கோவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்மையில் கோவையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் கேள்விகளை எழுப்பினார். பின்னர் அவர் நிர்மலா சிதாராமனிடம் மன்னிப்பு கோரிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக எம்.பி. கனிமொழி, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை ஆர்.எஸ்.புரம், காந்தி பூங்கா ரவுண்டானாவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அப்போது சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பலமுனை ஜி.எஸ்.டி. வரியினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து முறையிட்டதற்காக அச்சுறுத்தி, தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்தது பா.ஜ.க.வின் அப்பட்டமான பாசிச போக்கு என குற்றம்சாட்டினார். மேலும், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.