை“ கொண்டுபோய்ச் சேர்க்கும் மதவாத சூழ்ச்சிக்காகத் தான் ‘காந்தியார்’காவு கொடுக்கப்பட்டு ‘ராம்’முன்னிறுத்தப்படுகிறார். அன்றைக்கும் இன்றைக்கும் ராமனுக்காகப் பலியிடப்படுவது காந்தியாருக்கு ஏற்படும் அவல நிலையா? அந்தோ! மாநில அரசுகளின்மீது சுமையை வைப்பதா? இந்தத் திட்டத்தில் 100%மும் தாங்கள் தரும் நிலையிலிருந்து நழுவி, 40% பணத்தை மாநில அரசுகள் தர வேண்டும் என்று இப்போது ஒன்றிய அரசின் சட்ட முன்வரைவு சொல்கிறதாம். மாநில அரசுகளிடமிருந்து வரி வருவாயைப் பறித்து, அதிலும் உரிய பங்கை முழுமையாகத் தராமல் இழுத்தடிப்பதும், தங்களுக்கு வேண்டுவோருக்கு அள்ளிக் கொடுப்பதுமாக இருக்கும் ஒன்றிய அரசு, நிதிச் சுமையை மீண்டும் மாநில அரசுகளின் தலையில் வைப்பது ஏன்? 100 நாள், 125 நாள்களாக அதிகரிக்கப்பட உள்ளது என்று தேன் தடவப்பட்டிருந்தாலும், உள்ளே அத்திட்டம் அமலாக்குவதற்கு வற்புறுத்திடும் அம்சம் இருக்காது என்றால், இதற்குப் பயன்கிட்டாது!
முந்தைய உறுதியளிப்பு அம்சம், வருகின்ற புதிய மசோதாவில் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது! அப்படியானால், இதன் பயன் என்ன? விக்ஷித் பாரத் பஞ்சாயத்து திட்டத்தின் கீழ் இணையும் கிராமங்களில் மட்டுமே இத் திட்டம் என்பன போன்ற மாற்றங்கள் செய்யப்படவுள்ளனவாம். அதன் கீழ் என்ன சூழ்ச்சி செய்திருக்கிறார்கள் என்பது இனி போகப் போகத் தான் தெரியும்.
ரூபாய் நோட்டில் ‘காந்தியார்’ நீடிப்பாரா?
காந்தியார் மீது 1948 இல் காட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ். வெறுப்பு இன்னும் தொடர்கிறது. தற்போது வரை, அரசு ரூபாய் நோட்டில் காந்தியார் படம் அச்சிடப்பட்டாலும்கூட, அடுத்து அதனையும் நீக்கி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களது படங்கள் கரன்சி நோட்டுகள் அலங்கரித்தாலும், இனி ஆச்சரியப்பட வேண்டியதில்லை இதற்குத் திராவிடர் கழகம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது” என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளாா்.


