திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு இந்தி பெயர் வைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இந்தித் திணிப்பு விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள மண்டல ரயில்வே அலுவலக நுழைவாயிலில் “கர்தவ்ய த்வார்” என்ற இந்தி பெயர் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது சரியல்ல என்றும், அங்கு தெளிவான தமிழ் பெயர் இடம்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவாயிலில் இந்தி பெயர் இடம்பெற்றிருப்பது, ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளாா். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசு அலுவலகங்களில், தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு இணையாக இந்தி பெயர்களை திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு “பவிஷ்ய நிதி பவன்” என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், குற்றவியல் சட்டங்களுக்கு சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப்பட்டு அவை ஆங்கில வரிவடிவத்தில் பயன்படுத்தப்படுகின்றன என்றும் விமர்சித்தார். அதேபோல், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் “ஜல் சக்தி” என மாற்றப்பட்டதும், மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றத்திலும் இதே போன்று இந்தி முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
தமிழர்களின் சுயமரியாதையை பாதிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், இந்தித் திணிப்பு முயற்சிகளை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். திருச்சியில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் இந்தி பெயர் மாற்றப்படவில்லை என்றால், தமிழர்களின் எதிர்ப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
திமுகவுக்கு சோனியாவின் அவசர தூது! சிதம்பரத்திடம் சொல்லிவிட்ட ரகசியம்! நிரஞ்சன்குமார் நேர்காணல்!


