சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறக்க உள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று (10.10.2025) பகல் 12.00 மணியளவில் கூடுதல் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. அணையின் ஒழுங்குமுறை விதிகளின்படி தற்போது வினாடிக்கு 2,000 கனஅடி அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் முழு நீர்மட்டம் 119.00 அடியாகும். 10.10.2025 காலை 10.00 மணியளவில் நீர்மட்டம் 114.15 அடியாக பதிவு செய்யப்பட்டு, அந்நேரத்தில் 6,263 மில்லியன் கனஅடி (மி.கன.அடி) நீர் சேமிக்கப்பட்டிருந்தது. முழுக் கொள்ளளவு 7,321 மி.கன.அடி ஆகும்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை மற்றும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 4,000 கனஅடி அளவில் உபரி நீர் வெளியேற்றப்படுவதன் காரணமாக, சாத்தனூர் அணையிலிருந்து மதியம் 12 மணியளவில் வினாடிக்கு 4,000 கனஅடி வரை கூடுதல் நீர் வெளியேற்றப்படலாம் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்தால், அல்லது மேலே உள்ள அணைகளிலிருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டால், சாத்தனூர் அணையிலிருந்து வெளிவரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, தென்பெண்ணை ஆற்றின் இருபுறக் கரையோர மக்களை எச்சரிக்கையாக இருக்கவும், ஆற்றில் இறங்கவோ அல்லது கடக்கவோ கூடாது என்றும் நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


