செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை- மா.சு.
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நாளை அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும். செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை செய்வதற்கான உடல் தகுதியை நேற்று இரவு பெற்றார். இதனையடுத்து காவேரி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்கள், இந்தியா முழுவதும் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரது நேர்மைத் தன்மையை அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. விசாரணையில் இருந்து காத்துக்கொள்ள யாராவது இதய அறுவை சிகிச்சை செய்துகொள்வார்களா?


தமிழகத்தில் நேற்று அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. சென்னையில் அதிக மழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பில்லை. சென்னையில் மழை பெய்து வருவதால் கலைஞர் கோட்ட திறப்பு விழாவை தவிர்க்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் இருந்துகொண்டு மழை பாதிப்புகளை கண்காணிக்குமாறு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் 90 இடங்களில் இன்று மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகிறது. சென்னையில் நேற்று பெய்த மழை 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 22 சுரங்கப்பாதையிலும் போக்குவரத்துக்கு சிரமமின்றி மக்கள் பயணித்துவருகின்றனர். சிறிய அளாவில் மழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படக்கூடிய சைதாப்பேட்டையின் சில இடங்களில் நேற்று பாதிப்பு ஏற்படவில்லை” எனக் கூறினார்.