பிரதமரைச் சந்திக்க ஈபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கீடு
சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய விமான நிலைய முனையம் திறப்பு, சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ளார். இதனையொட்டி, சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் வந்தே பாரத் ரயில்சேவை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி, விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையத்தில் முக்கிய தலைவர்களை சந்திக்க பிரதமர் மோடி 45 நிமிடங்கள் ஒதுக்கியுள்ளார்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், வாய்ப்பு கிடைத்தால் நாளை பிரதமரை சந்திப்பேன் என்றும், நாளை தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க இதுவரை நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடதக்கது.