Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா தமிழகத்தில் ?? சிக்கலில் திமுக ??

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா தமிழகத்தில் ?? சிக்கலில் திமுக ??

-

- Advertisement -
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா தமிழகத்தில்?? சிக்கலில் திமுக??

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க ஆட்சியில், கொலைகள், கூலிப்படை தாக்குதல்கள், அரசியல் படுகொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு , மது மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாக தி.மு.க அரசு தொடர்ந்து கூறி வந்தாலும், நாள்தோறும் தலைப்புச் செய்திகளில் வன்முறை சம்பவங்களே இடம்பெறுகின்றன. அதிலும் குறிப்பாக, அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கொலைகள் இந்த 4 ஆண்டுகளில் அதிகம் நிகழ்ந்துள்ளன. அதில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை பார்க்கலாம்.

அரசியல் தலைவர்கள் கொலை:

முதலாவதாக, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவரான கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் படுகொலை. கடந்த ஆண்டு (2024) மே-2ம் தேதி திடீரென காணாமல் போன ஜெயக்குமார், 2 நாட்களுக்குப் பிறகு அவரது விசவசாயத் தோட்டத்தில் உடல் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். முன்னதாக ஏப்ரல்-30 அன்று சில காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 8 நபர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் அவர் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். இருந்தபோதிலும் காவல்துறை அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல் இருந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங்

இதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி) தமிழக மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 47) 2024ம் ஆண்டு, ஜூலை 5 அன்று மாலை, சென்னை பெரம்பூர் அருகே உள்ள அவரது வீட்டின் முன்பு 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். 2023 இல் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் என்பவரின் மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. தற்போது சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் கொலைக்குற்றவாளி யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலும், ஜூலை 28, 2024 அன்று ஒரே நாளில் கடலூர் அதிமுக வார்டு செயலாளர் பத்மநாபன் மற்றும் பாஜக சிவகங்கை கூட்டுறவுப் பிரிவு செயலாளர் செல்வக்குமாரும் வெவ்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நடு ரோட்டில் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டனர். இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ) பணியாற்றி வந்த லூர்துசாமி, சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்து புகார் அளித்ததற்காக கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் , அலுவகலத்தில் வைத்தே வெட்டிக்கொல்லப்பட்டார்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்த சமூக ஆர்வலர் டி.பெர்டின் ராயன்(36) கடந்த 2023ம் ஆண்டு தாக்குதலுக்கு ஆளானார். இதேபோல், அதிமுக ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் லாரி மோதி பலியானார். இது திட்டமிட்ட கொலை என பலரும் குற்றம்சாட்டிய நிலையில், சிலர் கைதும் செய்யப்பட்டனர்.

இதில் மற்றொரு முக்கிய நிகழ்வாக, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாஹீர் உசேன், கடந்த மார்ச் மாதம் நடு ரோட்டில் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தான் கொலை செய்யப்படலாம் என்று வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தொழுகை முடித்து வீட்டிற்கு நடந்து சென்றவரை மர்ம கும்பல் கொலை செய்தது. இவரது சம்பவத்தில் காவல்துறை அலட்சியமாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா தமிழகத்தில் ?? சிக்கலில் திமுக ??

அதிகரிக்கும் போதப்பொருள் புழக்கம்:

தமிழக காவல்துறை தொடர்ந்து கஞ்சா வேட்டை, கஞ்சா வேட்டை 2.0, போதைப்பொருள் தடுப்பு என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், போதைப்பொருள் புழக்கமோ அதனால் ஏற்படும் குற்றச்செயல்களோ குறைந்தபாடில்லை. இதனை காவல்துறையின் புள்ளிவிவரங்களே உறுதிபடுத்துகின்றன. உதாரணமாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களைச் சொல்லலாம். தமிழக காவல்துறையின் அமலாக்கப் பிரிவின் (Enforcement Bureau CID) புள்ளி விவரங்களின்படி, போதைக்காக மருந்து மாத்திரைகளை பயன்படுத்தியதாக, பறிமுதல் செய்யப்பட்டது, 2024 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 39,910 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 24,215 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா தமிழகத்தில் ?? சிக்கலில் திமுக ??

பெண்கள்/குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் :

திமுக ஆட்சிக்கு வந்த 2021ம் ஆண்டே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அதற்கு, முந்தைய ஆண்டை விட 16% அதிகரித்துள்ளது. 2020-ல் 404 ஆக இருந்த பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2021-ல் 442 ஆக உயர்ந்தன. 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரே ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 16% , குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் 52% , குடும்ப வன்முறைகள் 21.2% உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் சிறார்களை துன்புறுத்துவோருக்கு எதிராக பதியப்படும் போக்சோ கீழ் 2020-ல் 3,090 வழக்குகள் பதிவான நிலையில், 2021-ல் அது 4,469 ஆக அதிகரித்தது.

இப்படியாக போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு, முதியவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் மற்றும் நாள்தோறும் நிகழும் கொலை , கொள்ளைகள் , கூலிப்படை தாக்குதல்கள் என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாய் உள்ளது. பொது அமைதியை சீர்குலைப்பவர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து வந்தாலும், குற்றச்செயல்கள் அரங்கேறிய வண்ணமே இருப்பதாக பொதுமக்கள் சாடுகின்றனர்.

MUST READ