சென்னையில் கடந்த 8 மாதங்களில் தங்கம் விலையில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்துடன் வெள்ளி விலை 40 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.

தங்கம் சிறந்த முதலீட்டு காரணியாகவும், சிறந்த சேமிப்பாகவும் பார்க்கப்படுவதால் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு.. தங்கத்தை ஆபரணங்களாக, நாணயங்களாக , தங்க பத்திரங்களாக என பல பரிமாணங்களில் தங்கத்தில் முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதற்கேற்ப தங்கத்தின் விலையும் ஏறு முகத்திலேயே இருந்து வருகிறது. ஜனவரியில் 1 கிராம் 7,105 ரூபாய்க்கும், 1 சவரன் 57,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் 1கிராம் 98 ரூபாய்க்கு இருந்த வெள்ளி இன்றைக்கு ஒரு கிராமிற்கு 137 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜனவரியில் இருந்து செப்டம்பர் மாதம் வரை எட்டு மாத காலத்தில் தங்கம் விலை 37 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் தங்கம் விலை 44 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், நடப்பாண்டில் இந்த 8 மாத காலத்திற்குள்ளாக 37 % அதிகரித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்திருக்கக் கூடிய 50 சதவீத வரியின் காரணமாக இன்றைய தினம் உச்சபட்ச விலையை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் தங்கம் விலை இன்றைய தினம் வரலாறு காணாத அளவில் முதல் முறையாக உச்சபட்சமாக ஒரு சவரன் ரூ.78,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டில் மீதம் இருக்கக்கூடிய 4 மாதங்களிலும் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.