இந்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உழைக்கும் வர்க்கத்தின் கழுத்தை நெரிக்கும் தூக்குக் கயிறுகள் என விமர்சித்துள்ள சிஐடியு இதற்கு எதிராகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. “தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் உழைக்கும் வர்க்கத்தின் கழுத்தைச் சுற்றும் தூக்குக் கயிறுகள்” எனக் குற்றம்சாட்டிய அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் சிஐடியு அமைப்புகள் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை வடக்கு சார்பில் திருவொற்றியூர் அஜாக்ஸ் மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளதாகவும், வேலைநிலைத்தன்மை, ஊதிய பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். தொழிலாளர்களின் பல ஆண்டுகால போராட்டத்தின் மூலம் பெற்ற உரிமைகளை இந்த சட்டங்கள் பலவீனப்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தொழிலாளர் விரோத கொள்கைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், தொழிலாளர் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தாமல் சட்டங்களை அமல்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பல இடங்களில் இதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்று வருவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் Energy Lockdown வருகிறதா? பேருந்து, ரயில்களை பயன்படுத்த மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
