அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் – செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சென்னையில் அமைச்சர் இல்லம் உள்பட 3 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.

சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். கரூரிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றுவருகிறது. ஐடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்திவருகிறது.


சோதனை குறித்து சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். வருமான வரித்துறை சோதனையாக இருந்தாலும், அமலாக்கத்துறை சோதனையாக இருந்தாலும், எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயார். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டாலும் உரிய விளக்கம் தருவோம். அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளேன். எனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்துவருகிறது. ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம். சோதனை முடிவில்தான் என்ன நோக்கத்தில் வந்துள்ளனர் என்பது தெரியவரும்” என்றார்.


