ஒன்றிய கல்வித் துறையின் பிரநிதியாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி செயல்படுவார்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956 மற்றும் திருத்தப்பட்ட சட்டம் 2012-ன் படி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராகவும் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் பிரதிநிதியாகவும் ஐஐடி சென்னை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி இனி செயல்படுவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை ஐஐடி இயக்குனராக இருந்த பிரகாஷ் ராமமூர்த்தி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐஐடி இயக்குனராக செயல்படும் காமகோடியை மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் உறுப்பினராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே மதுரை தோப்பூரில் அமைக்கப்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தர மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஒரு சில பரிந்துரைத்துரைகளையும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
அதன்படி, சிவகாசி, விருதுநகர் வெடி விபத்தில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க உயர் தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்க வேண்டும் எனவும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்த கூடாது, கழிவுகளை பயோ கேஸாக மாற்றி மருத்துவமனைக்கும், கேன்டீனில் சமைப்பதற்கும் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் வடிகால் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு ஆகியவையும் உருவாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு நிபந்தனை விதித்துள்ள நிலையில் , மேற்கண்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .