கேரள மாநிலம் கொல்லத்தில் காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் குதித்து பெண் உயிரிழந்துள்ளாா். காப்பாற்ற சென்ற தீயணைப்பு வீரரும் பரிதாபமாக பலியானாா்.கேரள மாநிலம் கொல்லம் நெடுவத்தூர் என்ற பகுதியில் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருபவர் அர்ச்சனா இவருடைய வீட்டிற்கு இவரது ஆண் நண்பர் சிவ கிருஷ்ணன் நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் இதைத்தொடர்ந்து சிவ கிருஷ்ணன் அர்ச்சனாவை கடுமையாக தாக்கியுள்ளார் என்றும் இதனால் மனமுடைந்த அர்ச்சனா வீட்டிலிருந்த 100 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கொல்லம் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் பல்வேறு மீட்பு பணிகளுக்காக ஈடுபட்டிருந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அர்ச்சனாவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு படையில் இருந்த கொட்டாரக்கரவை சேர்ந்த சோனி குமார் என்பவர் கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அர்ச்சனாவை கயிறு கட்டி மேலே தூக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அந்த நேரத்தில் அர்ச்சனாவின் ஆண் நண்பர் கிணற்றின் கைப்பிடி சுவர் மீது சாய்ந்த படி நின்று கொண்டிருந்திருக்கிறார். எதிர்பாராத விதமாக கைப்பிடி சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்துள்ளது இதில் கிணற்றுக்குள் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படை வீரர் சோனி குமார் அர்ச்சனா மற்றும் ஆண் நண்பர் சிவ கிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
உடனிருந்த தீயணைப்பு படை வீரர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மூன்று பேருமே உயிரிழந்துவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படை வீரர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்ரோஷத்துடன் அரசு பேருந்தை துரத்திய காட்டு யானை.. பதறிய பயணிகள்..!!