மாநிலங்களவையில் “வந்தே மாதரம்”தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது, திமுக எம்.பி திருச்சி சிவா மற்றும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் பேசும் நேரத்தில் மத்திய அமைச்சர் தலையிட்டதை திருச்சி சிவா கடுமையாக எதிர்த்து, இவ்வாறு இடையூறு செய்ய அமைச்சரை எப்படி அனுமதிக்கலாம்? என்று கேள்வி எழுப்பினார்.
திருச்சி சிவா, வடமாநிலங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் புரட்சியாளர்களின் பெயர்கள் எதற்காவது சூட்டப்பட்டுள்ளனவா, வ.உ.சி. பற்றி பேசும் பிரதமர் மோடி அவருக்காக என்ன செய்திருக்கிறார்? என மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வியை முன்வைத்தார். “தமிழ்நாட்டில் நேதாஜி சாலை, திலகர் சாலை, கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை என பல அமைப்புகள் உள்ளன. ஆனால் வடஇந்தியாவில் எங்காவது வ.உ.சிதம்பரனாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளதா?” என்று அவர் கேள்வி எழுப்பினாா்.
மேலும், வரிகொடா இயக்கத்திற்கு முன்பே வரி கொடுக்க மறுத்த கட்டபொம்மனை வட மாநிலங்களுக்கு தெரியுமா?

ராணி லட்சுமிபாயை அனைவரும் பேசுகிறார்கள்; ஆனால் ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கை வெடிவைத்து தகர்த்த குயிலியை எத்தனை பேருக்குத் தெரியும்?
ராணி லட்சுமிபாயை பற்றி மட்டும் பேசுகிறார்கள், ஆனால் வேலு நாச்சியார் அரசை மீட்ட வரலாறு தேசிய பாடப்புத்தகங்களில் இடம்பிடிக்காதது ஏன்?
தேசியத் தலைவர்கள், தமிழர் பங்களிப்பை ஏன் மறைக்கிறார்கள்?
ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை முதலில் மொழிந்தவர், நேதாஜிக்கு மன்னவர் செண்பகராமன் பற்றி ஏன் யாருக்கும் தெரியவில்லை?
சுதந்திர இந்தியாவின் போர்க் கப்பலில் தான் நான் இந்தியா செல்ல வேண்டும் என்று கூறியவர் செண்பகராமன். பத்மாசினி போராட்டம் பற்றி இங்கே யாருக்குத் தெரியும். ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு தெரியுமா? என திருச்சி சிவா கேள்வி எழுப்பினாா்.
இந்திய விடுதலைக்காக 1945ல் நாடு முழுவதும் எழுந்த வெள்ளையனே வெளியேறு முழக்கத்துக்கு முதல் முதலில் குரல் கொடுத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பூலித்தேவன்.
வந்தே மாதரம் விவாதத்தில் முதலில் பேச வேண்டும் என பாஜகவினர் பிடிவாதம் பிடித்ததையும் திருச்சி சிவா விமர்சித்தார். அவை முன்னவர் கூட இல்லாத சூழலில், அரசியல் ஆதாயத்திற்காக விவாதம் திசை திருப்பப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், வெளிநாட்டு தலைவர் வருகையின் போது இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைக்காத மத்திய அரசின் நடத்தை, கூட்டாட்சியின் தரத்திற்கு முரணானது என அவர் கண்டித்தார். திமுக எப்போதும் நாட்டுக்காக போராடிய முன்னோடிகளை கைவிடவில்லை என சுட்டிக்காட்டிய அவர், தேசிய கீதத்துக்கும் வந்தே மாதரத்துக்கும் அரசியலமைப்பு வழங்கிய சம அந்தஸ்தை நினைவூட்டினார். வரலாற்று புறக்கணிப்பை சரிசெய்வதற்காக, இந்தியா தயாரிக்கும் அடுத்த போர்க்கப்பலுக்கு ‘செண்பகராமன்’ என்று பெயர் சூட்ட வேண்டும் என திருச்சி சிவா வலியுறுத்தினார்.


